Sivarchana Chandrika Antharyagam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அந்தரியாகம் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அந்தரியாகம்

அஃதாவது இருதயத்துள் சிவனையருச்சிக்கத்தக்க திவ்ய இரத்தினமயமான மண்டபத்தை மனத்தால் கற்பித்து அம்மண்டபத்தில் சிவனையருச்சிப்பதற்கு உபயோகமான சகல திரவியங்களையும் மனத்தால் கொண்டுவைத்து அந்தத்திரவியங்களைச் சுத்திசெய்து துவாதசாந்தத்திலிருக்கும் சந்திரமண்டலத்திலிருந்து ஒழுகுகின்ற அமிருததாரையினால் அருக்கிய பாத்தித்தை நிரப்பி அதன் சுத்தியையுஞ் செய்து துவாரபால பூஜை செய்து பின்னர்க் கூறப்படுமுறையில் விநாயகர் குரு என்னுமிவர்களை நமஸ்கரித்தல் அனுக்ஞை பிரார்த்தனை என்னுமிவைகளை முன்னிட்டு நாபியிலிருக்கும் சொர்ணமயமான வருணத்தையுடைய கிழங்கிலிருந்து உண்டான நீலவர்ணமான தாமரைத் தண்டையும், மிகவும் வெண்மையான வருணத்தையுடைய எட்டுத் தளங்களையும் உடைய இருதயகமலத்தின் கர்ணிகையிலிருக்கும் குண்டலினி சத்தியாகிய பிந்துசொரூபமான பீடத்தில் கட்டைவிரல்களால் காதுகளை மூடுதலாலறியப்படும் நாதரூபமாயும், தீபத்தின் சிகையின் வடிவம்போல் வடிவத்தையுடையதாயும் இருப்பதாக லிங்கத்தைத் தியானித்து பின்னர்க் கூறப்படுமாறு பீடத்தில் ஆதாரசத்தி முதல் சிவசத்திஈறாக சிவாசனத்தை அருச்சித்து இலிங்கத்தில் சிவமூர்த்தியையும் வித்தியாதேகத்தையும் அருச்சித்து அதில் ஆவாகனமுதலிய கிரமமாகப் பரமசிவனைத்தியானித்து உள்ளே செய்யக்கூடிய சமஸ்காரங்களாலருச்சித்து துவாதசாந்தத்திலிருக்கும் மிகுதியான அமிருததாரையால் அபிஷேகஞ்செய்து ஆடையாபரண முதலியவற்றாலும் வைராக்கியமாகிய சந்தனத்தாலும் அலங்கரித்து கொல்லாமையாகிய புஷ்பத்தை அர்ப்பணஞ் செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு கொல்லாமை, இந்திரியநிக்கிரகம், பொறுமை, தானம், ஞானம், தபசு, சத்தியம், அன்பு என்னும் எட்டுப் புட்பங்களாலும் அருச்சிக்க வேண்டும்.

பின்னர் மனமென்னும் பாத்திரத்தில் பிராணனென்னும் அக்கினியையும், அகங்காரமென்னும் தூபச்சுவாலையையும் கற்பித்து தூபத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். சிவஞானத்தையே தீபமாகக் கற்பித்துச் சமர்ப்பிக்க வேண்டும். விடயங்களினின்றும் திருப்பப்பட்ட மனதை நைவேத்தியமாகப் பாவித்து சமர்ப்பிக்க வேண்டும். சுழுமுனையின் மார்க்கமாகப் பிராணனுடைய போக்குவரவை ஜபமாகப் பாவிக்கவேண்டும். பிருதிவி முதலிய ஐந்து மண்டலங்களின் தாரணையினால் ஸ்திரமாகச் செய்யப்பட்ட சதாசிவருடைய அவயவஙகளைத் தியானத்தால் செய்யப்பட்ட அந்தந்த அவயவத்திற்கு உரியதான ஆபரணங்களாலலங்கரிக்க வேண்டும். சிவனே நானென சிவசாமயத்தைப் பாவித்துச் சிவனிடம் தன்னை நிவேதனஞ் செய்யவேண்டும்.

See Also  Aghora Murti Sahasranamavali Stotram 2 In Tamil

அல்லது அபிஷேகஞ் செய்தபின்னர் கந்தம், சப்தம், பரிசம், உருவம், இரதமென்னும் தன்மாத்திரைகளை சந்தனம், புஷ்பம், தூபம் தீபம், வைவேத்தியங்களாகத் தியானித்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்கு முறை வருமாறு:-

முன்னர் மூலமந்திரத்தை உச்சரித்து ஹ்லாம் சத்தியோஜாதாயசிவாய கந்ததன்மாத்திராத்மகம் சந்தனம் சமர்ப்பயாமி, ஹெளம் ஈசானாயசிவாய சப்ததன்மாத்திராமகம் புஷ்பம் சமர்ப்பயாமி, ஹ்யைம் தத்புருஷாய சிவாய பரிசதன்மாதிராத் மகம் தூபம் சமர்ப்பயாமி, ஹ்ரூம் அகோராய சிவாய ரூபதன்மாத்திராத்மகம் தீபம் சமர்ப்பயாமி, ஹீம் வாமதேவாய சிவாய இரசதன் மாத்திராத்மகம் நைவேத்தியம் சமர்ப்பயாமி யென்று சொல்லிக்கொண்டு பாவனை செய்ய வேண்டும்.

பின்னர் கைகழுவுதல் முகவாசங்கொடுத்தல் என்பவற்றைப் பாவித்து சத்துவ இரஜஸ்தமோ குணாத்மகம் தாம்பூலம் சமர்ப்பயாமி என்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனை செய்ய வேண்டும்.

பின்னர் ஆரத்தி செய்து, அதன் பின்னர் புத்தியிலிருக்கும் வாசனாரூபமான தருமாதி எட்டுக் குணங்களும் கண்ணாடி முதலிய எட்டு மங்கள திரவியமாயும், பலவிதமான மனோவிருத்திகளை நிருத்த ரூபமாயும், சத்தத்தை வாத்திய ரூபமாயும், தொனியைக் கான ரூபமாயும், சுழுமுனா நாடியைத் துவஜமாயும், பிராணன் முதலிய வாயுக்களைச் சாமரங்களாயும், அகங்காரத்தை யானையாயும், தேகத்தைத் தேராயும், மனதைக் கடிவாளமாயும், புத்தியைச் சாரதியாயும், ஏனையவெல்லாம் உபரணங்களாயும் என்னால் தயார் செய்யப்பட்டனவென்று தியானிக்க வேண்டும்.

இவ்வாறு தன்னைச் சார்ந்த புத்தி, மனம், பிராணன் முதலியவற்றைச் சிவபூஜைக்கு உபகரணங்களாகச் சமர்ப்பித்து பின்னர்க் கூறப்படுமாறு ஆவரணபூஜையையும் அப்பொழுது செய்யவேண்டும்.

அதன்பின்னர் பிரதக்ஷிண நமஸ்காரங்களால் சிவனை அனுக்கிரகஞ் செய்வதற்கு நோக்கமாக இருக்கும்படி செய்து அவருடைய ஆணையால் அக்கினி காரியத்தைச் செய்ய வேண்டும்.

See Also  Shiva Suprabhatam In Tamil