॥ வடிவுடை அம்மன் அக்ஷர புஷ்பமாலை ॥
சென்னை மாநகரில் வடசென்னையில் அமைந்துள்ள ஊர் திருவொற்றியூர் எனும் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் உறையும் இறைவி அருள்மிகு வடிவுடையம்மனின் மீது பாடல் எழுதக்கனவில் தோன்றியது. ஆகவே ‘ அ ‘ முதல் ‘ வ ‘ வரையிலான எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு அக்ஷர புஷ்ப மாலை பாட முனைந்தேன். அம்மனின் அருட்பார்வையாலும், ஈசனின் அருளாலும் என்னால் இயன்றவரை எழுதி உள்ளேன். பிழைகள் இருப்பினும் ஈஸ்வரியை மனதில் நினைந்து அம்மனின் திருவடியில் சமர்ப்பித்து இதனைப் படிப்பவர்களுக்கு வேண்டுவன நல்க வேண்டுமென்று சிரம் தாழ்த்தி உமையம்மையை வேண்டுகின்றேன். குறைகளைக் களைய முன் வருவோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள விழைகிறேன்.
– சாந்தா ஸ்ரீநிவாசன்
॥ கணபதி காப்பு Lyrics ॥
கொடியிடையுடையவள் கொழுமலரனையவள்
வடிவழகுடையவள் வடிவுடையம்மனின்
வடிவினை வருணித்து வரிகளில் பாடிட
கடிகணபதியே காத்து நீ யருள்வாய்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
அகிலாண்ட நாயகியே
அழுத பிள்ளைக்கு அமுதூட்டிய
அருளுடை அம்பிகையே
அறம்வளர்த்த நாயகி அபிராமவல்லி நீ
அங்கயர்க்கண்ணியும் நீ
அடியேன் உனைப்பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஆதியந்தமிலா ஆதிபராசக்தி நீ
ஆனந்தவல்லியும் நீ
ஆதிசங்கரர் அமைத்த அர்த்த மேருவினில்
ஆட்சி செய்பவள் நீயே
ஆறாத்துயரெல்லாம் ஆற்றி அருள்கின்ற
ஆதிசக்தி நீயே
ஆட்கொளம்மா எனை ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடியம்மையே
இந்திராக்ஷிநீ இமவான் மகளும் நீ
இந்து சீதளை நீயே
இந்த ஜன்மத்தில் இருவினை களைந்திடும்
இந்து மதியும் நீயே
இன்னல் இருள் அகற்றி இன்பம் நல்கிடும்
இச்சா சக்தி நீயே
இருபாதம் சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஈசரொடு பாகமாய் இணைந்திட்ட ஈஸ்வரியே
ஈரேழுலகுக்கும் அன்னை நீயே
ஈராறு கண்ணினனை ஈன்றெடுத்த தாயும்நீ
ஈடிணை அற்றவளும் நீயே
ஈனகுணம்உள்ளவரையும் ஈ எறும்பு மற்றவையையும்
ஈஸ்வரியே காத்திடம்மா
ஈண்டு உனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
உம்பரும் உய்யவே உறுதியுடன் போரிட்ட
உமையம்மையும் நீயே
உந்தன் புகழ் பாடிடவே ஒருக்காலும் உறங்காமல்
உன்மத்தன் ஆனேனம்மா
உன்னழகை வருணிக்க உபமானம் உண்டோ சொல்
உலகத்து நாயகியே
உனை நாடி சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஊனக்கண் உள்ளவர்க்கும் ஒளிக்கண்ணை கொடுத்திடம்மா
ஊழ்வினைகள் தீர்த்திடம்மா
ஊரெல்லாம் உன்பேரை உரக்கவே ஒலித்த்திடுவேன்
ஊஞ்சலில் ஆடிவாம்மா
ஊசிமுனையில் தவம் செய்யும் மாங்காட்டு காமாட்சி
ஊர்பயத்தை விரட்டிடம்மா
ஊன்றிடம்மா என் மனதில் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
எங்கும் நிறைந்திருந்து எங்களைக்காத்திடம்மா
எமபயம் நீக்கிடம்மா
எல்லையில்லா துயரமுறும் ஏழை எளியோரையும்
எழிலுடன் காத்திடம்மா
எண்ணிலா எதிரிகள் எங்கெங்கு வந்தாலும்
எல்லையைக்காத்திடம்மா
எனையாளும் ஈஸ்வரியே ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஏகாந்தமானவளே ஏகாம்பரர் நாயகியே
ஏறுமயிலோன் அன்னை நீயே
ஏழுஸ்வரங்களின் இசையில் மயங்குகின்ற
ஏகாந்த வல்லி நீயே
ஏங்கிடும் எந்தனின் எண்ணிலா நிலைகளை
ஏட்டினில் எழுதினேனம்மா
ஏழை என்மீதிரங்கு ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஐஸ்வர்யம் அளித்திடம்மா
ஐயாற்றில் உறைந்திடும் அறம் வளர்த்தநாயகி
ஐயங்கள் தீர்த்திடம்மா
ஐம்பத்தோர் பீடத்தில் அரசாட்சி செலுத்திடும்
ஐம் எனும் ஒலியினளே
ஐக்கியமானேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஒன்றாகிப்பலவாகி ஒவ்வொன்றுகுள்ளேயும்
ஒளிர்கின்ற ஒளியும் நீயே
ஒட்டியாணம் ஒலிக்கின்ற தண்டை சலங்கையுடன்
ஒய்யாரமாய் வந்திடம்மா
ஒப்புமை இல்லாது ஒளிர்கின்ற ஓவியமே
ஒழுக்கத்தை அளித்திடம்மா
ஒருக்காலும் உனை மறவேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஓங்கார நாயகி ஒம்சக்தித்தாயும் நீ
