॥ சிவார்ச்சனா சந்திரிகை – பூசைசெய்தற்குரிய காலம் ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பூசைசெய்தற்குரிய காலம்
இவ்வாறு விடியுங்காலம், உச்சிக்காலம், சாயங்காலம், நடுராத்திரியென்னும் இக்காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல் மூன்று காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல் இரண்டு காலங்களிலாவது, அல்லது விடியுங்காலத்திலாவது மூன்று நாழிகை வரை பூசை செய்யவேண்டும்.
சங்கிராந்தி கிரகணம், அட்டமி, சதுர்த்தசியாகிய இக்காலங்கள் நீங்கிய ஏனைய நாட்களில் போகத்தை விரும்புகிறவன் இரவில் பூசை செய்யக்கூடாது. அவன் மூன்று கால பூசை செய்பவனாயின், அத்தமன முதல் மூன்று நாழிகைக்குள் சாயங்கால பூசையை முடித்துக்கொள்ளல் வேண்டும். முத்தியை விரும்புகிறவனுக்குக் கால நியமம் கிடையாது. அல்லது போகத்தை விரும்புகிறவனுக்குங் கால நியமங்கிடையாதென்றே கூறலாம். தனக்கு அமைந்த காலத்தில் கூடுமான நேரம் வரை பூசை செய்யலாம். “சத்திக்குத் தக்கவாறு ஆத்மார்த்த பூசைசெய்யவேண்டும்” என்று ஆகமங் கூறுவதால் மேலே குறிக்கப்பட்டவாறு செய்யலாமென்பது கொள்ளக்கிடக்கின்றது.