Sivarchana Chandrika – Sathasiva Dhyanam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – சதாசிவத்தியானம் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
சதாசிவத்தியானம்

ஈசுவரனுடைய சமீபத்திலிருக்கிறதாயும், நிலைத்த மின்னற் பிரகாசத்தையுடையதாயும், பிரிவுபடாத அவயவத்தை யுடையதாயுமிருக்கின்ற மூர்த்தியுடன் பிரகாசிக்கும் மேல்ப் பாகத்தையுடையதாயும், பூமிமுதல் சுத்தவித்தைஈறான தத்துவங்களாகிய கிழங்கு தண்டு தளங்களையுடையதாயும், கர்ணிகை கேசரங்களுடன் கூடினதாயும், சூரிய பிம்பம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டதாயும், பலவிதமான கூடாரங்களையுடைய அநேககோடி யோசனையின் உயரம்போல் பிரகாசிக்கிறதாயுமுள்ள பத்மத்தின் மேலிருக்கிறவராயும், மகாபத்ம கோடி யோசனையால் அளவிடப்பட்டவராயும், பத்மாசனத்தில் இருப்பவராயும் சதாசிவத்தைத் தியானஞ் செய்ய வேண்டும். அலலது,

கிழங்காகிய பிருதிவிதத்துவம் முதற்கொண்டு தேஜோமூர்த்தியாகிய மகேசுவர தத்துவம் வரையுள்ள பதினேழுதானங்களில் கூடாங்கோடி என்பது முதலிய வாக்கியங்களாற் பெறப்படும் ஆயிரலக்ஷம் பரார்த்த எண்ணால் அளவிடப்பட்ட மிகுந்த யோசனைகளால் எண்ணத்தகுந்த அளவையுடைய சிறப்புற்ற தாமரையின்மேல் யோகபீடத்தில் வீற்றிருப்பவராகச் சதாசிவமூர்த்தியைத் தியானஞ் செய்ய வேண்டும்.

“கூடாங்ககோடீ கடகநடநடீ நாட்ய நவ்யாந்நபாந த்யாநா பித்யாந காநீநக” என்னும் வாக்கியங்கள் இருப்தெட்டு அக்கரங்களை யுடையன. சோதிட சாத்திர முறையில் இவை இருபத்தெட்டுத் தானங்களாகும். இருபதாவது தானம் பரார்த்தமாகையால் மேன் மேல் பத்துமடங்கதிகமாகக் கொள்ளின் இருபத்தெட்டாவது தானம் ஆயிரலக்ஷம் பரார்த்தமாகுமாறு காண்க.

அல்லது பத்துப் பிரயுத பரார்த்தத்தின் யோசனையுடையதாயும், கணக்குக்கடங்காத பரார்த்த யோசனையுடையதாயுமிருக்கும் உயரமுடையவராயும், தாமரையிலிருப்பவராயும் சதாசிவத்தை தியானிக்க வேண்டும்.

இன்னும் கந்தத்தில் பத்மயோசனையும், நாளத்தில் முறையே பத்து மடங்கதிகமாயும், இன்னுமிதுபோல் இரண்டு மூன்று தானங்களில் நூறுமுதல் பத்து லக்ஷம் வரையுள்ள எண்களால் விருத்தியடைந்ததாயும், கிரந்தியில் கோடியெண்ணும், பத்ம முதலியவற்றில் பத்துக் கோடியும் ஆகிய இந்த எண்களையுடைய யோசனைகளால் மகிமைபெற்றதாயுமுள்ள பெரிதான யோகபீடத்தில் இருக்கிறவராயும், அதன்மேல் நூறுகோடி யோசனைகளின் சமூகத்தால் பிரசித்தமான மகேசுவர தத்துவமளவாக உண்டான சரீரங்களால் பிரகாசிக்கிறவராயும், அதற்கு மேலும் அதனுடைய ஆயிரங்கோடியினாலும், அயுதகோடியினாலும் விருத்தியடைந்தவராயும் சதாசிவத்தைத் தியானம் செய்ய வேண்டும்.

