அன்னமதில் அமர்ந்திருந்து அருள்புரிபவளே

(குறத்தி மெட்டு)

அன்னமதில் அமர்ந்திருந்து அருள்புரிபவளே
அருங்கலைகள் அனைத்திற்கும் அன்னை நீயே
அன்னமதாய் வடிவெடுத்தோன் அருள் நாயகியே
அன்னையே அம்பிகையே சரஸ்வதி தேவி (அன்ன)

பாரதியைப் பாமாலை புனைந்திடச்செய்தாய்
பாரதியே உன் பாதம் சரணடைந்தேனே
பக்தியுடன் பரவசமாய்ப் பாடிடுவோரைப்
பல்லாண்டு வாழ்ந்திடவே செய்திடுவாயே (அன்ன)

வெள்ளைத் தாமரையில் கொலு வீற்றிருப்பாய்
வெள்ளை உள்ளம் கொள்ளவே செய்திடும் தாயே
கூத்தனூர் உறைகின்ற வீணா வாணியே
கூடிக்கூடி உன் பாதம் பணிந்திடச்செய்வாய் (அன்ன)

வீணையில் கானத்தை எழுப்பியே எந்தன்
வீணான சஞ்சலத்தைப போக்கிடும் தாயே
வித்தைகளைக் கற்றிடவே விழைந்திடுவோரை
விதம் விதமாய் அத்தனையும் கற்றிடச்செய்வாய் (அன்ன)

கண்ணிமைக்கும் நேரத்திலும் காட்சி தரும் தாயே
பண்ணிசைக்கும் திறம் தனையே எனக்களித்திடுவாய்
உண்மையாய் உன்னையே நம்பிடுவோரின்
எண்ணங்களை உளமார நிறைவேற்றிடுவாய் (அன்ன)

See Also  108 Names Of Sri Saraswatya 2 – Ashtottara Shatanamavali In Odia