Sivarchana Chandrika – Abishega Palan In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அபிஷேக பலன் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அபிஷேக பலன்

சிவரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ளாரும் சிவபதத்தை யடைவர். கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம். பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும். தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும். தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்குவதுடன் அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும். கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய உலகத்தையடையலாம். பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீரை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தை யடையலாம். வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை யடையலாம். புஷ்பத்தோடு கூடிய நீரால் அபிஷேகஞ் செய்தால் சூரியலோகத்தையடையலாம். சுவர்ணத்தோடு கூடிய நீரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும், இரத்தினத்தோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும், தருப்பையோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும் அடையலாம்.

குறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் ஆடையால் பரிசுத்தமான சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும். இவ்வாறு செய்தாலும் எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை யடைதல் கூடும்.

See Also  1000 Names Of Sri Guhya Nama Uchchishta Ganesh Na – Sahasranama Stotram In Tamil