Prayer For Cure From Stammering And Other Speaking Troubles

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!

ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் அக்குறை நீங்கப் பாடவேண்டிய
அருட்பாடல்களிவை.

ஈழநாட்டுப் பௌத்தமன்னன் துணையுடன் தில்லைவாழ் அந்தணருடன் வாது செய்ய வந்த
பௌத்தகுருவுடன் தில்லைவாழ் அந்தணர் சார்பாக மணிவாசகப் பெருமான்
நடத்திய வாதின் போது அருளிய பாடல்களிவை. அவ்வமயம் அருகிலிருந்த
ஈழமன்னனின் ஊமை மகள் மணிவாசகரால் ஒளிபெற்று ஒலிபெற்றுத் தன்
திருவாயாலேயே வினாவிடை போல் பௌத்தகுரு தொடுக்கவிருந்த வாதுப்
பொருளையெல்லாம் தானே பாடி தெளிவித்ததாய் வரலாறு. இதனை
திருச்சாழலின் பாடல்வரிகளூடே அறியலாம். பின்னர் ஈழமன்னனும்
பொய்வழியாம் புத்தம்
விடுத்து சைவம் தழுவியதும் வரலாறு.

மாணிக்கவாசகப் பெருமான் தில்லையில் அருளிய திருச்சாழலெனும் இப்பாடலைக்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடுவோர்
சிவானுஜையான நாமகளின் அருள் பெறுவர். ஊமைக்குழந்தைகள் ஒலிபெற
திருச்சாழலை ஒருமண்டலம் அவர் சார்பில் பாடி நாவில் திருநீறு தடவி
வருதல் நலம் பயக்கும்.

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. ॥ 1 ॥

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. ॥ 2 ॥

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. ॥ 3 ॥

அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. ॥ 4 ॥

See Also  Garbarakshambika Sloka For Marriage And To Get Children And Prevent Abortion In English

தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. ॥ 5 ॥

அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. ॥ 6 ॥

மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. ॥ 7 ॥

கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. ॥ 8 ॥

தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. ॥ 9 ॥

தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. ॥ 10 ॥

நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. ॥ 11 ॥

கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. ॥ 12 ॥

மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. ॥ 13 ॥

See Also  Collection Of Commonly Recited Shlokas In Kannadas

தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ. ॥ 14 ॥

கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. ॥ 15 ॥

நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. ॥ 16 ॥

அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. ॥ 17 ॥

சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. ॥ 18 ॥

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. ॥ 19 ॥

அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. ॥ 20 ॥

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்