॥ சிவார்ச்சனா சந்திரிகை – பூஜையின் வகை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பூஜையின் வகை
சூக்கும ஆகமத்தில் கூறப்பட்ட சுத்தம், கேவலம், மிச்சிரமென்னும் அசத்திகமாயும், சசத்திகமாயுமுள்ள சூரியன் முதல் சண்டேசுவர பூஜை முடிவான பூஜைகள், அம்சுமானாகமத்தில் கூறியவாறு கேவலம், சகசம், மிச்சிரமென்னும் பேதத்தால் தனித்தனி முத்திறப்படும். அம்சுமானாகமத்தில் கூறப்பட்ட கேவலமென்னும் பூஜையாவது பரிவார தேவதைகளில்லாத லிங்கபூஜையாகும். சகசமென்னும் பூஜையாவது ரிஷபம், கணபதி, கந்தர், பார்வதி என்னும் நால்வர்களுடன் கூடின லிங்கபூஜையாகும். மிச்சிரமென்னும் பூஜையாவது மகேசுவரர், நிருத்தமூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி என்னும் இவர்களுடன் கூடின லிங்கபூஜையாகும். இவ்வாறே கேவலசுத்தம், சகசசுத்தம், மிச்சிரசுத்தம், கேவலகேவலம், சகசகேவலம், மிச்சிரகேவலம், கேவலமிச்சிரம் சகசமிச்சிரம், மிச்சிரமிச்சிரம் எனப் பூஜைகள் ஒன்பது வகைப்படும்.
அவற்றுள் கேவலசுத்தமாவது – சிவபூஜை செய்வதற்கு முன்னர் சூரியபூஜையையும் அதன் பின்னர் சண்டேசுவரர் பூஜையையும் செய்து லிங்கத்தில் சத்தியின்றிச் சிவனைமாத்திரம் ஆவாகரனஞ் செய்து, பரிவார தேவதைகளில்லாத சிவனுடைய பூஜையாகும்.
சகசசுத்தமாவது – நான்கு பரிவாரங்களுடன் கூட முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.
மிச்சிரசுத்தமாவது – மகேசுவரர் முதலியவர்களுடன் கூட முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.
கேவல கேவலமாவது – முன்னரும் பின்னரும் சூரிய பூஜையையும் சண்டேசுவர புஜையையும் செய்யாதுவிட்டு லிங்கத்தில் சத்தியுடன் கூடச்சிவனை ஆவாகனஞ்செய்து பரிவார தேவதைகளின் பூஜையின்றிச் சிவனைப் பூஜித்தலாகும்.
சகசகேவலமாவது – நான்கு பரிவார தேவதைகளின் பூஜையுடன்முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.
மிச்சிரகேவலமாவது – மகேசுவரர் முதலானவருடன் கூட முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.
கேவலமிச்சிரமாவது – முன்னரும் பின்னரும் சூரிய பூஜையையும், சண்டேசுவர பூஜையையும் முறையே செய்துகொண்டு சத்தியுடன் கூடவேனும் கூடாமலேனும் பரிவார தேவதைகளுடன் கூடாமல் லிங்கபூஜை செய்தலாகும்.
சகசமிச்சிரமாவது – அதே பூஜையை நான்கு பரிவாரங்களுடன் கூடச் செய்தலாகும்.
மிச்சிரமிச்சிரமாவது – மகேசுவரர் முதலானவருடன் பூஜித்தலாம்.
ஆகவே கேவல கேவலத்தில் பரிவாரங்களில்லையாயினும் சகசகேவலத்திலும், மிச்சிரகிவலத்திலும் பரிவாரங்களிருத்தலால் மந்திரசுத்தி செய்தபின்னர் கேவல பூஜையில் பரிவார பூஜையைக் கூறியது பொருத்தமாகுமென்க.
ஈசுவரனுக்குக் கிழக்குப் பாகத்தில் மேற்கு முகமாக இருக்கும்படி செய்து இடபத்தை அருச்சிக்க வேண்டும். தெற்கு, மேற்கு, வடக்குத் திக்குக்களில் முறையே கணபதி, சுப்பிரமணியர், பார்வதி, என்னுமிவர்களைக் கிழக்குமுகமாய் இருக்கும்படி செய்து அருச்சிக்கவேண்டும். பார்வதி தேவியைத் துர்க்கை ரூபமாக அருச்சிக்குங் காலத்தில் தெற்கு முகமாயிருக்கும்படி செய்து அருச்சிக்க வேண்டும்.
பௌராணிகர்கள் சூரியன், கணபதி, விட்டுணு, துர்க்கை என்னும் நால்வரையும் நான்கு பரிவாரங்களாகக் கூறுகின்றனர். ஆரோக்கிய முதலிய பலன்களில் விருப்பமிருப்பின் இடபம் முதலிய நால்வரையும் பூசிக்குங் காலத்தில் பரிவார தேவதைகளின் பூஜாநடுவில் சூரியன் முதலியோரையும் பூசிக்க வேண்டும்.
இடபத்தின் இடதுபக்கத்தில் சூரியனையும், ஈசுவரனுக்குத் தென் பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தியையும், மேற்குப் பக்கத்தில் சுப்பிரமணியரையும், சுப்பிரமணியருக்கு இடது பக்கத்தில் விட்டுணுவையும், ஈசுவரனுக்கு வடக்குப் பக்கத்தில் தேவியையும், தேவிக்குக் கிழக்குப் பக்கத்தில் நிருத்த மூர்த்தியையும் பூசிக்க வேண்டும். இவ்வாறே விருப்பத்தை நிறைவேற்றும் ஏனையபரிவார தேவதைகளின் இருப்பிடங்களை ஆகமங்களில் ஆங்காங்குக் கண்டு கொள்க.
பூஜையின் வகை முடிந்தது.