Thirukkalitruppadiyar – திருக்களிற்றுப்படியார்

॥ சைவ சித்தாந்த நூல்கள் (மெய்கண்ட சாத்திரம்) – VI

1.
அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக
அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர்
எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும்
அல்லார்போ னிற்பா ரவர்.

2.
தம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மிற் றலைப்படுத றாமுணரின் – தம்மில்
நிலைப்படுவ ரோரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.

3.
என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி
என்னறிவி லாரறிக வென்றொருவன் – சொன்னபடி
சொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்
சொல்லக்கே ணானுனக்கச் சொல்.

4.
அகளமய மாய்நின்ற வம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போலுலகிற் றங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலமகல வாண்டனன்காண்
மாணவக வென்னுடனாய் வந்து.

5.
ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே
யோகங்க ளெங்கே யுணர்வெங்கே – பாகத்
தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு.

6.
சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் றன்வசன
மாத்திரத்தே (1)வாய்க்குநலம் வந்துறுமோ – யார்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு.
(1) .வாய்த்தவளம்

7.
இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலமனைத்து நீக்குவதிங் – கென்றால்
உருவுடையா னன்றே யுருவழியப் பாயும்
உருவருள வல்லா னுரை.

8.
கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவரே
(2)யண்டத்தி னப்புறத்த தென்னாதே – யண்டத்தின்
அப்புறமு மிப்புறமு மாரறிவுஞ் சென்றறியும்
எப்புறமுங் கண்டவர்க ளின்று.
(2) .அண்டத்த

9.
அன்றுமுத லாரேனு மாளா யுடனாகிச்
சென்றவர்க்கு மின்னதெனச் சென்றதிலை – யின்றிதனை
எவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

10.
ஒன்றுங் குறியே குறியாத லாலதனுக்
கொன்றுங் குறியொன் றிலாமையினா – லொன்றோ
டுவமிக்க லாவதுவுந் தானில்லை யொவ்வாத்
தவமிக்கா ரேயிதற்குச் சான்று.

11.
ஆற்றா லலைகடற்கே பாய்ந்தநீ ரந்நீர்மை
மாற்றியவ் வாற்றான் மறித்தாற்போற் – றோற்றிப்
புலன்களெனப் போதம் (3)புறம்பொழியி னந்தம்
மலங்களற மாற்றுவிக்கும் வந்து.
(3). புறம்பொழியும்

12.
பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதுங்
காலனையன் றேவிக் கராங்கொண்ட – பாலன்
மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங்
கரணம்போ லல்லாமை காண்.

13.
தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
றாங்களே சட்டவுறங்குவர்க – ளாங்கதுபோல்
ஐய னருட்கடைக்க ணாண்ட தற்பி னப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்.

14.
உள்ள முதலனைத்து மொன்ற (4)வொருவவரில்
உள்ள முருகவந் துன்னுடனாந் – தெள்ளி
உணருமவர் தாங்க ளுளராக வென்றும்
புணருமவ னில்லாப் பொருள்.
(4) .உருகவரில்

15.
நல்லசிவ தன்மத்தா னல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தா னானழியும் – வல்லதனால்
ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்
ஆரெனுங் காணா வரன்.

16.
மெல்வினையே யென்ன (5)வியனுலகு ளோர்க்கரிய
வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் – சொல்லிற்
சிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே (6)செல்வார்
பவகன்ம நீங்கும் படி.
(5). வியனுள்ளார் கட்கரிய: வியனுலகில் ஆற்றரிய
(6). செல்வாய்

17.
ஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே
தீதில் திறம்பலவுஞ் செய்வனவும் – வேதியனே
நல்வினையா மென்றே நமக்குமெளி தானவற்றை
மெல்வினையே (7)யென்றதுநாம் வேறு.
(7). என்றது நான்

18.
வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினா லன்றுகறி யாக்க – இரங்காதே
கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை
வல்வினையே யென்றதுநா மற்று.

