॥ சிவார்ச்சனா சந்திரிகை – அனுக்ஞை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அனுக்ஞை
பின்னர் எழுந்திருந்து சிவனைப் பிரதக்ஷிணஞ் செய்து, நிருதி திக்கிலிருக்கும் வாஸ்து பிர்மாவிற்கு வடக்கும், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்கு வாயு கோணமுமான இடத்தையடைந்து, அவ்விடத்தில் கருமை நிறமுடையவரும், கைகளில் தந்தம், அக்ஷமாலை, பாசம், ஈட்டி என்னுமிவற்றைத் தரித்திருப்பவரும், துதிக்கையில் மாதுளம்பழத்தைத் தரித்திருப்பவரும், தெற்கு முகமாக எழுந்தருளியிருப்பவருமான கணபதியை ஆவாகன முதலிய எல்லா உபசாரங்களாலும் பூஜித்து, கணபதியே யான் தொடங்கியிருக்கும் சிவ பூஜையை விக்கினமின்றி நிறைவேற்றித் தரவேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும். அதற்குக் கிழக்குப் பக்கமும், சிவனிருக்கும் இடத்துக்கு வடக்குத் திக்குமான இடத்தில் ஸ்ரீபலம், கமலம், அபயம் வரம் என்னுமிவற்றைத் தரித்திருப்பவளாயும், மூன்று கண்களையுடையவளாயும், சிவசத்தி ரூபமாயும், தெற்கு முகமாக உட்கார்ந்து கொண்டிருப்பவளாயுமுள்ள மகா லக்குமியையும் அவ்வாறே பூஜித்து தாயே சிவனை அருச்சிப்பதற்குரிய திவியங்களின் மிகுதியைச் செய்யவேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.
பின்னர் அதற்குக் கிழக்கும் சிவனிருக்குமிடத்திற்கு ஈசானமுமான இடத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகை, சுப்பிரமணியர், விட்டுணு, பிரமா என்னுமிவர்கள் ரூபமாயும், தௌ¤வான முகத்தையுடையவர்களாயும், யோக பட்டம் தரித்துக்கொண்டிருப்பவர்களாயும், **வியாக்கியானஞ் செய்யும் முத்திரையும், உரத்திராக்க மாலையும், இரு கைகளில் உடையவர்களாயும், வெண்மை நிறமுடையவர்களாயும், தெற்கு முகமாக உட்கார்ந்திருப்பவர்களாயும், உள்ள ஏழு ஆசிரியர்களையாவது, அல்லது சிவன் முதல் தன்னுடைய குரு வரையுமுள்ள எல்லா ஆசிரியர்களையுமாவது அவ்வாறே எல்லா உபசாரங்களாலும் பூஜித்து, சிவன் முதலிய ஆசிரியர்களே தேவரீர் அறிவித்த முறையை அனுசரித்துச் சிவ பூஜையைச் செய்யப் போகின்றேன். அடியேனுக்கு அனுமதி தரவேண்டு மென்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
( ** வியாக்கியானஞ் செய்யும் முத்திரையென்பது சின் முத்திரை. இது பாச மூன்றும் பசுவைவிட்டு நீங்குமென்றும், பாசத்தினின்று நீங்கிய பசுபதியை விட்டு நீங்காது. பதியினுள்ளடங்கியிருக்குமென்றும் உணர்த்துவது.)
குருவினுடைய ஸ்தானத்தில், ஸ்ரீகுரு பாதுகாப்பியாம் நம: என்று சொல்லிக்கொண்டு பாதுகைகளையாவது பூஜித்து கணபதி, இலக்குமி, குரு பாதுகைகளைப் பூஜித்தபின்னர் அனைவரையும் வந்தனஞ் செய்து பூமியில் வைக்கப்பட்ட முழங்கால்களையுடையவனாய் கைகளைக் குவித்து நமஸ்காரஞ் செய்து கொண்டு கணநாதா, தேவியே, குருபாதுகையே, ஜகத்குருவே! கிடைத்த திரவியங்களை வைத்துக் கொண்டு பூஜை செய்யும் அடியேனை தேவரீர் அனைவரும் அனுக்கிரகிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டு ஒரே காலத்தில் அனைவரையும் பிரார்த்திக்க வேண்டும்.
பின்னர் அந்தக் கணபதி முதலிய அனைவரும் அப்பா குழந்தாய் நீ சிவ பெருமானைப் பூஜை செய்வாயென்று அனுக்ஞை செய்ததாகப் பாவித்துக் கொண்டு, ஈசுவரனுக்கு அக்கினி திக்கிலாவது, அல்லது தெற்குத் திக்கிலாவது ருசிரம் முதலிய ஆசனத்திலமர்ந்து தனித்தனி பத்து மாத்திரையுள்ள பூரகம், கும்பம், ரேசகங்களுடன் மூன்று பிராணாயாமஞ் செய்து, தனக்கு விருப்பமான பலத்தைச் சிந்தித்துக் கொண்டு சத்திக்குத் தக்கவாறு சிவனுடைய பூஜையைச் செய்கிறேனென்று சங்கற்பஞ் செய்துகொண்டு பூசையைத் தொடங்கல் வேண்டும்.
அனுக்ஞை வகை முடிந்தது.