॥ சிவார்ச்சனா சந்திரிகை – மலஸ்நான விதி ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை:
மலஸ்நான விதி
முறைப்படி ஆசமனம் கரநியாசம் செய்துகொண்டு, பிராணாயாமஞ்செய்து, கைகளில் தருப்பைகளைத் தரித்துக்கொண்டு சூரியன் எந்த அயனத்திலிருகின்றானோ அந்த அயனத்தையும், மாதத்தையும், திதியையும், வாரத்தையும், ஸ்நானஞ்செய்யும் நதியின் பெயரையும் சொல்லிக்கொண்டு ஹே ஈசா! உம்மைப் பூசிப்பதற்காக நான் ஸ்நானஞ் செய்யப்போகின்றேன்; தேவரீரருள் செய்யவேண்டுமென்று ஈசுவரனைப் பிரார்த்தித்துச் சுத்தமான பூமியை எட்டங்குலம்வரையும் ஹும்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் தோண்டி, அதேமந்திரத்தால் மண்ணையெழுப்பி, எழுப்பின மண்ணில் மூலமந்திரத்தாலாவது, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தாலாவது மண்ணையெடுத்து, முதலாவது எழுப்பின மண்ணால் நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தாலேயே தோண்டின இடத்தை மூடிப் பூர்த்திசெய்து, நம: என்னும் பதத்தை உறுதியிலுடைய சிரோமந்திரத்தால் நதி, ஏரி, தடாகமென்னும் இவற்றில் எதில் ஸ்நானஞ் செய்யவேண்டுமோ அவற்றின்கரையில், முன்னெடுத்த மண்ணைச் சுத்தமானவிடத்தில் வைக்கவேண்டும். நதிமுதலியவற்றில் ஸ்நானஞ் செய்யுங்கால் தெற்குக்கரையில் ஸ்நானஞ்செய்தல் உத்தமம். பின்னர் ஹும்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் முன்வைத்திருந்த மண்ணை அப்யுக்ஷணம் செய்து (நீர் தெளித்து), நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய சிரோமந்திரத்தால் அந்த மண்ணிலிருக்கும் வேர் முதலியவற்றைக்களைந்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அந்தமண்ணை மூன்று பாகமாகப் பிரித்து, நாபி முதல் பாதம் வரையுள்ள அங்கங்களை ஒருபாகத்தால் சுத்திசெய்து, இரண்டாவது பாகத்தை ஏழுமுறை அஸ்திரமந்திரத்தால் ஜபித்து, அந்த இரண்டாவது பாகத்தை அஸ்திர தேவதையினுடைய ஒளிகளின் சேர்க்கையால் பிரகாசத்துடன் கூடினதாகப் பவனைசெய்து, அதே பாகத்தால் எல்லா அங்ககளினும் பூசிக்கொண்டு, நீரினுள்ளே சென்று அஸ்திரமந்திரத்தால் நீரைக் கலக்கிக் கட்டைவிரல்களால் காதுகளையும் சுட்டுவிரல்களால் கண்களையும், நடுவிரல்களால் மூக்குகளையும் நன்றாக முடிக்கொண்டு, மூலமந்திரத்துடன் பிரணவத்தை உச்சரித்து இருதயத்தில் பிரகாசிக்கின்ற அஸ்திரமந்திரத்தையுடைய தேகத்தை, அஸ்திர மந்திரத்தினுடைய பிரகாசத்தின் ஸமூகம்போல் பொன்வர்ணங்களாகப் பாவனைசெய்து, நீரில் மூழ்கிச் சக்திக்குத் தக்கவாறு நீரினுள் இருக்க வேண்டும்.
அல்லது மண்ணை இரண்டுபாகமாகப் பிரித்து, அஸ்திரமந்திரத்தால் ஜபிக்கப் பெற்ற ஒரு பாகத்தை எல்லா எங்களிலும் பூசிக்கொண்டு மூழ்கவேண்டும். இது அழுக்கு நிவிர்த்திக்குரிய ஸ்நானம்.
அல்லது பின்னர்க் கூறப்போகும் விதியோடுகூடிய ஸ்நானத்திற்காகவே மண்ணைக் கொண்டுவருதலென்பதும், கஸ்தூரிமஞ்சள், நெல்லிக்கனி முதலியவற்றை அரைத்து அதனாற்றான் அழுக்கு நிவிர்த்திக்குரிய ஸ்நானம் செய்யவேண்டுமென்பதும் மூன்றாவது பக்ஷம்.
அழுக்கு நிவிர்த்தியைக் கூறுமிவ்விடத்தில் சரீரசம்பந்தமான சுக்கிலம், மலம், மூத்திரம், என்னுமிவற்றிற்கும், மூக்கு, முகம், கண், காது, நகம், கால் முதலிய அங்கங்களிலுண்டான சரீரசம்பந்தமான அழுக்குகளுக்கும், சௌசமுதல் அழுக்கு நிவர்த்திக்குரிய ஸ்நானமீறாகவுள்ள கிரியைகளுள் அடங்கிய மண், பல்லுக் குச்சு, கஸ்தூரிமஞ்சள், நெல்லிக்கனி முதலியவற்றின்சம்பந்தத்தாலும், நீராலும் சுத்தி ஏற்படும்.
வாக்கின்கண் உள்ள அழுக்கிற்கு ஸ்நானகாலத்தில் பிரணவ முதலியவற்றின் ஜெபத்தால் சுத்தி ஏற்படும்.
மனத்தின்கணுள்ள அழுக்கிற்கு அஸ்திரமந்திர தியானத்துடன் கூடிய ஸ்நான முதலியவற்றால் சுத்தி ஏற்படும்.
பின்னர் நீரிலிருந்து எழுந்து சூரியனைப்பார்த்து அஸ்திரமந்திரத்தால் சிரசில் நீரைப் புரோக்ஷணஞ் செய்து கரைக்குவந்து மந்திரத்தால் ஆசமனஞ்செய்து, விரக்தனாக இல்லையாயின் வைதிக சந்தியைச் செய்து சுருக்கமாகச் சைவசந்தியையுஞ் செய்யப்படும். விரக்தனான பிராமணரும் நான்காவது வருணத்தவரும் சைவசந்தி மாத்திரந்தான் செய்யவேண்டும்.