॥ சக்தி தாலாட்டு Lyrics ॥
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
கண்ணான கண்மணியோ
கரும்பான செங்கரும்போ
முத்தோ ரத்தினமோ
மோகனப் புன்னகையோ
முத்துச்சரத் தொட்டிலிலே
முக்கண்ணியே நீ உறங்காய் ॥ 1 ॥
சிங்கார நெத்தியிலே
சிவப்புச்சுட்டி அணிந்த்தாயோ
தங்கமான காலினிலே
தண்டை கொலுசு அணிந்தாயோ
முத்தான மார்பினிலே
முத்துச்சரம் அணிந்தாயோ
கெம்பு பதித்த தொட்டிலிலே
கெளரியே நீ உறங்காய் ॥ 2 ॥
வைரம் போன்ற கைகளிலே
வைரவளை அணிந்த்தாயோ
மடல் போன்ற காதினிலே
பிச்சோலை அணிந்தாயோ
மங்கை உந்தன் கழுத்தினிலே
கருகமணி அணிந்தாயோ
வைரம் பதித்த தொட்டிலிலே
வைஷ்ணவியே நீ உறங்காய் ॥ 3 ॥
கொடி போன்ற இடையினிலே
ஒட்யாணம் அணிந்தாயோ
பட்டான மேனியிலே
பட்டாடை உடுத்தாயோ
எடுப்பான மூக்கினிலே
நத்து புல்லாக்கு அணிந்தாயோ
வைடூரியம் பதித்த தொட்டிலிலே
வைதேகியே நீ உறங்காய் ॥ 4 ॥
சக்தியைக் கொடுக்கவே
சக்தியாய்ப் பிறந்தாயோ
ஞானத்தை அளிக்கவே
வாணியாய்ப் பிறந்தாயோ
கருணையைப் பொழியவே
காமாட்சியாய்ப் பிறந்தாயோ
பவளம் பதித்த தொட்டிலிலே
பார்வதியே நீ உறங்காய் ॥ 5 ॥
ஐஸ்வர்யம் அளிக்கவே
அஷ்டலக்ஷ்மியாய்ப் பிறந்தாயோ
துன்பம் துடைக்கவே
துர்க்கையாய்ப் பிறந்தாயோ
கஷ்டங்கள் போக்கவே
காளியாய்ப் பிறந்தாயோ
மரகதத் தொட்டிலிலே
மரகதமே நீ உறங்காய் ॥ 6 ॥
என் சிந்தை குளிரவே
ஸ்ரீ சக்ரத்தில் அமர்ந்தாயோ
காமேஸ்வரரை மணக்கவே
காமேச்வ்ரியாய்ப் பிறந்தாயோ
அசுரர்களை அழிக்கவே
லலிதையாய்ப் பிறந்தாயோ
கோமேதகத் தொட்டிலிலே
கோமதியே நீ உறங்காய் ॥ 7 ॥
எங்கள் குலக்கொழுந்தாய்
எங்களிடம் பிறந்தாயோ
பால் வடியும் உன் முகத்தைப்
பார்த்தே பசி தீர்ந்திடுவேன்
உன் கருணை விழிகளினால்
கவலைகள் மறந்திடுவேன்
நீலம் பதித்த தொட்டிலிலே
நீலாயதாட்சி நீ உறங்காய் ॥ 8 ॥
ஒளிதரும் உன் கண்களிலே
மை தீட்டி மகிழ்ந்திடுவேன்
சாந்தமான முகத்தினிலே
சாந்துப் போட்டும் இட்டிடுவேன்
என் கண்ணே பட்டிடாமல்
திருஷ்டியும் கழித்திடுவேன்
கனகரத்னத் தொட்டிலிலே
கனக துர்க்கையே நீ உறங்காய் ॥ 9 ॥