Sivarchana Chandrika – Paththirangalukkul Migasiranthavai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு

வில்வம், துளசி, கருந்துளசி, தருப்பை, அறுகு, நாயுருவி, அலரி, நந்தியாவர்த்தம், வன்னி, சிறுகுறுஞ்சிக்கத்தாளை, தாதகியென்று சொல்லக்கூடிய வாசனையுள்ள ஒருவித செடியின் இலை, விஷ்ணுக்கிராந்தி, தேவதாருவின் இலை, மகாபத்திர விருக்ஷத்தின் இலை, ஜாதி, நாவல், இலந்தை, உதும்பரம், மா, புரசு, தத்கோலம், சிற்றேலம், இருவகைக் கிரிகர்ணிகை, உத்திரவர்ணி, ரோஜா, குருவேர், ஊமத்தை, மருவகம், இருவிதத்தும்பை, நொச்சி, கங்கங்குப்பி, நெரிஞ்சில், மகிழம், கொன்றை யென்னும் இவற்றின் பத்திரங்களே யாகும்.

பூக்களுள் நீலோற்பலம் போல், பத்திரங்களுள் வில்வம் மிகவுஞ் சிறந்தது. இருவகைத் துளசிகளுஞ் சிறந்தனவாகும். எந்த மரங்களின் பூக்கள் மிகவுஞ் சிறந்தனவாகக் கூறப்பட்டிருக்கின்றனவோ, அந்த மரங்களின் இலைகளும் மிகவுஞ் சிறந்த பத்திரங்களாகும்.

தாமரை, நீலோற்பலம், கிரிமல்லிகை, சண்பகம், ஜாதி, அலரி, நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், வில்வம், இருவகை முள்ளுள்ள கத்திரி, பாதிரி, ஐவகை வில்வம், இருவகைத் துளசி, அறுகு, அகஸ்திய விருக்ஷம், கந்தபத்திரம் என்னுமிவற்றின் பத்திர புஷ்பங்களுள் தனக்கு விருப்பமான பத்திர புஷ்பங்களும், சுவர்ணத்தாற் செய்யப்பட்ட பத்திர புஷ்பங்களும் மிகவுஞ் சிறந்தனவாகும்.

அஞ்சலியுள் நிறைந்துள்ள சுவர்ண புஷ்பங்களால் வித்தியா தேகத்தை வகிக்கும் சிவபெருமானை ஆவாஹனம் செய்தலும், நூற்றெட்டு அல்லது எண்பத்தொன்று அல்லது ஐம்பது அல்லது இருபத்தைந்து சுவர்ண புஷ்பங்களால் தினமும் அருச்சித்தலும் மிகவுஞ் சிறந்தனவாய் எண்ணிறந்த பலனைத்தரும். சுவர்ண புஷ்பம் செய்து பூசிக்க முடியவில்லையாயின், சுவர்ணத்துண்டுகளாலாவது, வெள்ளிப் புஷ்பங்களாலாவது பூசிக்கலாம். சுவர்ணபுஷ்பத்திற்கு நிர்மாலிய தோஷங்கிடையாது. அது ஒரு வருடத்திற்கு மேற்றான் நிர்மாலியமாகும். அப்பொழுதும் பஞ்சகவ்வியத்தாற் சுத்திசெய்து பின்னரும் அருச்சிக்கலாம்.

See Also  Venkatesha Mangalashtakam In Tamil

இவ்வாறே நலோற்பலம், புரசு, கொக்குமந்தாரை, அலரி, கிரிமல்லிகை, வில்வம், துளசியென்னுமிவற்றிற்கும் நிர்மாலிய தோஷங்கிடையாது. கூறப்பட்ட பூக்களும், பத்திரங்களும் தன்னுடைய தோட்டத்திலுண்டானவையானால் உத்தமம். வனத்திலுண்டானவையும், அந்நியருடை தோட்டத்திலுண்டானவையும், பூசைசெய்யுஞ் சமயத்தில் பிறரிடத்தில் யாசிக்கப்பெற்றவையுமான பூக்களும், பத்திரங்களும் முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்தவையாகும். கோயில் முதலியவற்றைச் சேர்ந்த தோட்டங்களில் உண்டான பூக்களும், பத்திரங்களும் ஆர்மார்த்தபூஜைக்குக் கூடாவாம். பூக்கள் கிடையாவிடில் எந்தப் பூக்கள் பரமசிவனுக்கு உரியனவோ, அந்தப் பூக்களின் பத்திரங்களால் அருச்சிக்க வேண்டும். பத்திரங்களும் கிடையாவிடில் அவற்றின் பழங்களால் அருச்சிக்க வேண்டும். பழவகைகளுள் கொய்யா, எலுமிச்சை, வாழை, மாதுளை யென்னுமிவற்றின் பழங்கள் அருச்சினைக்கு மிகச் சிறந்தவையாகும். பழங்களுங் கிடையாவிடில் எள்ளு, அரிசி, கடுகு என்னுமிவற்றால் அருச்சிக்கவேண்டும். கருப்பு எள்ளுக்களால் சிவனையருச்சித்தால் அது எல்லாப் பாவங்களையும் போக்கும்.