Sivarchana Chandrika – Dhoobathiraviyangal In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தூபத்திரவியங்கள் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தூபத்திரவியங்கள்

தூபத்திரவியம் வருமாறு:- பச்சைக்கற்பூரம், அகில், சந்தனம், தக்கோலம், ஜாதிக்காய், இலவங்கம், குந்துருக்கம்பிசின், ஜடாமாஞ்சை, முஸ்தா என்னும் கோரைக்கிழங்கு என்னும் இவற்றின் சூர்ணத்தாற் செய்யப்பெற்ற தூபத் திரவியத்திற்குயக்ஷகர்த்தமம் என்பது பெயர்.

சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், ஏலம், இலவங்கம், இலவங்கத்தின் தோல், அதன் இலை, அதன் புஷ்பம் குந்துருக்கம்பிசின், ஜடாமாஞ்சை யென்னுமிவற்றின் சூர்ணமானது பிராஜாபத்தியம் எனப்பெயருடையது.

சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, இலவங்கப்பட்டை, குந்துருக்கும்பிசின், சர்க்கரை, கோரைக்கிழங்கு என்னுமிவற்றின் சூர்ணம் விஜயமெனப்படும்.

பச்சைக்கற்பூரம், கறுப்பு அகிற்கட்டை, குருவேர், குங்குமப்பூ, குந்துருக்கம், துருஷ்கம் என்னும் கஸ்தூரி, தாமரைத்தண்டு, சந்தனப்பொடி யென்னுமிவற்றின் சூர்ணம்முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டுப் பாகமான தேனுடன் சேர்க்கப்பட்டுச் சீதாம்சு எனப்படும்.

சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குந்துருக்கம்பிசின், கீழாநெல்லி, குங்கிலியம், கோரைக்கிழங்கு என்னுமிவற்றின் சூர்ணமானது கலியாணமெனப் பெயருடையதாகும்.

சந்தனம், அகில், கஸ்தூரி, கோரைக்கிழங்கு, குந்துருக்கம்பிசின் என்னுமிவற்றின் சூர்ணம் அமிர்தமெனப்படும்.

தக்கோலம், கமுகம்பூ, பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய், இலவங்கமென்னுமிவற்றின் சூர்ணம் சுகந்தமெனப்படும்.

இவ்வாறு, வெவ்வேறு வகையான பெயரால் சிரசித்தமான தூபத்திரவியங்கள் பலவுள.

இவ்வாறு சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கீழாநெல்லி, குங்கிலிய மென்னுமிவற்றுடன் நெய், தேன் கலந்த தூபத்திரவியங்களும், சந்தனம, அகில், பச்சைக்கற்பூரம், கீழாநெல்லி என்னுமிவற்றின் சூர்ணத்துடன் சர்க்கரை, நெய், தேன் என்னுமிவை கலந்த தூபத் திரவியங்களும், குங்குமத்தினின்றும் முறையே ஒன்று, நான்கு, ஆறு, எழு, பாகமுடைய பச்சைக்கற்பூரம், அகில், சந்தனம், பிசின்பொடியென்னுமிவையும், முறையே ஒன்று, இரண்டு, மூன்று, பங்குடைய அகில, பிசின், சந்தனம் என்னுமிவற்றின் பொடியுடன் சிறிதுதேனும், பச்சைக்கற்பூரமும் சேர்த்து ஒரு தூபத் திரவியமும் தூபத் திரவியங்களெனப்படும்.

See Also  Tara Stotram Athava Tara Ashtakamin Tamil

அகில், சந்தனம், விலாமிச்சைவேர் என்னுமிவற்றுடன் தேனைச் சேர்த்தல் ஒரு தூபத்திரவியமாகும். நெய்யுடன் கூடின கீழாநெல்லி, சந்தனப்பொடி யென்னுமிவையும், நெய்யுடன்கூடின சர்க்கரை, வில்வஇலை யென்னுமிவற்றின் பொடியும், குங்கிலியப்பொடியும், ஒன்றுங்கலவாத குங்கிலியம், பிசின், சந்தனம், அகில், சௌகந்திகம் முதலிய வாசனைத்திரவியங்களுள் யாதானுமொன்றன் பொடியும் தூபத்திரவியமாகு மென்றறிந்து கொள்க.

அவற்றுள் ஒன்றுங்கலவாத தனிக்குங்கிலியத் தூபம் ஏழு பிறவிகளிற் செய்யப்பெற்ற பாவங்ளை போக்கும். சந்தன தூபம் எல்லாப் பாவங்களையும் போக்கும். சௌகந்திகதூபம் எல்லாக்காரியங்களையுஞ் சாதித்துத் தரும். கரிய அகிலின்தூபம் எல்லாப் பாவங்களையும் போக்கும். வெண்மையான அகிலின் தூபம் முத்தியைக் கொடுக்கும். அரக்கு, கஸ்தூரி யென்னுமிவை சேர்ந்த தூபம் நான்கு வேதங்களையும் அத்தியயனஞ் செய்யும் நல்ல பிராமணப் பிறவியைத்தரும். நெய் சேர்ந்த குங்கிலிய தூபத்தைப் பதினைந்து நாட்கள் சமர்ப்பித்தால் ஆயிரங்கோடி கற்பகாலம் சிவலோககத்திலுள்ள போகத்தையும், சக்கிரவர்த்தியின் பிறப்பையும் தரும். எருமை நெய்யால் செய்யப்பட்ட குங்கிலியதூபம் இரண்டாயிரம் வருஷம் பலனைத்தரும். பச்சிலை மரப்பொடியுடன் கூடின குங்கிலிய தூபம் சிவசாயுஜ்யத்தைக் கொடுக்கும். ஈசான முதலிய ஐந்து முகங்களினும் முறையே மல்லிகை, கரியஅகில், வெள்ளைஅகில், சௌகந்திகம், குங்கிலியம் என்னுமிவற்றின் தூபங்கள் சிறந்தனவாகும். இவ்வாறு தூபோபசாரம் சமா¢ப்பித்து பின்னர்த் தீபோபசாரம் சமர்ப்பிக்க வேண்டும்.