Sivarchana Chandrika – Lingasuththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – லிங்க சுத்தி ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
லிங்க சுத்தி

பின்னர் லிங்கசுத்தி செய்யவேண்டும். அதன் முறை வருமாறு:- கருப்பக் கிரகத்திலிருக்கும் ஈசுவரனிருக்கக்கூடிய பெட்டகத்தைத் திறந்து, அந்தப் பெட்டகத்திற்கு முன்னிருப்பவராயும், நான்கு கைகளையும் மூன்று கண்களையுமுடையவராயும், வரம், அபயம், குடை, சாமரமென்னுமிவற்றைக் கையிலுடையவராயுமுள்ள வீமருத்திரரை அருச்சித்துப் பின்னர், ஓ அரக்கரை சங்கரித்த ஈசா! ஈசுவரனுக்குப் பூஜை செய்யப் போகின்றேன்; சுத்தமான வாயிலின் இடது பக்கத்தில் தேவரீர் இருந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, பெட்டியின் மத்தியிலிருக்கும் ஈசுவரனை ஓங்கார ரூபியான ஓ தேவர்களுக்கும் தேவனான ஈசா! எல்லாவுலகங்களையுங் காப்பவரே! உமக்கு நமஸ்காரம்; தேவரீர் அபிஷேகங் கொண்டருளும் பொருட்டும், ஆன்மர¬க்ஷயின் பொருட்டும் எழுந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்து, லிங்கத்தை இரு கைகளாலும் எடுத்து ஆடையை விலக்கி, முன்னரே ஷடுத்தாசனத்தால் அருச்சிக்கப்பட்டதாயும், சுவர்ணம், வெள்ளி, வெண்கலம், அரக்கு, ஈயம், பாலுள்ள மரமென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்டதாயும், உபானம், பத்மம், ஜெகதி, கம்பம், கண்டம், கம்பம், ஜெகதி, பத்மம், வாஜினம் என்னுமிவற்றுடன் கூடினதாயும், வட்டமான வடிவத்தை யுடையதாயும், நடுவில் உயரமாயும், மேலே விரிக்கப்பட்ட ஆடையையுடையதாயுமிருக்கும் ஸ்னானவேதிகையில் எழுந்தருளச் செய்து, முந்தின தினத்தில் அருச்சித்த பூஜையை இருதய மந்திரத்தால் பூசித்து சிரசில் ஈசான முறையாக சுவாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தை உச்சரித்து, சாமான்னியார்க்கிய ஜலத்தால் அருக்சியங்கொடுத்து, தூப தீபம் சமர்ப்பித்து கட்டைவிரல் முதல் சுண்டு விரல் ஈறாகவுள்ள விரல்களால் ஈசான முதலிய ஐந்து மந்திரங்களை நியாசஞ்செய்து, சுண்டு விரல் அணி விரல்களின் மத்தியில் புஷ்பத்தை எடுத்துக் கட்டை விரல் சுட்டு விரல்களால் லிங்கத்தின் முடியிலிருக்கும் நின்மாலியத்தை இருதயமந்திரத்தால் எடுத்து, முன்னர் வைத்திருந்த புஷ்பத்தை லிங்கத்தின் முடியில் வைத்து, நின்மாலியத்தை இருதய மந்திரத்தால் ஈசான திக்கில் சுத்தமான பாத்திரத்தில் வைத்து விட்டு, அஸ்திரமந்திரத்தால் லிங்கத்தையும், பாசுபதாஸ்திரமந்திரத்தால் பீடத்தையும் சுத்தஞ்செய்து, சாமான்னியார்க்கிய ஜலத்தைக்கொண்டு சுவாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தால் அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

See Also  Tulaja Ashtakam In Tamil

இவ்வாறு செய்தலினால் பூர்வபூஜையின் பூர்த்தியில் லிங்கத்திலும் பீடத்திலும் நியாசஞ் செய்யப்பட்ட மந்திரங்கள் பூர்த்தியடைந்த பின்னர் லிங்கம் பீடமென்னுமிவற்றில் சம்பந்தித்தனவாயும் பூஜைசெய்பவனுடைய போக மோக்ஷங்களைக் கெடுக்கக் கூடியனவாயுமுள்ள விக்கினங்கள் நீக்கப்பட்டவையாக ஆகின்றன.

இருதய மந்திரத்துடன் கூடிய நீரால் அபிஷேகஞ் செய்யப்பெற்ற லிங்கம் சுத்தமாயும் மீண்டும் மந்திரங்களை நியாசஞ் செய்தற்குரியதாகவும் ஆகின்றது.

லிங்கசுத்தி முடிந்தது.