Sivarchana Chandrika – Thiraviyasuthi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – திரவியசுத்தி ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
திரவியசுத்தி

அஃதாவது, கட்டைவிரல் அணிவிரல்களால் கண்களைத் தொட்டுக்கொண்டு மூலமந்திரத்தால் திரவியங்களைப் பார்த்து ஞானம் கிரியை இச்சை என்னும் மூன்றின் சொரூபமான சூரியன் அக்கினி சந்திரனென்னும் ரூபமான கண்களால் முறையே உலர்ந்தவையாயும், தகிக்கப்பட்டதாயும், அமிருதத்தால் நனைக்கப்பட்டவையாயும் பாவித்துக் கொள்ளல் வேண்டும்.

பின்னர், திரவியங்களுக்குச் சுத்தியுண்டாகும் பொருட்டு அஸ்திரமந்திரத்தை உச்சரித்துப் பதாகா முத்திரையினால் புரோக்ஷித்து, சிற்சத்தி வெளிப்படும் பொருட்டு அஸ்திரமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு நடுவிரலால் தாடனஞ் செய்ய வேண்டும். அதன் பின்னர் வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் எல்லாத்திரவியங்களையும் விசேஷார்க்கிய ஜலத்தாலாவது, சங்கு ஜலத்தாலாவது, தருப்பை புஷ்பம் என்னுமிவற்றைக் கொண்டு அப்பியுக்ஷணஞ் செய்து பிளக்கப்பட்ட கல்லிலிருந்து அக்கினி கிளம்புமாறு போல திரவிய சமூகத்திலிருந்து சித்தாகிய அக்கினியினுடைய தணல்கள் உண்டாகிறதாகத் தியானஞ் செய்துகொள்ளல் வேண்டும். இவ்வாறே நிரீக்ஷண முதலிய நான்கு சுத்திகளால் திரவிய சமூகமானது அசுத்தமான மாயாரூபம் நீங்கப்பெற்றுச் சுத்தமான சிற்சத்தி ரூபமாகவும், சிவ பூஜைக்குரியதாகவும் ஆகின்றது.

பின்னர் சத்தியோசாதமந்திரத்தால் சந்தனத்தையும், வாமதேவ மந்திரத்தால் வஸ்திரத்தையும், அகோர மந்திரத்தால் ஆபரணத்தையும், தற்புருஷமந்திரத்தால் நைவேத்தியத்தையும், ஈசானமந்திரத்தால் புஷ்பத்தையும், இருதயமந்திரத்தால் ஏனைய சிவபூஜா திரவியங்களையும் ஆவரண பூஜைக்குரிய திரவியங்களையும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

பின்னர், எல்லாத்திரவிய சமூகத்தையும் அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணஞ் செய்து கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து, வெளஷடு என்னும்பதத்தை இறுதியினுடைய சத்தி மந்திரத்தால் தேநு முத்திரை செய்துகொண்டு அமிருதீகாணஞ் செய்து சிவனுக்காகக் கற்பிக்கப்பட்ட இந்தத்திரவியங்களனைத்தும் சிவ சொரூபமேயென்று பாவனை செய்து, கந்தம், புஷ்பம், தூப தீபங்களால் இருதய மந்திரம் அஸ்திரமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

See Also  Lakshmi Narasimha Ashtothara Shatha Naamavali In English, Devanagari, Telugu, Tamil, Kannada, Malayalam

பின்னர் தன் சிரசில் அருக்கிய ஜலத்தின் திவலையை அஸ்திரமந்திரத்தால் தௌ¤த்துக் கொண்டு, தன்னுடைய ஆசனத்தில் சிவாசனாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்துப் புஷ்பத்தைச் சாத்தி, தன்னுடைய தேகத்தில் சிவமூர்த்தியை நியாசஞ்செய்து, நெற்றியில் சந்தனத்தைத் தரித்து, சிரசில் புஷ்பத்தைத் தரித்துக்கொண்டு, சுவாகா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் தன்னுடைய சிரசிலேயே அர்க்கியத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு ஆன்மாவினிடத்தில் பசுபுத்தியை நீக்கிவிட்டுச் சிவனைப்போல் நிர்மலமான ஞானக்கிரியா சத்தியையுடையவனாயும் சுத்தனாயுமிருக்கிறேன் நானென்று பாவனை செய்துகொண்டே தன்னைப் பூஜித்துக் கொள்ளல் வேண்டும்.

ஆன்மசுத்தியானது முன்னரே கூறப்பட்டதாயினும் பூஜைக்குக் கருத்தாவாக இருத்தலால் ஏனைய திரவியங்கள் போலவே ஆன்மாவும் பூஜைக்குச் சாதனமாய் விட்டமைபற்றி இவ்விடத்தும் ஆன்மாவிற்குக்கந்த முதலியவற்றால் உபசாம் கூறப்பட்டது.

திரவியசுத்தி முடிந்தது.