॥ Krishna Song: யாரென்ன சொன்னாலும் அஞ்சாத Tamil Lyrics ॥
பல்லவி
யாரென்ன சொன்னாலும் அஞ்சாத/அஞ்சாதே நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு – ராக
ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு
அருமையென வந்தப் பிறவிகளோ பல
ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின்
அனுபல்லவி
நாரத நாதமும் வேதமும் நாண
நாணக் குழல் ஒன்று ஊதுவான்
நீரதக் கழல் ஆட கோபியரும் பாட
நேர் நேர் என சொல்லித் தானாடுவான் – அந்த
அய்யன் கருணையைப் பாடு
சரணம்
தோலை அரிந்து கனி தூர எறிந்து
வெறுந் தோலைத் துணிந்தொருவன் தந்தானல்லவோ
மேலைப் பிடி அவலை வேணுமென்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தானல்லவோ
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி
கடித்து சுவைத்தொருவள் தந்தாளல்லவோ – இந்த
ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை
நமக்கெதற்கு என்று தள்ளி நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி
(அய்யன் கருணையைப் பாடு)