॥ சிவார்ச்சனா சந்திரிகை – நமஸ்காரஞ் செய்யுமுறை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
நமஸ்காரஞ் செய்யுமுறை
நமஸ்காரமாவது அட்டாங்கம், பஞ்சாங்கம், திரியங்கம், ஏகாங்கமென நான்கு வகைப்படும். அவற்றுள், அட்டாங்கமானது தண்டமென்றும், தனியென்றும் இருவகைப்படும். அவற்றுள்,
தண்டமென்னும் அட்டாங்க நமஸ்காரமாவது – கால்களிரண்டும், கைகளிரண்டு, மார்பு, சிரசு ஒன்று, வாக்கொன்று மனமொன்று ஆகிய எட்டுறுப்புக்களாலுஞ் செய்யப்படுவது. இது ஒருபக்கம்.
கால்கள், கைகள், மார்புகள், சிரசு, வாக்கு, மனம், புத்தி, பார்வை, யென்னும் இவற்றால் செய்யப்படுவதென்பது மற்றொரு பக்கம். மனத்தால் நமஸ்கரித்தலாவது வேறிடத்தில் மனத்தைச் செலுத்தாது ஒரே மனதுடன் நமஸ்கரித்தலாம். புத்தி என்னுஞ் சப்தத்தால் சிவனுடைய மகிமையான தோத்திரத்தை அநுசந்தானஞ் செய்வதென்பது றிக்கப்படுகிறது. ஆகவே மனம் புத்தியென்னுமிரண்டு பதங்களுக்கும் வேற்றுமை, ஒரே மனதாயிருத்தலும் அநுசந்தானஞ் செய்தலுமேயாம்.
கால்கள், முழங்கால்கள், கைகள், மார்பு, சிரசு, மனம், வாக்கு, பார்வையென்னும் இவற்றால் செய்யப்படுவதென்பது பிறிதொரு பக்கம்.
கால்கள், புயங்கள், சித்தம், மார்பு, சிரசு, மனம், வாக்கு, பார்வையென்னுமிவற்றால் செய்யப்படுவதென்பது வேறொரு பக்கம். இவ்வாறு தண்ட அட்டாங்கம் நான்கு வகைப்படுமாறு அறிந்து கொள்க.
தனி அட்டாங்க நமஸ்காரமாவது – சிரசு ஒன்று, கைகளிரண்டு, காதுகளிரண்டு, மோவாய் ஒன்று, புயமிரண்டு என்னுமிவற்றால் பூமியைப் பொருந்தச் செய்யப்படுவதாகும்.
பஞ்சாங்க நமஸ்காரமாவது – சிரசு ஒன்று, கைகளிரண்டு, முழங்கால்களிரண்டு என்னுமிவற்றால் பூமியைப் பொருந்தச் செய்யப்படுவது.
சிரசு ஒன்று, கைகளிரண்டு, புயமிரண்டு என்னுமிவை முழங்காலில் பொருந்தச் செய்யப்படுவது பஞ்சாங்கமென்பது மற்றொருபக்கம்.
திரியங்க நமஸ்காரமாவது – இரண்டு கைகளையும் சிரசில் குவித்துக்கொண்டு செய்யப்படுவதாகும்.
ஏகாங்க நமஸ்காரமாவது – சிரசால் வணங்கப்படுவதாகும். இடம், காலம், சத்தியென்னுமிவற்றை யநுசரித்து இந்த நமஸ்காரங்களைச் செய்ய வேண்டும்.