19.
(8)பாதக மென்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் – சேதிப்பக்
கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
தண்டீசர் தஞ்செயலாற் றான்.
(8). பாதகமேயென்றும்

20.
செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை
ஐய விதுவமுது செய்கென்று – பையவிருந்
தூட்டி யறுத்தவர்க்கே யூட்டியறுத்தவரை
நாட்டியுரை செய்வதென்னோ நாம்.

21.
செய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டா – ரையா
உழவுந் தனிசு மொருமுகமே யானால்
இழவுண்டோ சொல்லா யிது.

22.
ஆதார யோகம் நிராதார யோகமென
மீதானத் தெய்தும் விதியிரண்டே – யாதாரத்
தாக்கும் பொருளாலே யாக்கும் பொருளாமொன்
றாக்காப் பொருளேயொன் றாம்.

23.
ஆக்கி யொருபொருளை யாதாரத் தப்பொருளை
நோக்கி யணுவி லணுநெகிழப் – பார்க்கில்
இவனாகை தானொழிந்திட் டேகமா மேகத்
தவனாகை யாதார மாம்.

24.
கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயிற்
(9)கொண்டதுவு மப்பரிசே கூறுபடுங் – கொண்ட
இருபொருளு மின்றியெ யின்னதிது வென்னா
தொருபொருளே யாயிருக்கு முற்று.
(9). கொண்டமனும்

25.
ஆக்கப் படாத பொருளா யனைத்தினிலுந்
தாக்கித்தா னொன்றோடுந் தாக்காதே – நீக்கியுடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதார மாம்.

26.
அஞ்செழுத்து மேயம்மை யப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை யாறாகப் பெற்றறிந்தே – யஞ்செழுத்தை
யோதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன்
கேதமற வந்தளிக்குங் கேள்.

27.
காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் – காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் (10)இன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்.
(10). அன்றியே

28.
பேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும்பெருமான் – பேசாதே
எண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பா
லுண்ணின்றும் போகா னுளன்.

29.
ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற விடஞ்சிவமாம் – நாட்டற்று
நாடும் பொருளனைத்து நானா விதமாகத்
தேடுமிட மன்று சிவம்.

30.
பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிருந்து
பற்றைப் பரிந்திருந்து பார்க்கின்ற – பற்றதனைப்
பற்றுவிடி லந்நிலையே தானே பரமாகும்
(11)அற்றமிது சொன்னே னறி.
(11). மற்றுமித சொன்னேன்

31.
உணராதே யாது முறங்காதே யுன்னிற்
புணராதே நீபொதுவே நிற்கி – லுணர்வரிய
காலங்கள் செல்லாத காத லுடனிருத்தி
காலங்கள் மூன்றினையுங் கண்டு.

32.
அறிவறிவாய் நிற்கி லறிவுபல வாமென்
றறிவி னறிவவிழ்த்துக் கொண்ட – வறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா
தாழ்ந்தமணி நாவேபோற் றான்.

33.
ஓசையெலா மற்றா லொலிக்குந் திருச்சிலம்பின்
ஓசை வழியேசென் றொத்தொடுங்கி – லோசையினில்
அந்தத்தா னத்தா னரிவையுட னம்பலத்தே
வந்தொத்தா னத்தான் மகிழ்ந்து.

34.
*சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
(12)சார்புணர்த றானே தியானமுமாஞ் – சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.
* குறள்: மெய்யுணர்தல்
(12). சார்புணர்வு தானே

35.
அன்றிவரு மைம்புலனு நீயு மசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்குஞ் – சென்று
கருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும்
ஒருமகடன் கேள்வ னுனக்கு.

36.
உண்டெனி லுண்டாகு மில்லாமை யில்லையெனில்
உண்டாகு மானமையி (13)லோரிரண்டா – முண்டில்லை
என்னு மிவைதவிர்ந்த வின்பத்தை யெய்தும்வகை
உன்னிலவ னுன்னுடனே யாம்.
(13). ஒன்றிரண்டாம்

37.
தூல வுடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல வுடம்பா முதனான்கு – மேலைச்
சிவமாம் பரிசினையுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் (14)பரிசறுப்பார் பார்.
(14). துரிசறுப்பார்

38.
எத்தனனையோ தத்துவங்க ளெவ்வெவகோட் பாடுடைய
அத்தனையுஞ் சென்றங் களவாதே – சித்தமெனுந்
(15)தூதனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.
(15). தூதுவனைப் போக்கிற்

39.
சாம்பொழுதி லேதுஞ் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதி லேயடைய வாசையறிற் – சோம்பிதற்குச்
சொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட்
செல்லுந் துணையாகுஞ் சென்று.

