Sivarchana Chandrika – Sivaasana Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – சிவாசன பூஜை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
சிவாசன பூஜை

சிவ பூஜையில் முதலாவதாக சிவாசன பூஜையைச் செய்ய வேண்டும்.

சிவாசனமாவது கிழங்கு, தண்டு, முடிச்சு, இதழ்கள், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றால் வகுக்கப்பட்ட தாமரைப் பூவின் வடிவையுடையதாயும், பிருதிவிதத்துவ முதல் சுத்த வித்தை முடிவாக முப்பத்திரண்டு தத்துவம் முடிவான உயரமுடையதாயும், மேலிருக்கும் சதாசிவ மூர்த்தியுடன் கூட நிவிர்த்தி கலை முதல் சாந்திகலை ஈறான தத்துவம் வரை உயரமுள்ளதாயுமிருக்கும். அதற்கு மேல் சாந்திய தீதகலை அளவாக வித்தியா தேகம் இருக்கும். அதன் சொரூபத்தை அறிதற் பொருட்டு நிவர்த்தி முதலிய கலையின் அளவும், அக்கலையிலடங்கிய தத்துவங்களின் சொரூபமும் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

நிவிருத்தி கலையானது நூறு கோடி யோஜனை அளவுள்ள பிரமாண்ட ரூபமாயுள்ளது. அக்கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றுதானுண்டு அதற்குமேல் ஆயிரங் கோடி யோஜனையளவுள்ள பிரதிட்டாகலை இருக்கிக்கின்றது. அதில் அப்பு முதலிய நான்கு பூதங்களும், கந்தமுதலிய ஐந்து தன்மாத்திரைகளும், ஐந்து கன்மேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும், மனமும், அகங்காரமும், புத்தியும், பிரகிருதியுமாகிய இருபத்து மூன்று தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அயுதகோடி யோஜனை அளவுள்ள வித்தியா கலை இருக்கின்றது. அதில் புருடன், அராகம், நியதி, கலை, வித்தை, காலம், மாயை யென்னும் ஏழுதத்துவங்களுண்டு. அதற்கு மேல் லக்ஷங்கோடி யளவுள்ள சாந்தி கலை இருக்கின்றது. அதில் சுத்தவித்தை, மகேசுவரமென்றுமிரண்டு தத்துவங்களுண்டு. அதற்குமேல் பத்து லக்ஷங்கோடி அளவுள்ள சாந்திய தீதகலை இருக்கின்றது. அதில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அளத்தற்கு முடியாவண்ணம் சிவதத்துவமிருக்கின்றது.

நிவிர்த்தி கலை ரூபமான பிருதிவி தத்துவமானது தாமரைக் கிழங்கு அளவாக இருக்கின்றது. பிரதிட்டை வித்தையென்னும் இருகலைகளிலுமடங்கியுள்ள அப்பு முதல் காலமீறான இருபத்தொன்பது தத்துவங்கள் தாமரைத் தண்டாக இருக்கின்றன. அந்தத் தத்துவங்களிலிருக்கும் எழுபத்தைந்து புவனங்கள் முட்களாகும். அந்தப் புவனங்களிலடங்கியுள்ள உயிர்களின் ஐம்பது புத்தி தரமங்கள் தண்டிலடங்கியுள்ள நூல்களாகும். வித்தியா கலையில் காலத்திற்கு மேலிருக்கும் மாயாதத்துவம் தாமரைத் தண்டின் முடிச்சாகும். சாந்திகலையிலிருக்கும் சுத்த வித்தியா தத்துவம், இதழ், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றின் ரூபமாயிருக்குந் தாமரையாக இருக்கின்றது. சுத்த வித்தையின் மேலிருக்கும் மகேசுவர தத்துவமானது சிவனுடைய சூக்கும மூர்த்தியாயிருக்கின்றது. சாந்திய தீத கலையிலிருக்கும் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும் வித்தியாதேகமாயிருக்கின்றன.

தாமரைத் தண்டிலிருக்கும் புவனங்களாவன:-

அப்பு, அக்கினி, வாயு, ஆகாயம், அகங்காரம், புத்தி, பிரதிருதி என்னுமிவற்றில் தனித்தனி எட்டுப் புவனங்களாக ஐம்பத்தாறு புவனங்களும், புருட தத்துவத்தில் ஆறு புவனங்களும், அராகதத்துவத்தில் ஐந்து புவனங்களும், நியதி தத்துவத்தில இரண்டு புவனங்களும், கலையில் இரண்டு புவனங்களும், வித்தையில் இரண்டு புவனங்களும், காலத்தில் இரண்டு புவனங்களுமாகப் புருடன் முதல் காலமீறாக உள்ள தத்துவங்களில் அடங்கிய புவனங்கள் பத்தொன்பதும் ஆக எழுபத்தைந்து ஆகும். இவை முள்ளுகளாகும்.