ஒஜோவதியும் நீயே
ஓங்காரேச்வரரின் ஒளிர்மிகுநாயகி
ஓடோடி வந்திடம்மா
ஓசையாசை எனும் உலகியல் மாயை தனை
ஓட்டினுள் ஒடுக்கிடம்மா
ஓடியுனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஔஷதமும் நீ ஔபாஸநமும் நீ
சௌந்தர்ய நாயகியே
கெளரி சுந்தரி சங்கரி சாம்பவி
சௌபாக்கியம் தந்திடம்மா
பௌர்ணமி பூஜையில் பலன் பல அருளிடும்
கௌமாரியே எனக்கு
மௌனத்தை அளித்திடு ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
கவின்மிகு நாயகி கண்ணனின் சோதரி
கண்ணினைக்காத்திடம்மா
கற்பகவல்லிநீ கண்கண்ட தெய்வம்நீ
கதம்பவனவாசினி நீ
கனக துர்க்கையே கன்யா குமரியே
கனிவுடன் வந்திடம்மா
களித்து எனை ஆதரி ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
காஞ்சி காமாட்சி காசி விசாலாக்ஷி
காத்தே ரட்சிப்பாய்
காமேஸ்வரியே காதம்பரியே
காட்சியே தந்திடுவாய்
காந்திமதியே காளிகாம்பாளே
காலனை விரட்டிடுவாய்
காலடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
சங்கரி சாம்பவி சாரதா தேவிநீ
சகலமும் அளித்திடம்மா
சங்கடம் தீர்த்திடும் சாவித்திரி தேவியே
சடுதியில் வந்திடுவாய்
சண்ட முண்டரை சமரினில் அழித்திட்ட
சாமுண்டீஸ்வரியே
சரணடைந்தேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ஞாலம் போற்றிடும் ஞானஸ்வரூபியே
ஞானப்ரசுன்னாம்பிகையே
ஞானிகள் வலம் வரும் அண்ணாமலையில்
ஞானியாய் உறைபவளே
ஞானேந்திரியங்கள் நலமாய் இயங்கிட
ஞாயிறாய் வந்திடம்மா
ஞானத்தை வேண்டினேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
டம் டம் டம் என டமரு அசைத்திடும்
தாண்டவன் நாயகியே
டண் டண் டண் என தண்டை ஒலித்திட
தண்மதி நீ வருவாய்
டங்கார ஒலிக்கே நாட்டியமாடிடும்
நடன கலா மயிலே
தன்னடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
தக்ஷனின் புதல்வி தாக்ஷாயணி நீ
தர்மத்தைக்காத்திடுவாய்
தவளேஸ்வரி நீ தர்மசம்வர்த்தனி
தரிசனம் தந்திடுவாய்
தங்க ரேகையுடன் லிங்க ஸ்வரூபியே
தண்ணொளி கொண்டவளே
தரித்தேன் உன் குங்குமம் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
நஞ்சுண்டோனின் நலம் மிகு நாயகி
நன்மையே புரிந்திடுவாய்
நாவினில் வாக்கினில் நல்மொழி நல்கி
நற்கதி அளித்திடுவாய்
நானிலந்தனிலே தொடர்ந்திடும் ஊழ்வினை
நல்வினையாக்கிடுவாய்
நானுனைப்பிரியேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
பங்கயச்செல்வி பரிமளவல்லி நீ
பவளவாய்க்குமரியும் நீ
பண்டாசுரனை வதைத்த தேவியே
பயமதை அகற்றிடுவாய்
பனிமலை அரசி நீ பர்வதவர்த்தினி
பாரத்தைப் போக்கிடுவாய்
பதமலர் பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
மணமகன் சுந்தரர் மணமகள் சங்கிலி
மணந்தனை முடித்தவளே
மங்களநாயகி மரகதவல்லி நீ
மாங்கல்யம் தந்திடுவாய்
மகிழடி சேவையில் மனம் மிக மகிழ்ந்த்திட்டே
மக்களைக்காத்திடுவாய்
மறந்திடேன் உந்தனை ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
யானை முகத்தவன் அன்னை பராசக்தி
யாதுமாகி நின்றாய்
யானை பூஜித்த தலமதில் உறைந்திடும்
யோக நாயகியே
யாகம் பல புரிந்த தேவரைக்காத்திட்ட
யக்னேஸ்வரி நீயே
யானுனைப்பிரியேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
ரஞ்சனி நிரஞ்சனி மஞ்சுள பாஷிணி
ராஜராஜேஸ்வரி நீ
ரக்த பீஜனின் ரத்தத்தை உறிஞ்சிய
ராஜமாகாளியும் நீ
ரத்னம் முத்துக்கள் பவளம் பதித்திட்ட
ரதத்தினில் வந்திடுவாய்
ரசித்தேன் உன்னழகை ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
லலிதா தேவியே லாவண்ய ரூபியே
லலித கலாநிலையே
லட்சுமி பதியாம் நாராயணனின்
லயம்மிகு சோதரியே
லங்கேஸ்வரனும் பூஜித்தவராம்
லலாடாக்ஷர் சிவையே
லயித்தேன் உன்னிடம் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே
வள்ளி மணாளர்க்கு வேல் தந்த அன்னையே
வரமதை அளித்திடுவாய்
வல்வினை வந்தெமை வாட்டிடும் போது
வலிமையைத்தந்திடுவாய்
வல்லார் பொல்லார் வஞ்சனை மாற்றிட
வல்லமை தந்திடுவாய்
வந்துனை அடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே