॥ சிவார்ச்சனா சந்திரிகை – சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:
சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை
சங்கிதாமந்திரங்களாலாவது, காயத்திரியாலாவது மூன்று முறை பிராணாயாமஞ் செய்து, ஹெளம் நேத்திராப்பியாம் நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கட்டை விரல்களால் கண்களில் திவ்விய முத்திரையை நியாசஞ் செய்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுள்ள மூலமந்திரத்தால் ஜலத்தை நிரீக்ஷணஞ் செய்து (பார்த்து), அதேமந்திரத்தால் தாடனஞ்செய்து (அடித்து), வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அப்பியுக்ஷணஞ் செய்து (தெளித்து), அந்தப் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தால் அங்குசமுத்திரை செய்து, விந்துத்தானத்திலிருந்து கங்கை முதலிய நதிகளுள் யாதானுமோர் தீர்த்தத்தை அகருஷணஞ் செய்து (இழுத்து), உத்பவ முத்திரை செய்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தால் அந்தத் தீர்த்தத்தை ஜலத்தில் விட்டதாகப் பாவனை செய்து, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்து, ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணம் செய்து நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து, வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சத்திமந்திரத்தால் தேனு முத்திரை செய்து, அந்தத் தீர்த்தத்தை அமிர்தமயமாகச் செய்யவேண்டும். பின்னர், சந்தியாதிட்டான தேவதையைத் தியானஞ் செய்யவேண்டும்.
சந்தியானது பிராஹ்மீ, வைஷணவீ, ரௌத்திரீ என மூன்று வகைப்படும். அவற்றுள்,
பிராஹ்மீ தேவதை:
இரத்தமாலை இரத்த வஸ்திரங்களை யுடையவளாயும், சிவந்த வர்ணமுடையவளாயும், சிவந்த அலங்காரத்தால் சோபிக்கப்பட்டவளாயும், அன்ன ஆசனத்திலுட்கார்ந்திருப்பவளாயும், யக்ஞ சூத்திரம் சடைகளைத் தரித்திருப்பவளாயும், நான்குகைகளும், நான்கு முகமும் உடையவளாயும், எட்டுக் கண்களால் அலங்காக்கப் பெற்றவளாயும், உருத்திராட்ச மாலையும், சுருக்கும் வலது கையிலும், தண்டும் கமண்டலமும் இடது கையிலும் தரித்துக் கொண்டிருப்பவளாகவும், பிரமாவைத் தேவதையாக வுடையவளாகவும், பிராஹ்மீயென்னும் பெயருடைய பிராதச் சந்தியா தேவதையானது இருக்கும்.
இந்தப் பிராஹ்மி சந்தி மூன்று வகைப்படும். அவற்றுள், பிராதக் காலத்தில் சில நக்ஷத்திரங்கள் மாத்திரம் இருக்கும் பொழுது சுபாலை என்னும் பெயருடன் ஒரு சந்தியிருக்கும். இது முத்தியைக் கொடுக்கிறதாயும், சாமர்த்திய முடையதாயுமிருக்கும். மற்றொருசந்தி பிராதக்காலத்தில் நக்ஷத்திரங்களில்லாத பொழுது மத்திமாவென்னும் பெயருடன் புத்திமுத்திகளைக் கொடுகிக்றதாயும், ஞானசத்தி சொரூபமாயும், பாலப்பருவத்தை யுடையதாயுமிருக்கும். மற்றொரு சந்தி சூரியனுடைய பாதி மண்டலம் கண்ணுக்குப் புலப்படும் பொழுது பிரௌடாவென்னும் பெயருடன் புத்தியைக் கொடுக்கிறதாயும் கிரியாசத்தி சொரூபமாயும், பாலப்பருவத்தையுடையதாயுமிருக்கும்.
வைஷ்ணவீ தேவதை:
சுவர்ணத் தாமரையில் உட்கார்ந்துதிருப்பவளாயும், வெண்மையான வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளாயும், வனமாலை உபவீதங்கள் தரிக்கப்பட்டு இரண்டு கண்களும், ஒரு முகமும், நான்கு கைகளும் உடையவளாயும், கதை, தாமரைகளை வலது கையிலும், சங்கம் சங்கரங்களை இடது கையிலும் தரித்திருப்பவளாயும், பிராஹ்மி சந்திக்கும் ரௌத்திரி சந்திக்கும் நடுவேயிருக்கும் இந்த வைஷ்ணவீ சந்தி தேவதையானது இரண்டாவது யாமத்தினுடைய நாலாவது பாகத்தில் மூன்று விதமாக இருக்கும். அவற்றுள், முதலாவது சந்தி தேவதையானது முத்தியைக் கொடுக்கிறதாயும் சிறிது தோன்றிய யௌவனத்துடனுமிருக்கும். இரண்டாவது சந்தி தேவதையானது மத்திமமான தருணத்துடுன் புத்தி முத்திகளைக் கொடுக்கிறதாய் வாகீசுவரி சொரூபமாயிருக்கும், வாகீசுவரி – சரஸ்வதி. மூன்றாவது சந்தி தேவதையானது சுவாலை என்னும் பெயருடன் முத்தியைக் கொடுக்கிறதாய் பிரௌடமான யௌவனத்துடனிருக்கும்.
ரௌத்திரி தேவதை:
ரிஷபத்தில் தாமரையை ஆசனமாகவுடையவளாயும், மூன்று கண்களையும், சிரசில், சந்திரனையும், புலித் தோலாடையையும், மேகம்போல் கருமை நிறமான வடிவத்தையும், வலது கையில் திரிசூலம் அக்ஷமாலையினையும் இடதுகையில் அபயத்தையும் சக்தியையும் உடையவளாயுமிருப்பள். இது சாயுங்காலத்து அதிட்டான தேவதையெனப்படும். இந்த ரௌத்திரி சந்தி முன்போல் மூன்றுவகைப்படும். அவற்றுள் முதலாவது சந்தி தேவதையானது சூரியனுடைய கிரணங்கள் இருக்குங் காலத்தில் நான்கு பங்கங்களிலும் சிவந்ததாயும், சிறிது நழுவின யௌவனத்துடனம், தன்னைத் தியானஞ் செய்வோருக்கு முத்தியைக்கொடுப்பதாயும், வாமையென்னும் பெயருடனிருக்கும். இரண்டாவது சந்தி தேவதை பாதிச் சூரியனிருக்கும்பொழுது பாதி நழுவின யௌவனமுடையதாயும், போகமோக்ஷங்களைக் கொடுப்பதாயும், சேஷ்டையென்னும் பெயருடனிருக்கும். மூன்றாவது சந்தி தேவதை சூரியன் அஸ்தமனமான பொழுது யௌவனம் நீங்கினதாயும், போகத்தைக் கொடுக்கிறதாயும், ரௌத்திரியென்னும் பெயருடனிருக்கும்.
இவ்வாறு எல்லாவற்றிற்கும் சாக்ஷியாகவும், பூசிக்கப்படுவதால் விருப்பத்தை நிறைவேற்றுவதாயுமுள்ள ஒன்பது விதமான சந்திகள் சிவசாத்திரத்தில் சிவனால் கூறப்பட்டன.
பிராஹ்மிதேவதை இருதயதாமரையிலும், வைஷ்ணவீ தேவதை, விந்துத்தானத்து நடுவிலும், ரௌத்திரி தேவதை பிரமரந்திலும் இருப்பனவாகத் தத்தமக்குரிய காலங்களில் இந்தத் தேவதைகளைத் தியானிக்கவேண்டும்.
சமயதீக்ஷையுடையாருக்குப் பிராதக்கால சந்தியும், விசேடதீக்ஷையுடையாருக்குப் பிராதக்கால சந்தி மத்தியான சந்திகளும், நிருவாண தீக்ஷையுடையாருக்குப் பிராதக்காலம் மத்தியானம் சாயுங்காலமென்னும் மூன்று சந்திகளும் உரியன.
எவன் சப்தகலாப் பிராசாத மந்திரங்களில் சமர்த்தனான பண்டிதனாக விருக்கின்றானோ, அவன் விந்துவுடன் கூடி சமனை முதலிய மூன்று தானங்களில் இருப்பனவாயும், தாமரை நூல்போல் சூக்குமையாயும், செம்மை, வெண்மை, கருமை என்னும் மூவகை வர்ணங்களை யுடையனவாயும், கிரியாசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி, என்னும் மூன்று சத்திகளைப் பெயராக வுடையனவாயும், உள்ள மூன்று சந்தியா தேவதைகளைப் பிராசாதமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தியானஞ் செய்யவேண்டும்.
எவன் துவாதச கலாப் பிராசாத மந்திரங்களில் புத்தியை நிலைக்கச் செய்கின்றானோ, அவன் யாதொரு சந்தியானது இரவில் எல்லவற்றினும் மேம்பட்டதாக விளங்குகின்றதோ, அந்த நான்காவது சந்தி தேவதையை நாபி முதல் துவாதசாந்த மீறாகவும், துவாதசாந்த முதல் நாபி ஈறாகவும், போக்குவரவு உடையதாய் ரூபமற்றதாகவாவது, கருமை நிறங்கொண்டதாகவாவது தியானிக்க வேண்டும்.
ஞானிகள், சந்திரனுடைய ஒளியானது சந்திரனைப் பற்றியிருப்பது போல், யாதொரு மேம்பட்ட சந்திதேவதையானது துவாதசாந்தத்திலிருக்கும் பரமசிவனைப் பற்றியிருக்கின்றதோ, அத்தகைய மேன்மை வாய்ந்த சிவஞான சொரூபமான சந்தி தேவதையை தியானிக்க வேண்டும்.
உண்மையில் சிவ சத்தி சொரூபமான சந்தியா தேவதையொன்றுதான். அதுவே காலம், அதிகாரி, என்னுமிவற்றின் பேதத்தால் மூன்று வகையாகப் பிரிந்தன. இவ்வாறு செய்யும் சந்தி தேவதையின் தியானமே சந்தியாவந்தனமெனக் கூறப்படும். பிரதானமான இந்தச் சந்தியாவந்தனத்திற்கு மார்ஜனம் முதுலியன அங்கங்களாகும். இவ்வாறு சந்தி தேவதையை உபாசித்த புருடர் சிவபூஜையைத் தொடங்கல் வேண்டும்.