॥ சிவார்ச்சனா சந்திரிகை – சிவதீர்த்தங் கற்பிக்குமுறை
॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
சிவதீர்த்தங் கற்பிக்குமுறை
மண்ணை இடது கையில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய இவற்றில் மூன்று பாகமாகப் பிரித்து வைத்துக் கிழக்குத் திக்கிலுள்ள மண்ணை ஏழுமுறை அஸ்திரமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்து, தெற்குத் திக்கிலுள்ள மண்ணை எட்டு முறை ஜெபிக்கப்பட்ட பஞ்சபிரம மந்திரங்களினாலாவது கவசத்தை இறுதியிலுடைய அங்கமந்திரங்களாலாவது அபிமந்திரணஞ் செய்து, வடக்குத் திக்கிலுள்ள மண்ணைப் பத்துமுறை ஜெபிக்கப்பட்ட அஸ்திரமந்திரத்தாலாவது சிவமந்திரத்தாலாவது அபிமந்திரணஞ் செய்த, அஸ்திரமந்திரத்தால் ஜெபிக்கப்பட்ட மண்ணை ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்துடன் நாராசமுத்திரையால் கிழக்கு முதலிய எல்லாத் திக்குக்களிலும் போடவேண்டும். திக்குவிக்கினங்களுக்கதிபனான இந்திர திக்கிலுள்ள மண்ணை, இவ்வாறு போடுவதால் எல்லாத்திக்குக்களிலுமுள்ள எல்லா விக்கினங்களும் நாசமடைகின்றன.
பின்னர், சிவமந்திரத்தால் ஜபிக்கப்பட்ட மண்ணின்பாதியை மூலமந்திரத்தால் நீரில், சிவதீர்த்தமாதற் பொருட்டுப்போட்டு, மற்றொரு பாகத்தைத் தீர்த்தமனைத்துஞ் சிவதீர்த்தத்திற்குச் சமானமாதற்பொருட்டு மூலமந்திரத்தை உச்சரித்துக் கையினாற் சுழற்றி நாலுபக்கத்திலும் வீசவேண்டும். இவ்வாறு கையின்கண் வடக்குத் திக்கில் வைக்கப்பட்ட மண்ணின்பாகம் அமிர்தமயமாய் இருந்து கொண்டு சிவமந்திரத்துடன் நீரில் கரைக்கப்படுவதால் அந்தத் தீர்த்தமானது அமிர்தமயமாகவாகின்றது. இவ்வாறு சிவதீர்த்தமாகச் செய்து சாத்திர விதிப்படி ஸ்நானஞ் செய்யவேண்டும். இந்த விதி ஸ்நானத்திற்காக வைக்கப்பட்ட பிரமாங்கத்தால் செபிக்கப்பெற்ற மண்ணின் பாகத்தை ஸ்நானத்திற்கு முன் எல்லா அங்கங்களிலும் பூசிக்கொள்ளல் வேண்டும். தெற்குத்திக்கில் ஸ்தாபிக்கப் பெற்ற மண்ணின் பாகத்தைத் பூசிக்கொள்ளுதலினால் எல்லாப் பாவங்களும் நாசமடைகின்றன.
ஆகையால் ஷண்முகீகரண முத்திரையால் காது முதலிய இந்திரியங்களின் துவாரங்களை மூடிக்கொண்டு சிவதீர்த்தத்துள் மூழ்கிச் சிவமந்திரத்தைத் தியானஞ் செய்துகொண்டு நீரின் மத்தியில் சக்திக்குத் தக்கவாறு இருக்கவேண்டும். எல்லா அங்கங்களும் மூழ்கும் வண்ணம் நீரின் மத்தியில் ஸ்நானஞ் செய்வது உத்தமம். சரீரத்தில் பாதிமூழ்கும்படி ஸ்நானங் செய்வது மத்திமம். முகத்தை மாத்திரம் கழுவுவது அதமம்.
பின்னர் ஜலத்தினின்றுமெழுந்து இடது வலது கைகளைச் சந்திர சூரியர்களாகவாவது, சத்தி சிவங்களாகவாவது பாவனை செய்து அவ்விரு கைகளாலும் செய்யப்பட்ட கும்பமுத்திரையால் நீரைஎடுத்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சம்கிதாமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்து சிரசில் தெளித்துக்கொண்டு திக்குக்களிலுள்ள விக்கினங்கள் நாசமடைவதற்காக ஹும்பட்என்றும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் நீரைத்திக்குக்களிலும் உபதிக்குக்களிலும்விட்டு அந்தத்தீர்த்தத்தில் சிவ தீர்த்தஞ் சித்திப்பதற்காகச் சிறிது ஜலத்தை விட்டுப் பின்னர்ச் சிவதீர்த்தத்தின் எல்லையில் சம்மாரமுத்திரையால் கையிலுள்ள எஞ்சிய ஜலத்தைவிட்டு சிவதீர்த்தத்தை உபசம்மாரம் செய்யவேண்டும்.
மேலே கூறியவாறு நதி முதலியவற்றில் சென்று ஸ்நானம் செய்யச் சக்தியில்லையாயின், வீட்டில் கோமயத்தால் மெழுகப்பெற்ற சுத்தமானவிடத்தில் பீடத்தில் இருந்துகொண்டு சிவ மந்திரத்தினுச்சாரணத்தால் பரிசுத்தமான குளிர்ந்த ஜலம் நிரம்பப்பெற்ற ஒன்பது அல்லது எட்டு அல்லது ஐந்து குடங்களால் ஸ்நானஞ் செய்யவேண்டும்.
அரசர்கள், பெண்கள் குழந்தைகள், நோயாளிகள், தேசாந்திரஞ் சென்றவர்கள் ஆகிய இவர்கள் குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானஞ் செய்வதற்குச் சத்தி இல்லையாயின், காய்ச்சப் பெற்ற நீரில் ஸ்நானஞ்செய்யலாம்.
சிரசு மூழ்கும்படி ஸ்நானஞ் செய்யச் சக்தி இல்லையாயின் கழுத்துவரை முழுகி ஸ்நானஞ் செய்யலாம்.
பரமசிவனுக்கு அபிஷேககாலத்தில் எவ்வித உபசாரம் விதிக்கப்பட்டிருக்கின்றதோ, அவ்விதமே அரசர்களுக்கும் விதிக்கப்பட்டிருப்பதால், அரசர்கள் சிவ பூஜை செய்வதற்காகச் சொர்ணமயமான பீடத்திலிருந்து கொண்டு சங்கம் வாத்தியம் முதலிய மங்கல கோஷம் முழங்கச் சுவர்ணகும்பங்களால் கொண்டு வரப்பட்ட ஜலத்தால் ஸ்நானஞ் செய்யவேண்டும்.
பின்னர் சுத்தமாயும் மிருதுவாயுமுள்ள ஆடையால் சரீரத்தைத் துடைத்து வெண்மையான இரண்டு ஆடைகளைத் தரித்து ஆசமனம் சகளீகரணம், விபூதிஸ்நானம், திரிபுண்டரதாரணம் என்னுமிவற்றையுஞ் செய்து முடித்துச் சந்தியாதிட்டான தேவதையை வணங்க வேண்டும்.