Sivarchana Chandrika Panchamirutham In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்சாமிருதம் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பஞ்சாமிருதம்

பின்னர், பஞ்சாமிருதஞ் செய்ய வேண்டும். இதன் பூசையானது பஞ்சகவ்வியபூசைக்குக் கிழக்குப் பக்கத்தில் செய்யவேண்டும். பாத்திரபூசை முடிவாக எல்லாப் பூசைகளையும் முன்போல் செய்க. நடுமுதல் மேற்கு முடிவாகவுள்ள பாத்திரங்களில் பால், தயிர், நெய், தேன், சருக்கரை என்னுமிவற்றை தனித்தனி ஒருபடியாவது, அல்லது முக்காற்படியாவது, அல்லது அரைப்படியாவது வைத்து அக்கினிதிக்கு முதலிய கோணங்களில் சத்திக்குத் தக்கவாறு வாழை, பலா, மா என்னுமிவற்றின் பழங்களையும், ஈசான கோணத்தில் குசோதகம் போல் கந்தோதகத்தையும் வைத்து, அந்தந்தப் பாத்திரத்திலிருக்குக்கக் கூடியவற்றிற்கு முன்போல் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும். சருக்கரை கோமயம் போல் ஜலத்துடனேயிருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தல் மாத்திரம் கிடையாதென்பது ஒரு முறை. எல்லாவற்றையும் பஞ்சகவ்வியம் போல் சேர்க்கலாமென்பது மற்றொரு முறை.

எல்லாவற்றையும் சேர்க்கும் முறையாவது, பஞ்சகவ்வியத்துக்குப்போல் நெல் பரப்பிய தரையில் கிழக்கு முதலிய திக்குக்களிலும் நடுவிலும் ஐந்து கோஷ்டங்களையும், ஈசான திக்கில் எட்டுத்தளங்களையுடைய தாமரையையும் கீறி, சிவம், நியதி, காலம், வியக்தம் அவ்வியக்தம், சுமங்களை என்னும் பெயர்களால் நடு கிழக்கு முதலாக அந்த ஆறு கோஷ்டங்களையும் பூசித்து, அவற்றில் ஆறு பாத்திரங்களை அமிருதல், சோமம், வித்தை, இரத்தினோதகம், சுதாப்பிரீதம், சுரப்பிரீதம் என்னும் பெயர்களால் பூசித்து, மேலே கூறியபடி முறையே நடு முதலிய தானங்களிலிருக்கும் பாத்திரங்களில் பஞ்சாமிருதங்களையும், ஈசான கோணத்திலிருக்கும பாத்திரத்தில் தேங்காய் ஜலத்தையும் வைத்து, அவற்றைப் பஞ்சகவ்வியம் குசோதகத்திற்குப் போல் அபிமந்திரணஞ் செய்து, சருக்கரை முதலியவற்றைக் கோமய முதலியவற்றைப் போல் பாலில் சேர்த்துக் குசோதகத்தை எவ்வாறு பஞ்ச கவ்வியத்தில் சேர்த்தோமோ, அவ்வாறே தேங்காய் ஜலத்தையும் பஞ்சாமிருதத்தில் சேர்க்க வேண்டும்.

See Also  Deva Devam Bhaje In Telugu

பின்னர், மிகுதியான வாழைப் பழத்தை மூலமந்திரத்தாலபி மந்திரித்து மூலமந்திரத்தால் பிசைதல் வேண்டும். பஞ்சகவ்வியத்திற்குச் செய்தது போல் கந்தம் புஷ்பம் முதலியவற்றால் உபசாரம் செய்யவேண்டும்.

பஞ்சகவ்வியத்திற்காகக் குறிக்கப்பட்ட திரவியங்களனைத்துங் கிடையாவிடில் தயிர் பால் என்னுமிவற்றுள் யாதானுமொன்றையும், கோமயம் கோசலமென்னுமிவற்றுள் யாதானுமொன்றையும் மற்றொன்றுக்குப் பிரதிநிதியாக வைத்துக்கொள்ளலாம். அஃதாவது ஒன்றை இரட்டித்து வைத்துக் கொள்ளலாமென்பது பொருள். பஞ்சாமிருதத்துள் சருக்கரைக்குப் பதிலாகக் கருப்பஞ்சாறை வைத்துக்கொள்ளலாம். பஞ்சகவ்வியம் பஞ்சாமிருதமென்னுமிரண்டினும் நெய்யை ஏனைய நான்கு திரவியங்களுக்குப் பதிலாக வைத்துக் கொள்ளலாம்.

பஞ்சகவ்வியத்திற்காகக் கூறப்பட்ட பாத்திர அளவில் திரவியங்கள் கிடையாவிடில் கோமயத்தைப்பாதி கட்டைவிரல் அளவாயும், கோசலம், நெய், தயிர், பால், குசோதகம் என்னுமிவற்றை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து என்று என்னும் பல அளவாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

பஞ்சாமிருதத்தில் பால் முதலியவற்றை ஈசுவரனுடைய லிங்கத்திற்கு அபிஷேகஞ்செய்யும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்ட நிறங்களையுடைய பசுக்கள் கிடையாவிடில் ஒருவித குற்றமுமில்லாததாயும், கன்றுடன் கூடினதாயும், நோயும் கருப்பமுமில்லாததாயுமுள்ள பசுவினுடைய பால் முதலியவற்றை எடுத்துக் கொள்ளல் வேண்டும். பாலானது கன்றினுடைய எச்சில் சம்பந்திக்காமல் கன்றுக்கு ஊட்டியபின் மடியை நீரால் சுத்தஞ் செய்து கறந்துகொள்ளப்பட வேண்டும். கடையாத தயிரும், பூமியில் விழாமல் ஆகாயத்திலிருக்கும் பொழுதே ஏந்திவைத்த கோமயமும், நெய்யும், வடிகட்டின கோஜலமும் என்னுமிவற்றை உபயோகிக்க வேண்டும்.

பஞ்சாமிருத முறை முடிந்தது.