நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க!
சுகப்பிரசவம் வேண்டி.
காவிரிக்கரை திருச்சிரபுரத்தில் பிரசவ வேதனையில் தாயை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் பெண்ணொருவர். காவிரியில் வெள்ளப்
பெருக்கேற்பட்டு தாயார் அக்கரையிலேயே தங்கநேர்ந்துவிட, இறைவனே
தாய்வடிவில் வந்து பிரசவம் பார்த்தருளியதாய்த் தலபுராணம் சொல்லும்
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்.
அத்தலம் தந்த மற்றொரு மகான் தாயுமான சுவாமிகள். காலம் 1707 –
1783. எங்கோ திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரி அம்மனின் ஆடையில்
கற்பூரம் தவறி விழுந்து தீப்பிடிக்க, அதனைத் திருச்சியில் தாம்
பணியாற்றி வந்த இடத்திலிருந்தே கண்டணைத்த
யோகீஸ்வரர்.
அவரின் அற்புதமான பாடலொன்றுடன், இத்தலத்தில் ஞானசம்பந்தப் பெருமான்
பாடியருளிய பதிகத்தையும் பார்ப்போம்.
தந்தை தாயும்நீ! என் உயிர்த்
துணையும்நீ! சஞ்சலம் அதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ!
உனை அலால் மற்றுஒரு துணைகாணேன்;
அந்தம் ஆதியும் அளப்பரும்
ஜோதியே! ஆதியே! அடியார்தம்
சிந்தை மேவிய தாயுமா
னவன்எனும் சிரகிரிப் பெருமானே!
திருஞானசம்பந்தர் நல்கிய பதிகம்:
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே. ॥ 1 ॥
கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத்து ஈருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. ॥ 2 ॥
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே. ॥ 3 ॥
துறைமல்குசாரற் சுனைமல்கு நிலத் திடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவன் எங்கள் பெருமானே. ॥ 4 ॥
கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே. 5
வெய்யதண் சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன் சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே. ॥ 6 ॥
வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. ॥ 7 ॥
மலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன்தன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவல வேதம் சொலவலகீதம் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே. ॥ 8 ॥
அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே. ॥ 9 ॥
நாணாது உடைநீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகலுண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்
பேணாது உறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. ॥ 10 ॥
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடு மன்னி வாழ்வாரே. ॥ 11 ॥
திருச்சிற்றம்பலம்