॥ சிவார்ச்சனா சந்திரிகை – அபிஷேக முறை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அபிஷேக முறை
பின்னர், சிவசக்திப்பியாம் நம: என்று சொல்லிக்கொண்டு லிங்கமுத்திரையைக் காட்டி, ஆசனமூர்த்தி மூலமந்திரங்களாலாவது எட்டுப் புட்பங்களாலாவது பூஜித்து, தூப தீபஞ் சமர்ப்பித்து, சுவர்ணம், வெள்ளி, செம்பு, சங்கு, சிப்பி, பசுவின் கொம்பு என்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பெற்ற பாத்திரத்தை வைத்துக்கொண்டு, நாலங்குலப் பிரமாணம் நீண்டதாயும், பசுவின் கொம்பின் நுனியளவு பருமனாயுமிருக்கும் தாரையால் அபிஷேகஞ்செய்து, கை இயந்திரத்திலிருந்தும் உண்டான தைலத்தாலாவது, பசுவின் நெய்யாலாவது தைலக்காப்புச் செய்வித்து, மாப்பொடி முதலியவற்றால் சுத்திசெய்து, சிறிது சூடுள்ள நீராலபிஷேகஞ் செய்து, சிரசில் புஷ்பத்தை வைத்துப் பஞ்சகவ்வியம், கலவாத பஞ்சாமிருதம், பழச்சாறு, கலந்த பஞ்சாமிருதமென்னுமிவற்றை இடையிடையே முறையே சிரசு, சிகை, நேத்திரமென்னும் மந்திரங்களை யுச்சரித்துக்கொண்டு புஷ்பம், தூபம், தீபம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்தலுடன் அஸ்திர மந்திரத்தால் மணியடித்துக்கொண்டு அபிஷேகஞ் செய்ய வேண்டும்.
இவ்வாறே பழ ஜலம் முதலியவற்றாலும் அபிஷேகஞ் செய்ய வேண்டும். பழ ஜலமாவது, தோலில்லாத பலா, தென்னை, தோலுடன் கூடின மாதுளம்பழம், கொய்யாப்பழம், சுரபுன்னை, எலுமிச்சம்பழம், நாரத்தம்பழம், மாம்பழம், வாழைப்பழம் என்னுமிவற்றுடன் கலந்த ஜலமாகும்.
பீஜோதகமாவது யவம், நீவாரம், நெல், பயறு, வெண்கடுகு, வாசனாதிரவியம், சுவர்ணம், சம்பாநெல்லு என்னுமிவற்றுடன் கூடின நீராகும்.
இவற்றாலபிஷேகஞ்செய்து மூலமந்திரத்திற்குரிய பீஜாக்கரத்தால் கந்தம், புஷ்பம், தூபம், தீபங்களைக்கொண்டு அருச்சிக்க வேண்டும்.
இரத்தினோதகமாவது, படிகம், நல்முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், புஷ்பராகம், கருடப்பச்சை, இந்திர நீலக்கல் என்னுமிவற்றுடன் கூடியநீர். இதனாலபிஷேகஞ் செய்து உயிரெழுத்து மெய்யெழுத்துக்களென்னும் மந்திரத்தால் கந்த முதலியவற்றைக் கொண்டு அருச்சிக்க வேண்டும்.
கந்தோதகமாவது, சந்தனம், அகில், கஸ்தூரி, குங்குமப்பூ, கற்பூரம், மனோசிலை, ஏலம், கீழாநெல்லி, தக்கோலம், லவங்கம், விலாமிச்சம்வேர் செண்பகமொட்டுப்பொடி என்னுமிவற்றுடன் கூடின நீராகும். இதனாலபிஷேகஞ்செய்து கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியமென்னுமிவற்றை நாமமந்திரத்தால் சமர்ப்பிக்க வேண்டும்.
புஷ்போதகமாவது, சண்பகம், மல்லிகை, தாழம்பூ, பாதிரி, முல்லை, சுரபுன்னை, நந்தியாவர்த்தம் ஜாதி (பிச்சி) மந்தாரம், அலரி, தாமரை, நீலோத்பலம், கிரிமல்லிகை என்னுமிவற்றுடன் கூடினதாயும், வெட்டிவேர் முதலிய வேருடன் கூடினதாயும் உள்ள நீராகும். இதனாலபிஷேகஞ் செய்து சிவமந்திரத்தால் கந்தம், புஷ்பம், தூபம், தீபம் என்னுமிவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் நாமமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சுத்தான்னத்தால் மெதுவாக அபிஷேகஞ்செய்து லிங்கத்தின் நாலுபக்கத்திலுமுள்ள அந்த அன்னத்தை லிங்கத்தின் சொரூபம் போல் செய்து கந்தம், புஷ்பம், தூபம், தீபம், பாயசம் என்னுமிவற்றையும், தாம்பூலம் முதலியவற்றையும் சமர்ப்பித்து, அந்த அன்னத்தை நீக்கிச் சுத்தஞ்செய்து, லிங்கத்தின் சிரசில் மூலபீஜாக்கரத்தை நியாசஞ்செய்து கந்தம், புஷ்பம், தூபம், தீபங்களைச் சமர்ப்பித்துப் பஞ்சப்பிரம்ம மந்திரங்களால் துடைத்துத் தேனுமுத்திரை செய்யவேண்டும். இந்த அன்னாபிஷேகமானது அபமிருத்துவை விலக்கும். இன்னும் ஆயுள், ஆரோக்கியம், அரசு, தேசம் என்னுமிவற்றின் விருத்தியையுஞ் செய்யும். எல்லாவசியத்தையும் உண்டுபண்ணும். சர்வ சாந்தியையுஞ் செய்யும்.
பின்னர் ஜலத்தால் பூஜை செயயவேண்டும். எவ்வாறெனில், நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திபெற்ற சுத்த ஜலத்தை சுவர்ணம், வெள்ளி, செம்பு, யாகத்திற்குரிய விருக்ஷங்கள் என்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நிரப்பி அந்த ஜலத்தின் மத்தியில் லிங்கத்தை வைத்து அருகு, எள்ளு, அக்ஷதைகளைச் சமர்ப்பித்து கந்தம், புஷ்பம், தூபம், தீபங்களுடன் அருச்சிக்க வேண்டும்.
பின்னர் லிங்கத்தை எடுத்துத் துடைத்து முன்போல் அபிஷேகவேதியில் வைத்து இளநீர் கருப்பஞ்சாறுகளால் இயன்ற வரை அபிஷேகஞ் செய்ய வேண்டும்.