இன்னும் ஐந்து முகமும் பத்துக்கைகளும் ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களும், வலதுகையில் சூலம், வச்சிரம், கத்தி, பரசு, அபயமுத்திரைகளும், இடதுகையில் நாகம், பாசம், மணி, அக்கினி, ஈட்டிகளும், அல்லது வரம், கட்வாங்கம், லேம், அபயம், சத்தியென்னுமைந்து முடையவராயும், மாதுளம்பழம், உடுக்கை, சா¢ப்பம், நீலோற்பலம், அக்ஷமாலிகை யென்னும் இவற்றையுடையவராயும் சதாசிவத்தைத் தியானிக்க வேண்டும்.

இந்தச் சதாசிவதேவருடைய ஊர்த்துவமுகமானது சிசுத்தன்மையுடன் கூடினதாயும், அழகாயும், தௌ¤வாயும், மேல் நோக்கியதாயும், படிகத்தின் பிரபையையுடையதாயும், நிர்மலமாயுமிருக்கும்.

கிழக்கு முகமானது உருக்கின தங்கத்தின் காந்தியையுடையதாயும், கெம்பீரமுடையதாயும், சுமுகமாயும், இளமையான காலைப் பருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.

தெற்கு முகமானது கருமை வர்ணமுடையதாயும், புருவநெரித்தலுடன் கூடினதாயும், பயங்கரமாயும், செம்மையும் வட்டமுமான மூன்று கண்களையுடையதாயும், கோரப்பற்களால் பயங்கரமாயும், ஒருவராலும் அதிக்கிரமிக்க முடியாததாயும், உதடு துடித்துக்கொண்டிருப்பதாயும், சந்திரனைச் சிரோபூஷணமாக வைத்துக்கொண்டிரத்தலால் பிரகாசிக்கும் கேசத்தையுடையதாயும், பூரணமான காளைப்பருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.

வடக்கு முகமானது புதிதான பவளத்தின் பிரபையையுடையதாயும் நெற்றியில் திலகத்தை யணிந்துகொண்டிருப்பதாயும், கருமையான சுருண்ட கூந்தல்களால் பிரகாசிப்பதாயும், யாவரையும் கவரக்கூடியதாயும், மூன்று நேத்திரங்களுடன் கூடினதாயும்; சந்திராபரணத்தால் பிரகாசிக்கிறதாயும், பார்வதியினுடைய முகம்போன்றிருப்பதாயும், விளையாட்டுடன் கூடின கொடிபோன்ற புருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.

See Also  1000 Names Of Shankaracharya Ashtottara – Sahasranamavalih Stotram In Tamil

மேற்கு முகமானது சந்திரனுக்குச் சமானமாயும், இராஜலட்சணங்களுடன் கூடினதாயும், சந்திரனைச் சிரோபூஷணமாக அணிந்திருத்தலால் விரும்பத்தக்கதாயும், தியானத்தால் அசைவற்ற கண்களையுடையதாயுமிருக்கும்.

இவ்வாறு தியானித்த பின்னர் இன்னுமொரு விதமாகத் தியானிக்க வேண்டும். அது வருமாறு:- இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி ரூபமாகப பிரகாசிக்கும் மூன்று கண்களையுடையவராயும், ஞானமாகிய சந்திரகலையைச் சிரோபூஷணமாக உடையவராயும், பத்துத் திக்குகளில் கைகளையுடையவராயும், பஞ்சப்பிரம மந்திர வடிவமான முகத்தையுடையவராயும் ஐந்து சாதாக்கிய ரூபமான முகத்தையுடையவராயும், மகிமை பொருந்திய பஞ்சாக்கரங்களின் சொரூபமான முகம் தோள்கள் துடைகளையுடையவராயும், எல்லாத்தந்திர ரூபராயும், வர்ணம் பஞ்சப்பிரமம் கலைகளின் ரூபராயும், முழங்கால்வரை நிவிருத்திகலையினாலும், நாபிவரை பிரதிட்டாகலையினாலும், கண்டம்வரை வித்தியாகலையினாலும், லலாடம்வரை சாந்திகலையினாலும், அதற்குமேல் சாந்தியதீத கலையினாலும் இவ்வாறு ஐந்து கலாரூபமுடையவராயும் தியானிக்கவேண்டும்.