40.
**வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது – வேண்டினது
**வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.
** குறள்: அவவறுத்தல்

41.
அரண வுணர்வுதனி லவ்வுணர்வை மாற்றிற்
கரணமுங் காலுங்கை கூடும் – புரணமது
கூடாமை யுங்கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமை யுங்கூடும் வந்து.

42.
இன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ்
சென்று தொடருமவன் சென்றிடத்தே – என்றுந்தான்
தீதுறுவ னானாற் (16)சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூ றல்லனோ மற்று.
16. சிவாபதி

43.
அநாதி சிவனுடமை யாலெவையு மாங்கே
அநாதியெனப் பெற்ற வணுவை – யநாதியே
ஆர்த்த துயரகல வம்பிகிகையோ டெவ்விடத்துங்
காத்த லவன்கடனே காண்.

44.
தம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் – தம்மையொரு
பூவாக்கிப் பூவழியா மற்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றை யுளன்.

45.
தன்னைப் பெறுவதன்மேற் பேறில்லைத் தானென்றுந்
தன்னைத்தான் பெற்றவன்றா னாரென்னில் – தன்னாலே
எல்லாந்த னுட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கு மிவன்.

46.
துன்பமா மெல்லாம் பரவசனாய்த் தான்றுவளில்
இன்பமாந் (17)தன்வசன யேயிருக்கி – லென்பதனால்
நின்வசனா யேயிருக்கின் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் றான்.
(17). தன்வசனாய்த் தானிருக்கில்

47.
செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ
டொத்தாரே யோகபர ரானவர்க – ளெத்தாலும்
ஆராத வக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்
பேராமற் செல்வரதன் பின்.

48.
கண்ணுங் கருத்துங் கடந்ததொரு பேறேயுங்
கண்ணுங் கருத்துங் களிகூர – நண்ணி
வடமடக்கி நிற்கும் வடவித்தே போல
உடனடக்கி நிற்பார்கள்கா ணுற்று.

49.
வானகமு மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே யுன்னுமதெ னென்றனையேல் – (18)ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே யன்றோ வதற்கு.
(18). யானகத்து

50.
கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் – சொல்லும்
அகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்கா ணையா
சகமார்க்கத் தாலன்றே தான்.

51.
உள்ளும் புறம்பும் நினைப்பொழியி லுன்னிடையே
வள்ள லெழுந்தருளு மாதினொடுந் – தெள்ளி
அறிந்தொழிவா யன்றியே யன்புடையை யாயிற்
செறிந்தொழிவா யேதேனுஞ் செய்.

52.
***கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்
கண்ணப்ப னொப்பதோ (19)ரன்பதனைக் – கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறித லல்லதுமற்
(20)றியாமறியு மன்பன் றது.
(19). அன்பினை; (20). யாரறியும்
*** திருவாசகம்: திருக்கோத்தும்பி

53.
அவிழ்ந்த துணியி லவிழ்ந்த வவிழை
அவிழ்ந்த மனத்தா லவிழ்க்க – அவிழ்ந்தசடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல்.

54.
சுரந்த திருமுலைக்கே துய்ய (21)சிவ ஞானஞ்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் – சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி வாழ்ந்த
மனமுடையா ளன்பிருந்த வாறு.
(21). சிவஞானம்

55.
அன்பேயென் னன்பேயென் றன்பா லழுதரற்றி
அன்பேயன் பாக வறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
(22)சாற்றும் பழமன்றே தான்.
(22). சார்த்தும்

56.
எல்லா ரறிவுகளின் தாற்பரிய மென்னறிவு
செல்லு மிடத்தளவுஞ் சென்றறிந்தேன் – வல்லபடி
வாதனையை மாற்றும் வகையிதுவெ மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட திது.

