சிவார்ச்சனா சந்திரிகை – சித்தாந்த சாத்திரபடனம்
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
சித்தாந்த சாத்திரபடனம்
இவ்வாறு சிவதரிசனம் செய்த பின்னர் இல்லத்தை அடைந்து காலத்துக்குத் தக்கவாறு சிறிது நேரமேனும் சித்தாந்தசாத்திரத்தைத் தீக்ஷை பெற்றவருடன், தீக்ஷையில்லாதார் பார்வையின்றி கேட்டல், படித்தல்களைச் செய்தல் வேண்டும். “ஓ சிரேட்டமான முகத்தையுடையவளே! திருடருக்குத் தெரிவிக்காமல் பொருளை எவ்வாறு காக்கின்றோமோ, அவ்வாறே அபத்தர்களுக்குத் தெரிவிக்காமல் அந்த ஞானத்தைக் காத்தல் வேண்டும்” என்னும் வசனத்தால் தீக்ஷை பெறாதவருடைய சம்பந்தத்தை நீக்குதல் வேண்டும் என்பதை அறிந்து கொள்க.
பின்னர், உச்சிப்பொழுதில் விரிவாகவேனும், சுருக்கமாகவேனும், அல்லது அஷ்டபுஷ்பமாத்திரத்தாலேனும் சிவபூசை செய்தல் வேண்டும்.
யாதானும் அசௌகரியத்தால் ஆன்மார்த்தமான தன்னுடைய இலிங்கத்தைப் பூசை செய்யமுடியவில்லையாயின், தனக்குச்சமமான அந்நியனால் பூசிக்கப்படும் இலிங்கத்தில் அஷ்டபுஷ்பத்தினால் மாத்திரம் சுருக்கமாகப் பூசை செய்தல் வேண்டும்.
பிரணவம், மாதிருகை யென்னும் உயிரெழுத்து மெய்யெழுத்துக்கள், மாயை, வியோம வியாபி, சடக்ஷரம், பிராசாதம், அகோரம் ஆகிய ஏழு மந்திரங்களும் பூசைக்குப் பொதுவான மந்திரங்களாகும்.
இவ்வாறு சக்திக்குத் தக்கவாறு சிவபெருமானை அர்ச்சித்து உரியகாலத்தில் உண்ணுதற்காகப் பாகம் செய்யப்பட்டிருக்கும் அன்னத்தில் மேலிருக்கும் அன்னத்தை எடுத்துப் பாதியை சிவபிரானுக்கு நிவேதனம் செய்து, பிறிதொரு பாதியைக் கொண்டு அதிகார முறைப்படி வைதிக சைவ ஓமங்களைச் செய்தல் வேண்டும். வைதிக ஓமமாவது – வைசுவதேவம். சைவ ஓமமாவது – சுல்லிஹோமம். சுல்லி என்பது அடுப்பு.