நிவிருத்திகலையானது நான்கு நகமுடையதாயும், மின்னல் வர்ணமுடையதாயும், வச்சிரத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயுமிருக்கும்.

பிரதிட்டாகலையானது ஒருமுகத்துடன் கூடினதாயும், சந்திரனுடைய காந்தியையுடையதாயும், தாமரைப் புஷ்பத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயுமிருக்கும்.

வித்தியாகலையானது அக்கினிபோன்ற வர்ணமுடையதாயும், மூன்று முகமுடையதாயும், சத்தியினால் பிரகாசிக்குங் கையையுடையதாயுமிருக்கும்.

சாந்திகலையானது கொடியைத் தரித்துக்கொண்டிருப்பதாயும், கருமை வர்ணமுடையதாயும், நான்கு முகத்துடன் கூடினதாயுமிருக்கும்.

சாந்தியதீதகலையானது சந்திரனுடைய பிரபைபோல் பிரபையையுடையதாயும், பாசத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயும், ஐந்து முகங்களுடன் கூடினதாயுமிருக்கும்.

எல்லாக்கலைகளும் பத்மம் அக்கமாலைகளாலும், அபயத்தாலும் பிரகாசிக்கின்றவையாயும், நான்கு கைகயையும், மூன்று கண்களையும், பருத்தும், உன்னதமுமான தனங்களையும் உடையனவாயுமிருக்கும்.

இந்தக் கலைகளில் ஐந்து அத்துவாக்களும் அடங்கியிருக்கின்றனவாகையால் சதாசிவர் ஆறு அத்துவாக்களின் சொரூபமாக ஆகின்றார்.

ஆறத்துவாக்களாவன:- மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்பன. இருநூற்றிருபத்துநாலு புவனங்களும் புவனாத்துவா வெனப்படும். இப்புவனங்கள் ஈசுவரனுக்கு உரோம ரூபமாயிருக்கின்றன. ஐம்பது ருத்திரர்களின் ரூபமாயிருக்கும் வர்ணங்கள் வர்ணாத்துவா வெனப்படும். இந்த வர்ணங்கள் ஈசுவரனுடைய தோல் ரூபமாக இருக்கின்றன. மந்திராத்துவாவானது ஈசுவரனுக்கு இரத்தரூபமாக இருக்கின்றது. பதாத்துவாவானது ஈசுவரனுக்கு நரம்பாயும் ஊனாயுமிருக்கின்றது. முப்பதாறு தத்துவங்களே தத்துவாத்துவாவெனப்படும். இது ஈசுவரனுக்குச் சுக்கிலம், மச்சை, எலும்புகளின் ரூபமாக விருக்கின்றது.

இவ்வாறு கூறினமையால் ஈசுவரனுடை சரீரம் இரத்தம் எலும்பு முதலியவற்றால் செய்யப்பட்டதெனக் கருதக்கூடாது. ஈசுவரனுடைய தேகத்தில் எலும்பு இரத்தம் ஊன்கள் சிறிதுங்கியா. கண்ணாடியில் பிரதிபிம்பம்போலும், ஆகாசத்தில் இந்திரதனுசுபோலும், ஈசுவரனுடைய சரீரமிருக்கின்றது. சதாசிவருடைய இந்தச் சரீரமானது சோதிசொரூபமாகச் சித்தித்துள்ளது. ஆயினும் இவ்வாறு கூறியது கலைகளின் உள்ளடங்கிய அத்துவாக்களின் *கற்பனையாகும்.

( *கற்பனை – தியானத்தின் பொருட்டுக் கொள்ளப்பட்ட தடத்தடிவம்)

பஞ்சப்பிரம மந்திரங்களுள் ஈசானத்தால் சிரசையும், தர்ப்புருடத்தால் நான்கு முகங்களையும், அகோரத்தால் இருதயம் முதலியவற்றையும், வாமதேவத்தால் குய்யம் முதலியவற்றையும், சத்தியோசாதத்தால் ஈசுவரனுடைய பாதமுதலியவற்றையும் தியானிக்க வேண்டும்.

இந்த ஐந்து முகங்களும் பத்துக் கைகளால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், கட்கம், கேடகம், தனுசு, பாணம், கமண்டலம், அக்ஷமாலை, வரம், அபயம், சூலம், தாமரைப்பூ வென்னுமிவற்றைப் பத்துக் கைகளிலுமுடையனவாகவும் தியானிக்க வேண்டும். ஐந்து முகங்களுள் அகோரமுகம் பயங்கரமாக இருக்கும். ஏனைய முகங்கள் சுமுகமாயிருக்கும். இவ்வாறு பஞ்சப்பிரம மந்திரவடிவமாயிருக்கும் ஈசுவரனுடைய தன்மையைத் தியானித்து அந்தந்தப் பிரமத்தின் கலைகளுடைய பேதத்தால் தியானஞ்செய்து அங்கங்களையும் கற்பிக்க வேண்டும். அது வருமாறு:-

See Also  Sri Bhogapuresha Ashtakam In Tamil

ஈசான மந்திரத்தின் ஐந்து கலைகளும் ஐந்து சிரசுகளாகவும், தத்புருட மந்திரத்தின் நான்கு கலைகளும் நான்கு முகங்களாகவும், அகோரத்தின் எட்டுக்கலைகளும் இருதயம், கழுத்து, தோள்கள், நாபி, வயிறு, பிருஷ்டம், மார்புகளாகவும், வாமதேவத்தின் பதின்மூன்று கலைகளும் குய்யம், துடைகள், முழங்கால்கள், கரண்டைக்கால்கள், இடுப்பின் மேற்பாகங்கள், இடுப்புகள், இருபக்கங்களாகவும், சத்தியோசாதத்தின் எட்டுக்கலைகளும் கால்கள், கைகள், மூக்கு, சிரசு, புயங்களாகவுமிருக்கின்றன.

முப்பத்தெட்டுக் கலைகளின் திட்டான தேவர்கள் மூன்று கண்களும், நான்கு முகங்களும், வரம், அபயம், பரசு, மான் என்னும் இவற்றையுடைய தாமரைபோன்ற கைகளும் உடையவர்களாயும், அந்தந்தப் பிரமத்திற்குச் சமானமான வடிவம் வர்ணம் ஆயுதங்களையுடையவர்களாயு மிருக்கின்றனர். இவர்களுடைய இடது பக்கங்களில் பாசம், ஈட்டி, அபயம், வரமென்னு மிவற்றையும், சிரித்த முகத்தையுமுடைய சசினி முதலிய சத்திகளைத் தியானிக்கவேண்டும். அக்கரரூபர்களாயும், சத்தியுடன் கூடினவர்களாயும், இருக்கின்ற ஸ்ரீ கண்டர் முதலிய ருத்திரர்களை ஈசுவரனுடைய அவயவங்களாக நியாசஞ் செய்யும் வழியாய்த் தியானிக்க வேண்டும்.

அன்றியும் குங்குமம் சுவர்ணங்களின் காந்தியோடு கூடிய இடது வலது பக்கங்களையுடையவர்களாயும், பாசம், அங்குசம், அக்ஷமாலை, வரமுத்திரை களையுடையவர்களாயும், தாமரைபோன்ற தௌ¤வான முகங்களையுடையவர்களாயும், அனைவருடைய விருப்பங்களையும் பூர்த்திசெய்கிறவர்களாயும், அர்த்தனாரீசுவர வடிவமுடையவர்களாயும், சத்தியுடன் கூடினவர்களாயுமிருப்பவர்களாக உருத்திரர்களைத் தியானிக்க வேண்டும்.

அன்றியும் காமிகாகமம் இருகால்களாகவும், யோகஜம்கணுக்கால்களாகவும், சிந்தியம் கால்விரல்களாகவும், காரணம் முஷ்டிகளாகவும், அஜிதம் இரண்டு முழங்கால் களாகவும், தீப்தம் இரண்டு துடைகளாகவும், சூக்குமம் குய்யமும் பீஜங்களுமாகவும் சகஸ்ரம் இடுப்பாகவும், அம்சுமான் பிருஷ்டபாகமாகவும், சுப்ரபேதம் தொப்புளாகவும், விஜயம் வயிறாகவு நிசுவாசம் இருதயமாகவும், சுவாயம்புவம் ஸ்தனங்களாகவும், அநலம் மூன்று கண்களாகவும், வீரம் கழுத்தாகவும், இரௌரவம் இரண்டு காதுகளாகவும், மகுடம் கிரீடமாகவும், விமல கைகளாகவும், சந்திரஞானம் மார்பாகவும், விம்பம் முகமாகவும், புரோத்கீதம் நாக்காகவும், லளித்ம் இரகன்னமாகவும், சித்தம் பலகைபோன்ற நெற்றியாகவும், சந்தானம் இரண்டுகுண்டலமாகவும், சர்வோக்தம் பூணூலாகவும், பாரமேஸ்வரம் மாலையாகவும், கிரணம் இரத்தினமயமான ஆபரணமாகவும், வாதுளம் ஆடையாகவும் இவ்வாறு ஈசுவரனுடைய தந்திரரூபமான சரீரத்தைத் தியானஞ்செய்ய வேண்டும். இந்தத் தியானம் மனிதருக்குச் சிவஞானத்தைத்தரும்; சிவதருமத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணும்.

ஈசுவரனுடைய நான்கு பக்கங்களிலும் பிரகாசிக்குஞ் சோதியையுடையதாயும், சுத்தமாயும், மின்னற் கூட்டம் போலிருக்கிறதாயுமுள்ள ஊர்த்துவமுகத்தைச் சிவசாதாக்கியமாக அறிந்து கொள்க. ஈசுவரனுடைய ஜோதிஸ்தம்பலிங்க ரூபமான வடக்கு முகத்தை அமூர்த்தி சாதாக்கியமாக அறிந்துகொள்க. ஜோதிலிங்கத்தினுடைய ஒரு பாகத்திலிருந்துண்டானதாயும், ஒரு முகமும் மூன்று கண்களும் உடையதாயுமுள்ள மேற்கு முகத்தை மூர்த்தி சாதாக்கியமாக அறிந்து கொள்க. சூலம், பரசு, வச்சிரம், அபயமென்னுமிவற்றை வலது கைகளிலும், பாசம், அக்கினி, கண்டை, வரமென்னுமிவற்றை இடது கைகளிலும் தரித்திருக்கிறதாயும், நான்கு முகங்களோடு பிரகாசிக்கிறதாயும், இலிங்கத்தின் நடுவிலுண்டானதாயுமுள்ள தெற்குமுகத்தை கருத்திரு சாதாக்கியமாக அறிந்து கொள்க. ஐந்து முகங்களும் பத்துக்கைகளு முடையதாயும், பீடத்தோடு கூடிய லிங்கத்தில் இலிங்கதிலுண்டானதாயுமுள்ள கிழக்கு முகத்தை கரும சாதாக்கியமாக அறிந்து கொள்க. இவ்வாறு அறிந்து பஞ்ச சாதாக்கிய ரூபமாகத் தியானஞ்செய்ய வேண்டும்.

See Also  Shri Subramanya Shatkam In Tamil

பஞ்சப்பிரம மந்திரங்களை ஊர்த்துவம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் இடங்களிலுள்ள முகபத்மங்களாக ஈசான மந்திர முதற்கொண்டு முறையே தியானஞ்செய்ய வேண்டும்.

இருதய மந்திரத்தை இருதயத்தில் வெண்மையாகவும், சிரோமந்திரத்தைச் சிரசில் பொன்மையாகவும், சிகாமந்திரத்தை சிகையில் செய்மையாகவும், கசவமந்திரத்தை இருபக்கங்களிலும் வெண்மையாகவும், நேத்திரமந்திரத்தைநேத்திரத்தில் கருமையாகவும், அஸ்திரமந்திரத்தை கையில் கருமையாகவும் தியானிக்க வேண்டும்.

அங்கமந்திரங்களுக்கு அதிஷ்டான தேவர்களைச் சாந்தமான பார்வையை யுடையவர்களாயும், பயங்கரமான வடிவங்களையும், நான்கு கைகளையும், மூன்று கண்களையும், வரம் அபயம் கபாலம் சூலம் சடாமகுடங்களையும், உடையவர்களாயும் தியானிக்க வேண்டும்.

திரிசூலம் மூன்று குணங்களையும், பரசு சத்தியத்தையும், கட்கம் பிரதாபத்தையும், வச்சிரம் பேதிக்கப்படாத சத்தியையும், அக்கினி சங்காரஞ் செய்யுஞ் சத்தியையும், நாகம் கெம்பீரத்தையும் பாசம் மலமாயா கன்மங்களையும், கண்டை நாதத்தையும், அபயம் இரக்ஷித்தலையும், அங்குசம் அடக்குதலையும் அறிவிக்கும்.

இன்னும் திரிசூலம் இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்திகளாகவும், அவைகளே சுத்ததத்துவத்தில் பிரவிருத்தியை யுண்டு பண்ணுங்கால் கட்வாங்கமாகவும், ஜகத்பீஜமான மகாமாயையில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் மாதுளம் பழமாகவும், கலக்கத்துடன் கூடின மாயாதத்துவத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் உடுக்கையாகவும், கலை முதலிய காரியக்கூட்டத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் கத்தியாகவும், மனதைப் பிரவிருத்திக்கச் செய்யுங்கால் நீலோற்பலமாகவும், இந்திரியங்களைப் பிரவிருத்திக்கச் செய்யுங்கால் அக்ஷமாலையாகவும், துட்டர்களைச் சங்கரிக்குங்கால் சத்தியாயுதமாகவும், போகத்தைக் கொடுக்குங்கால் வரமாகவும், மோக்ஷத்தைக் கொடுக்குங்கால் அபயமாகவுங் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு ஆயுதங்களைத் தரித்திருக்கிறவராயும், கோடி சந்திரனுடைய குளிர்ச்சிபோல் குளிர்ச்சியையுடையவராயும், முப்பத்திரண்டிலக்கணங்களோடு கூடினவராயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவராயும், பத்து அங்குல அளவான சடாமகுடத்தையுடையவராயும், வலது இடது பக்கங்களில் மூன்று அங்குலமுள்ள பாதிச்சந்திரனையும் திவலைவடிவினையுடைய கங்கையையும் உடையவராயும், சத்தியோசாதமிறுதியாகவுள்ள ஈசான முதலிய முகங்களில் திரிபுண்டரம் அருத்தசந்திரன் பூயந்திரம் தீபம் சந்திரன் என்னுமிவற்றின் வடிவம்போன்ற வடிவமுடையவராயும், புண்டரங்களை முறையே தரித்துக்கொண்டிருப்பவராயும் சதாசிவத்தைத் தியானிக்க வேண்டும்.

சதாசிவருடைய இடது பக்கத்தில் திவ்வியமான உருவத்தையுடையவளாயும், செல்வரத்தைக்குச் சமானமானவளாயும், சுத்தமான ஆடையால் அலங்கரிக்கப்பெற்றவளாயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளாயும், பருத்த துடைகளையும் தனங்களையும், பிருஷ்டபாகங்களையும் உடையவளாயும், ஆயிரம் இதழ்களையுடைய தாமரை நீலோற்பலம் வரம் அபயமென்னுமிவற்றைத் தரிக்கிறவளாயுமுள்ள மனோன்மனியைத் தியானிக்க வேண்டும்.

அதன் பின்னர் இத்தகைய மனோன்மனியுடன் கூடினவராகச் சதாசிவரை இலிங்கத்தில் பாவனை செய்து, இவ்வாறு பாவனை செய்தபின்னர் லிங்கமென்னும் புத்தியை விலக்கிக் கொள்ளல் வேண்டும். மூன்று நேத்திரங்களிலும் ஹெளம் நேத்திரேப்ய: என்ற முறையாக நியாசஞ் செய்து இருதய பத்மத்தில் எக்காலத்தும் பரமசிவனை யாவாகனஞ் செய்ய வேண்டும்.