திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகள் யாவிலும்
ஓதவேண்டிய மங்கலப்பதிகம்
மதுரையில் நுழையும்போதே, மீண்டும் எங்கும் திருநீற்றுக் கோலத்தைக்
காணும்போதே சிவபாதவிருதயருக்கு நிம்மதி திரும்பி விட்டது.
நாவுக்கரசர் தடுத்தும் கேளாமல் பாண்டிமாதேவியாரின் அழைப்பை
ஏற்றுக் கிளம்பிய குழந்தை ஞானசம்பந்தன் மதுரைச் சமணரிடம் என்ன
பாடுபடுமோ என்று அவ்வப்போது அச்சமாயிருந்தாலும் தோணியப்பன்
காத்திருப்பான் என்று திடப்படுத்திக் கொண்டிருந்தார். இதோ உரத்து
முழங்கும் அரன் நாமம் அதை உறுதி படுத்துகிறதே!
‘பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார்தாம் மான சீர்த்
தென்னன் நாடு வாழ வந்தணைந்தார்’ என்றும், ‘புரிசடை அண்ணல் நீறே
பொருளெனக் கண்டோ ம்’ என்றும், ‘நாதனும் ஆலவாயில் நம்பனே
காணும்’ என்றும், ‘போதமாவதுவும் முக்கட் புராணனை அறிவதே’ என்றும்
சோமசுந்தரர் ஆலயத்தருகில் ஒரு கூட்டம் தமிழ் பாடியிருக்கக்
கேட்டு புளகம் பூத்தது அவருக்கு.
‘ஐயன்மீர், அடியேன் சீர்காழியிலிருந்து வருகிறேன். ஞானசம்பந்தரின்
தகப்பன் நான். சிவபாதஹிருதயன். குழந்தை தங்கியிருப்பதெங்கே?’
என்று கேட்டு முடிப்பதற்குள் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. திருநீற்றுத்
தொண்டர்குழாம் அனைத்தும் ‘ஆளுடைப்பிள்ளையின் அருமைத்
தந்தையார் எழுந்தருளியுள்ளார்’ என்று ஓடோடி வந்து தாள்பணிந்து
சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குப் பெருந்திரளாய் அவரை
அழைத்துப் போனது.
முன்பே செய்தி சேர திருஞானசம்பந்தர் திடுக்கிட்டெழுந்தார். ‘அப்பாவா!
அவ்வளவு தொலைவிலிருந்து என்னைத் தேடியே வந்து விட்டாரா!’
வெளியில் ஓடிவர, முதிர்நடையில் பைய வரும் தகப்பனாரைக் கண்டு
கரைந்து நின்றார்.
‘குழந்தாய் எப்படிப்பா இருக்கே, ஏதோ மடத்துக்கே தீ வைத்து
விட்டார்கள் என்று கேட்டு அஞ்சி விட்டோ ம். அதற்குப் பிறகு
பொறுக்காமல் கிளம்பி விட்டேன்’ என்று தம் நலம் வினவி
நின்ற தந்தையாரைக் கண்டு கண்ணீர் பொங்கியது அவருக்கு.
தாள்பணிந்துத் தழுவி நின்றார்.
‘சிவனருளால் நலமப்பா நலம்’ என்று சொல்லும் போதே சீர்காழிக்
குளத்தருகே அவர் அகமர்ஷணம் செபித்து நீரில் மூழ்கியதும், தாம்
அழுது நின்றதும், பொற்கிண்ணமேந்தி உமையவள் பாலூட்டியதும்,
குளித்துவந்த தந்தை, பாலூட்டியது யாரென்று சினக்க, தோடுடைய
செவியனைச் சுட்டியதும் சரசரவென்று மீண்டும் நினைவிலோடியது.
‘அம்மையப்பா! என்னைப் பாலூட்டி ஆட்கொண்டதும் உமையுடன்
பாகம்பிரியா உன் கருணையினை உலகறியச் செய்வதற்கல்லவா!
அத்திநாத்தியென்று காரணப்பொருள் உண்டு, காரியப்
பொருள் இல்லையெனத் தாமும் குழம்பி மன்பதையும் மயங்கி நின்ற
சிந்தனையறுத்ததும் உன் கருணையல்லவா! சம்போ சங்கரா!
அனைத்தும் சிவசக்திக் கூத்தல்லவா! ஒன்றில்லாவிடின்
மற்றொன்றில்லையே!
பசுபாச விமோசினியல்லவா என்னம்மை! சாயுச்சியமான தத் பத
லக்ஷ்யார்த்தமும் அவளே அல்லவா! மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து
அதை அறிவதல்லவா வீடு! அதை உணர்த்தவன்றோ பெண்ணில்
நல்லாளுடன் பெருந்தகை பிணைந்திருப்பதும்!’
கண்ணருவி பாய்ந்தொழுகப் பதிகமொன்றும் அருளினார்.
சேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்:
சிவபாத விருதயர்தாம் முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையுந் தாதையார் எதிர்தொழுவார்
அவர்சார்வு கண்டருளித் திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார்.
இருந்தவத்தோர் அவர்முன்னே இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகைஎம் பெருமாட்டி யுடனிருந்ததே என்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்
மண்ணினல்ல என்றெடுத்து மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால் கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத் தாரணிந்த தமிழ்விரகர்.
>>>>>
திருமணம், மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான
மங்கலப்பதிகமிது.
முழுப்பதிகமும் கீழே:
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. 01
போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே. 02
தொண்டணை செய்தொழில் துயர் அறுத்து உய்யலாம்
வண்டணைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை இருந்ததே. 03
அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே. 04
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே. 05
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே. 06
குறைவளை அதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே. 07
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே. 08
நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர்
அடியொடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே. 09
தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே. 10
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. 11
திருச்சிற்றம்பலம்