Sivarchana Chandrika – Santhanam Serkkum Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – சந்தனம சேர்க்கும் முறை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
சந்தனம சேர்க்கும் முறை

சந்தனமானது பனினீர் சேர்த்து அரைக்கப்பட்டதாயும், கோரோசனை, குங்குமப்பூ, சந்தனம், ஏலம், பச்சைக்கற்பூரம், கருமை அகில், கோஷ்டம், கஸ்தூரியென்னுமிவை சமனிடையாகச் சேர்க்கப்பட்டவையாயும் இருக்க வேண்டும். அல்லது சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, விலாமிச்சைவேர் என்னும் இவை சமனிடையுள்ளனவாயிருத்தல் வேண்டும். அல்லது, சமனிடையாகவேனும், சமனிடையிற் பாதியாகவேனும், அந்தப் பாதியிற் பாதியாகவேனும் உள்ள பச்சைக்கற்பூரத்துடன் கூடின சந்தனம், அகில், கோஷ்டம், குங்குமபூ என்னும் இவற்றை உடையதாக இருக்க வேண்டும். அல்லது சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ என்னமிவை சமனிடையுடையனவாயிருக்கவேண்டும். அல்லது சந்தனம், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ என்னுமிவை சமனிடையுடையனவாயிருக்க வேண்டும். அல்லது ஒரு பலச் சந்தனத்திற்கு ஏற்றவாறு பச்சைக்கற்பூரம் முதலியவை சேர்க்கப்பட்ட சந்தனக் குழம்பாவது, அல்லது தனிச் சந்தனக் குழம்பாவது; அல்லது தனி வில்வக்கட்டையின் குழம்பாவது, அல்லத தனிக்கொன்றை மரக்கட்டையின் குழம்பாவது இருக்கவேண்டும். இவை யாவும் சிவபெருமானுக்கு மிக்க விருப்பத்தை யுண்டுபண்ணும்.

தனி ஜலத்தால் அரைக்கப்பட்ட தேவதாருவின் சந்தனம் கற்பகாலம் வரை சிவலோகத்திலிருக்கச் செய்யும். தனி வில்வக்கட்டையால் உண்டான சந்தனம் இம்மையிற் பெரிதான ஐசுவரியத்தைத் தந்து மறுமையிற் சிவலோகத்தையடையச் செய்யும். தனிக் கொன்றை மரக்கட்டையால் உண்டான சந்தனம் இம்மையில் நீண்ட ஆயுளைத் தந்து மறுமையிற் கணபதியுலகத்தையடையச் செய்யும். இத்தகைய சந்தனங்கள் சாதாரண சந்தனத்தினும் இரட்டிப்பான பலன்களைத் தரும். வெள்ளை அகிற்கட்டைச் சந்தனமானது சாதாரண சந்தனத்தினும் ஆறு மடங்கு அதிகமான பலனைத்தரும். கருமையான அகிற்கட்டைச் சந்தனமானது வெள்ளைஅகிற்கட்டைச் சந்தனத்தினும் இரட்டிப்பான பலன்றரும். குங்கும மரக்கட்டைச் சந்தனமானது கருமையான அகிற்கட்டைச் சந்தனத்தினும் நான்கு மடங்கு அதிகமான பலனைத் தரும். முன்னர்க் கூறியவாறு பச்சைக்கற்பூரம் முதலியவற்றுடன் கூடிய சந்தனம் மிகவும் விசேடத்தை யுண்டுபண்ணும். இத்தகைய வாசனைப் பொருள்களோடு சோ¢க்கப்பெற்ற சந்தனத்தை முன் சொல்லிய இலக்கணம் அமைந்த அர்க்கிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, உபயோகிப்பதற்குரிய ஈசுவரனுடைய லலாட முதலிய அங்கங்களைப் பாவனைசெய்து, இலிங்கத்திற்கும் பீடத்திற்கும் அமைந்ததாகவாவது, அல்லது இலிங்கத்திற்கு அமைந்ததாகவாவது கிடைத்த சந்தனத்தை இருதய மந்திரத்தாற் சமர்ப்பிக்க வேண்டும்.

See Also  1000 Names Of Sri Purushottama – Sahasranama Stotram In Tamil