57.
வித்துமத னங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம்
வித்துமத னங்குரமு மெய்யுணரில் – வித்ததனிற்
காணாமை யாலதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமை யாலற்றார் பேறு.

58.
ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று
நன்றன்று தீதன்று (23)நானென்று – நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன் றடியன்று தான்.
(23). நானன்று

59.
செய்யாச் செயலையவன் செய்யாமற் செய்ததனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினா – லெய்யாதே
மாணவக வப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமு (24)மற்ற தறி.
(24). அற்றால் அறி

60.
ஏதேனுங் காலமுமா மேதேனுந் தேசமுமாம்
ஏதேனுந் திக்கா சனமுமாம் – ஏதெனுஞ்
செய்தா லொருவலுமாஞ் செய்யாச் செயலதனைக்
(25)செய்யாமற் செய்யும் பொழுது.
(25). செய்வா னொருவனுமாம்

61.
செய்தற் கரிய செயல்பலவுஞ் (26)செய்துபலர்
எய்தற் கரியதனை யெய்தினார்கள் – ஐயோநாஞ்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு.
(26). செய்து சிலர்

62.
இப்பொருள்க ளியாதேனு மேதேனு மொன்றுசெய்த
லெப்பொருளுஞ் செய்யா தொழிந்திருத்தன் – மெய்ப்
பொருளைக் கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம்
உண்டிருப்ப தென்னோ வுரை.

63.
வீட்டிலே சென்று வினையொழிந்து (27)நின்றாலும்
நாட்டிலே நல்வினைகள் (28)செய்தாலுங் – கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேற் றக்கனார் வேள்விசெய்த
மாத்திரமே யாங்கண்டாய் வந்து.
(27). நின்றிடினும்; நின்றிடிலென்
(28). செய்திடிலென்

64.
சிவன்முதலே யன்றி முதலில்லை யென்றுஞ்
சிவனுடைய தென்னறிவ தென்றுஞ் – சிவனவன
தென்செயல தாகின்ற தென்று மிவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.

65.
இன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன்
ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் -இன்றிங்கே
அங்க முயிர்பெறவே பாடு (29)மடியவரார்
எங்குமிலை கண்டா யிது.
(29). அடியவர்கள்

66.
விரிந்துங் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டுந்
தெரிந்துந் தெரியாது நிற்பர் – தெரிந்துந்
தெரியாது நிற்கின்ற சேயிழைபா லென்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று.

67.
ஆதனமு மாதனியு மாய்நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் – சேதனனைச்
சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர்
ஏதமறக் கண்டவர்க ளின்று.

68.
தாமடங்க விந்தத் தலமடங்குந் தாபதர்கள்
தாமுணரி லிந்தத் தலைமுணருந் – தாமுனியிற்
பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.

69.
துரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் – றுரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்
(30)ஆக்குவிப்ப னன்பர்க் கவன்.
(30). ஆக்கியிடும் அன்பர்க்கவன்

70.
ஓடஞ் சிவிகை யுலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் – (31)ஏடெதிர்வெப்
பென்புக் குயிர்கொடுத்த (32)லீங்கிவைதா மோங்புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்.
(31). ஏடெரிவெப்; (32). ஈங்கிவைகாண்

71.
கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலை தவிர்த்தல்
கல்லே மிதப்பாக் கடனீந்தல் – நல்ல
மருவார் மறைக்காட்டின் வாசல்திரப் பித்தல்
(33)திருவாமூ ராளி செயல்.
(33). திருவாகீசன்றன் செயல்

72.
மோக மறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன வவர்தம்மைத் – தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன் (34)தொண்டுதனை
ஏதாகச் சொல்வே னியான்.
(34). தொண்டுகளை

73.
பாய்பரியோன் றந்த பரமானந் தப்பயனைத்
தூயதிரு வாய்மலராற் சொற்செய்து – மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத வூராளுந் தேன்.

74.
அம்மையிலு மிம்மையிலு மச்சந் தவிர்த்தடியார்
எம்மையுமா யெங்கு மியங்குதலான் – மெய்ம்மைச்
சிவயோக மேயோக மல்லாத யோகம்
அவயோக மென்றே யறி.

