॥ சிவார்ச்சனா சந்திரிகை – முதலாவது ஆவரணபூஜை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
முதலாவது ஆவரணபூஜை
ஹோம் ஈசானமூர்த்தநே நம: படிகத்தின் வருணத்தையுடையவரும், கையில் திரிசூலம் அபயமென்னும் இவற்றையுடையவரும், பார்வதியுடன் கூடினவருமான ஈசானரைப் பூஜிக்கின்றேன்.
ஹேம் தற்புருஷவக்திராய நம: சுவர்ணத்தின் வருணத்தையுடையவரும், பீதாம்பரம் உபவீதமென்னு மிவற்றையுடையவரும், மாதுளங்கம் அக்கமாலை யென்னும் இவற்றைத் தரிப்பவரும், கௌரிதேவியுடன் கூடினவருமாகிய தற்புருஷரைப் பூசிக்கின்றேன்.
ஹ§ம் அகோர ஹிருதயாய நம: மேகத்தின் வருணத்தையுடையவரும், செம்மையான மீசையையும் தலைமயிரையும் உடையவரும், கோரப்பற்களால் பயங்கரமான முகத்தையுடையவரும், சர்ப்பம் தேள் கபாலம் (மண்டையோடு) என்னுமிவற்றாலாகிய மாலையை யணிந்தவரும், இடதுகை நான்கிலும் கட்வாங்கம் கபாலம் கேடகம் பாசமென்னுமிவற்றையும், வலதுகை நான்கிலும், திரிசூலம் பரசு கட்கம் தண்டமென்னுமிவற்றையும் உடையவரும், கங்கையுடன் கூடினவருமான அகோரரைப் பூசிக்கின்றேன்.
ஹிம் வாமதேவகுஹ்யாய நம: செம்மை வருணமுடையவரும், செம்மையான ஆடை மாலை உபவீதங்களையுடையவரும், கட்கம் கேடகம் என்னுமிவற்றைத் தரிப்பவரும் கணாம்பிகையுடன் கூடினவருமான வாமதேவரைப் பூசிக்கின்றேன்.
ஹம் சத்தியோசாத மூர்த்தயே நம: வெண்மை வருணமுடையவரும், வெண்மையானமாலை கந்தம் ஆபரணம் தலைப்பாகை ஆடையென்னுமிவற்றைத் தரிப்பவரும், வரம் அபயங்ளைக் கைகளிலுடையவரும், அம்பிகையுடன் கூடினவருமான சத்தியோசாதரைப் பூசிக்கின்றேன்.
இவ்வாறு சொல்லிக்கொண்டு முறையே ஈசானன் இந்திரன் யமன் குபேரன் வருணனென்னும் இவர்களுடைய திக்குக்களில், ஈசானமுதலிய மந்திரங்களை, அநதந்தப் பூசாசமயத்தில் சிரசு முகம் இருதயம் குஹ்யம் பாதமென்னும் அந்தந்தத் தானங்களினின்றும் அங்குச முத்திரையாலிழுத்து, அவற்றைத் திக்குகளிலிருக்கும் ஈசான முதலியவற்றோடு அபின்னமாகப் பாவித்துப் பூசிக்க வேண்டும். ஒரு தீபத்திலிருந்து ஏற்றப்பட்ட பிறிதொரு தீபம் அபின்னமாதல் போலுமென்க.
ஈசான முதலிய ஐந்தையும், சூலம் டங்கம் வரம் அபயமென்னும் இவற்றையுடைய அழகான நான்கு கைகளையுடையனவாகவாவது தியானிக்க வேண்டும். இவ்வாறே வேறு ஆகமங்ளிற் கூறப்படும் பஞ்சப்பிரமங்களின் தியானங்களைப் பார்த்து அவ்வாறும் அநுட்டிக்கலாம்.
ஹாம் ஹிருதயாய நம:, ஹீம்சிரசே நம:, ஹ¨ம்சிகாயை நம:, ஹைம்கவசாய நம:, ஹெளம்நேத்ரத்திரயாய நம:, ஹ: அஸ்திராய நம: என்று சொல்லிக்கொண்டும், சந்திரன் சுவர்ணம் குங்குமம் வண்டு மின்னல் அக்கினி என்னுமிவற்றின் வருணங்களையுடைவர்களாயும், பத்மாசனத்திலிருப்பவர்களாயும், பாதிச் சந்திரனையும் சடாமகுடத்தையும் தரிப்பவர்களாயும், நான்கு முகங்களையுடையவர்களாயும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களையுடையவர்களாயும் கபாலம் சூலம் வரம் அபயமென்னுமிவற்றைக் கையில் உடையவர்களாயும், சாமினீ நீலினீ சக்கிரிணீ சங்கினீ கிட்கினீ கங்கினீ யென்னும் சத்திகளுடன் கூடினவர்களாயுமிருக்கும் இருதயம் சிரசு சிகை கவசம் நேத்திரம் அஸ்திரமாகிய இவற்றிற்கு அதிட்டான தேவர்களைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டும், இருதயம், சிகை, கவசமென்னுமிவற்றை அந்த அந்தத் தானங்களினின்றும் அங்குச முத்திரையால் இழுத்து, அக்கினி நிருவிவாயு என்னும் இந்தத் திக்குகளிலிருக்கும் தளங்களில் இருதயம் சிகை, கவசமென்னுமிவற்றையும், கிழக்கு முதலிய நான்கு தளங்களின் நுனிகளில் அஸ்திரத்தையும் பூஜிக்கவேண்டும்.
பஞ்சப்பிரமங்களுள் ஈசானத்தை ஈசான தளத்திலும், அங்கங்களுள் நேத்திரம் சிரசு என்னுமிவற்றை அந்த ஈசான தளத்து வடக்கில் முறையே மேல் மேலாகவும் பூஜிக்க வேண்டும்.
அல்லது கர்ணிகையில் ஈசுவரனுக்கு முன்னர் ஈசானத்தையும் நேத்திரத்தையும் பூஜிக்கவேண்டும்.
அல்லது நேத்திரத்தை அஸ்திரத்தைப்போல் திக்குக்களிலாவது பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு முதலாவது ஆவரணத்தைப் பூஜித்துப் பின்னர் இரண்டாவது ஆவரண பூஜையைச் செய்ய வேண்டும்.