75.
மன்னனரு ளெவ்வண்ண மானுடர்பான் மாணவக
அன்ன (35)வகையே யரனருளு – மென்னில்
அடியவரே யெல்லாரு மாங்கவர்தா மொப்பில்
அடியவரே யெல்லா மறி.
(35). வகையே யானருளு

76.
உடம்புடைய யோகிகள்தா முற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் (36)தாக்கத் – தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை
இளைப்பதுமொன் றில்லை யிவர்.
(36). தாக்கில்

77.
பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத் துள்ளானை யுள்ளபடி – பேரின்பங்
கண்டவரே கண்டார் கடலுயிர்த்த வின்னமுதம்
உண்டவரே யுண்டார் சுவை.

78.
நங்கையினான் நாமனைத்துஞ் செய்தார்போல் நாடனைத்து
நங்கையினாற் செய்தளிக்கு நாயகனும் – நங்கையினும்
நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிதுகாண்
எம்பெருமா னார்த மியல்பு.

79.
பொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றார்போல்
அந்நிற மண்ணலு மம்பிகையுஞ் – செந்நிறத்தள்
எந்நிறத்த ளாயிருப்ப ளெங்கள் சிவபதியும்
அந்நிறத்தனா யிருப்ப னாங்கு.

80.
தாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர்
தாரத்தோ டெங்குந் தலைநிற்பர் – தாரத்தின்
நாதாந்தத் தேயிருப்பர் (37) நற்றானத் தேயிருப்பர்
வேதாந்தத் தேயிருப்பர் வேறு.
(37). நாற்றானத்தே யிருப்பர்

81.
ஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்க ளொன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் – இன்றுரைக்க
என்னா லியன்றிடுமோ வென்போல்வா ரேதேனுஞ்
சொன்னால்தா னேறுமோ சொல்.

82.
யாதேனுங் காரணத்தா லெவ்வுலகி லெத்திறமு
(38)மாதேயும் பாக னிலச்சினையே – ஆதலினாற்
பேதமே செய்வா யபேதமே செய்திடுவாய்
பேதாபே தஞ்செய்வாய் பின்.
(38). யாதேயும் பாகனிலச்சினையே

83.
நின்றபடி நின்றவர்கட் கன்றி (39)நிறந்தெரியா
மன்றினுணின் றாடன் மகிழ்ந்தானுஞ் – சென்றுடனே
எண்ணுறுமைம் பூதமுத லெட்டுருவாய் நின்றானும்
பெண்ணுறநின் றாடும் பிரான்.
(39). நிறந்தெரியான்

84.
சிவமே சிவமாக யானினைந்தாற் போலச்
சிவமாகி (40)யேயிருப்ப தன்றிச் – சிவமென்
றுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று
புணர்வாரு முண்டோ புவி.
(40). யேயிருத்த

85.
அதுவிது வென்று மவனானே யென்றும்
அதுநீயே யாகின்றா யென்றும் – அதுவானேன்
என்றுந் தமையுணர்ந்தா ரெல்லா மிரண்டாக
ஒன்றாகச் சொல்வரோ வுற்று.

86.
^ஈறாகி யங்கே முதலொன்றா யீங்கிரண்டாய்
மாறாத வெண்வகையாய் மற்றிவற்றின் – வேறாய்
உடனா யிருக்கு முருவுடைமை யென்றுங்
கடனா யிருக்கின்றான் காண்.
^ திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை

87.
உன்னுதரத் தேகிடந்த கீட முறுவதெல்லாம்
உன்னுடைய தென்னாநீ யுற்றனையோ – மன்னுயிர்கள்
அவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ்
செவ்வகையே நின்றசிவன் பால்.

88.
அவனே (41)யவனி முதலாயி னானும்
அவனே யறிவாய்நின் றானும் – அவனேகாண்
ஆணாகிப் பெண்ணா யலிகாகி நின்றானுங்
காணாமை நின்றானுங் கண்டு.
(41). அவனிமுத லாகிநின்றானும்

89.
இன்றுதா னீயென்னைக் (42)கண்டிருந்துங் கண்டாயோ
(43)அன்றித்தா னானுன்னைக் கண்டேனோ – என்றால்
அருமாயை யீன்றவள் தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து.
(42). கண்டிருந்தே; (43). அன்றுதான்

90.
கடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றுங்
கடலளக்க வாராதாற் போலப் – படியில்
அருத்திசெய்த வன்பரைவந் தாண்டதுவு மெல்லாங்
கருத்துக்குச் சேயனாய்க் காண்.

91.
^^சிவனெனவே தேறினன்யா னென்றமையா லின்றுஞ்
சிவனவனி வந்தபடி செப்பில் – அவனிதனில்
உப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால்
அப்படியே கண்டா யவன்.
^^ திருவாசகம்: திருவண்டப்பகுதி

92.
அவனிவனாய் நின்ற தவனருளா லல்ல
தெவனவனாய் நிற்கின்ற தேழாய் – அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லா யிது.

93.
முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினான்
மோகக் கொடியறுக்க முத்தி பழம்பழுக்கும்
ஏகக் கொடியெழுங்கா ணின்று.

94.
அகளத்தி லானந்தக் தானந்தி யாயே
சகளத்திற் றையலுடன் றோன்றி – நிகளத்தைப்
போக்குவதுஞ் செய்தான்றன் பொன்னடியென் (44)புன்றலைமேல்
ஆக்குவதுஞ் செய்தா னவன்.
(44). புன்தலையில்

95.
குற்றமறுத் தென்னியாட் கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத் துடனுறைவர் – முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடினக்
காட்சியுமாய் நிற்பார் கலந்து.

96.
ஆளுடையா னெந்தரமு மாளுடையா னேயறியுந்
தாளுடையான் றொண்டர் தலைக்காவல் – நாளுந்
திருவியலூ ராளுஞ் சிவயோகி யின்றென்
வருவிசையை மாற்றினான் வந்து.

97.
தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்
தூலத்தே நின்று துலங்காமற் – காலத்தால்
தாளைத்தந் தென்பிறவித் தாளை யறவிழித்தார்க்
காளன்றி யென்மா றதற்கு.

98.
இக்கணமே முத்தியினை யெய்திடினு மியானினைந்த
அக்கணமே யானந்தந் தந்திடினும் – நற்கணத்தார்
நாயகற்கும் நாயகிக்கும் (45)நானடிமை யெப்பொழுது
மாயிருத்த லன்றியிலே னியான்.
(45). நந்திக்கும் யானடிமை; நானடிமை நந்திக்கும்

99.
என்னை யுடையவன்வந் தென்னுடானா யென்னளவில்
என்னையுந்தன் னாளாகக் கொள்ளுதலால் – என்னை
அறியப்பெற் றேனறிந்த வன்பருக்கே யாளாய்ச்
செறியப்பெற் றேன்குழுவிற் சென்று.

100.
சிந்தையிலு மென்றன் சிரத்தினுலுஞ் (46)சேரும்வகை
வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் – தந்தவனை
மாதினுட னெத்திறமும் வாழ்ந்திருக்க வென்பதலால்
ஏதுசொலி வாழ்த்துவே (47)னின்று.
(46). சேரும் வண்ணம்; 47. நான்

101.
ஆதார மாகி அருளோடு நிற்கின்ற
சூதான இன்பச் சுகவடிவை – ஓதாமல்
உள்ளவர்கள் கூடி யுணர்வொழிய நிற்பதலால்
தெள்ளவா ராதே சிவம்.

102.
பொருளு மனையு மறமறந்து போக மறந்து புலன்மறந்து
கருவி கரண மவைமறந்த கால மறந்து கலைமறந்து
தரும மறந்து தவமறந்து தம்மை மறட்ந்து தற்பரத்தோ
டுருகி யுருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார்.

[தொடர்புடைய குறிப்புகள்]

* குறள்: மெய்யுணர்தல்
** குறள்: அவவறுத்தல்
*** திருவாசகம்: திருக்கோத்தும்பி
& திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை
&& திருவாசகம்: திருவண்டப்பகுதி

திருக்களிற்றுபடியார் முற்றும்

திருச்சிற்றம்பலம்.

See Also  Practicing Hinduism – Povum Nerum – பூவும் நீரும்