தண்டிலடங்கியுள்ள நூல்களாகக் கூறப்பட்ட புத்தி தருமங்களாவன:- * தமசு, மோகம், +மகாமோகம், தாமிச்சிரம், அந்த தாமிச்சிரம் ஆகிய ஐந்து விபரியயங்களும், ஊகம், சப்தம், அத்தியயனம், துக்க நாசங்கள் மூன்று, சினேகிதனையடைதல், கொடை என்னும் சித்திகளெட்டும், அத்தியாத்மிகமான பிரகிருதி, உபாதானம், காலம், பாக்கியமென்னும் நான்கும், விஷயங்களின் ஒடுக்கத்தால் உண்டான வெளியிலுள்ள ஐந்தும் ஆகத்துஷ்டிகளொன்பதும், குருடு, ஊமை முதலிய இந்திரியங்களின் கேடுகள் பதினொன்றும், மேலே கூறப்பட்ட சித்திக்கும் துஷ்டிக்கும் கூறப்பட்ட கேடுகள் பதினேழும் ஆக ஐம்பது பாவங்களுமாம்.

( * தமசு – அஞ்ஞானம். மோகம் – அகங்காரம். + மகாமோகம் – விருப்பு. தாமிச்சிரம் – வெறுப்பு. அந்த தாமிச்சிரம் ஆசை. விருப்பு அகத்து நிகழ்வது. ஆசைபுறத்து நிகழ்வது. விபரியயம் – விபரீதஞானம்.)

கிழங்கு தண்டு முதலியவற்றின் அளவைப் பற்றிவேறு மதக்கொள்கையைக் கூறுகின்றார். நிவிர்த்தி கலாரூபமான பிருதிவிதத்துவம் முன்போல் நூறுகோடி யோஜனை அளவுள்ளது. அப்பு தத்துவம் பிருதிவி தத்துவத்தினின்றும் பத்து மடங்குயோசனை அளவுள்ளது. அக்கினி தத்துவம் அதினின்றும் பத்து மடங்கு யோஜனை அளவுள்ளது. வாயுதத்துவம் அதினின்றும் பத்துமடங்கு யோஜனை அளவுள்ளது. ஆகாய தத்துவம் அதினின்றும் பத்து மடங்கு யோஜனை அளவுள்ளது. ஆகாயத்தினின்றும் பத்து மடங்கு அகங்காரமும், அகங்காரத்தினின்றும் பத்து மடங்கு புத்தியும், புத்தியினின்றும் பத்து மடங்கு குணமும், இவ்வாறு ஒன்றுக்கொன்று பத்து மடங்கு அதிகமாகக் குணதத்துவம் வரை இருக்கின்றன. இதற்குமேல் மாயாதத்துவம் வரை ஒன்றினின்றும் ஒன்று நூறு மடங்கு யோசனை அதிகமாக இருக்கின்றன. அஃதாவது குணதத்துவத்தினின்றும் நூறு மடங்கு அதிகம் பிரகிருதி தத்துவம். பிரகிருதியினின்றும் நூறுமடங்கதிகம் அராகத்தத்துவம். அதனின்று நூறு மடங்கதிகம் நியதிதத்துவம். அதினின்று நூறு மடங்கதிகம் வித்தியாதத்தவம். அதினின்றும் நூறு மடங்கதிகம் கலை. அதினின்று நூறு மடங்கதிகம் காலம். அதினின்று நூறு மடங்கதிகம் மாயையென்பதாம்.

சுத்தவித்தை, ஈசுவரம், சதாசிவமென்னும் தத்துவங்கள் ஒன்றினின்றும் ஒன்று ஆயிரம் மடங்கதிகமான யோசனையுடையன. அஃதாவது, மாயையினின்றும் ஆயிரமடங்கு சுத்தவித்தை. அதினின்றும் ஆயிரமங்கதிகம் ஈசுவரம். அதினின்றும் ஆயிரமடங்கதிகம் சதாசிவ தத்துவமென்பதாம்.

சதாசிவ தத்துவத்தினின்றும் லக்ஷம் மடங்கதிகம் சத்திதத்துவம். சிவதத்தவமானது சத்திதத்துவத்தினின்றும் இவ்வளவதிகமென்று சொல்லவும் முடியாது நினைக்கவும் முடியாது.

இந்த மதமானது பிரகிருதிக்கு முன் குணதத்துவத்தை அங்கீகரித்துக் கொண்டு பிரகிருதிக்குப் பின் புருட தத்துவத்தை அங்கீகரியாமல் பிரவிர்த்தித்தது. இக்கருத்தையே சுருக்கமாக “க்ஷிமாதத் வம் சத” வென்னுஞ் சுலோகத்தாலும் கூறியுள்ளார்.

ஆகவே, தாமரைத் தண்டானது இவ்வளவு யோசனை அளவுள்ளதென்று கூறமுடியாது. ஆயினும் ஒருமுறையை யனுசரித்து யோசனைகளினளவைக் காட்டுகின்றோம்.

ஒன்று என்று ஆரம்பித்து மேல் மேல் பத்துப் பத்தாக விருத்தி பண்ணிக்கொண்டால் இருபதாவது தானமானது பரார்த்தமென்னும் அளவையுடைதாக ஆகின்றது. அந்தப் பரார்த்தம் எல்லாவற்றிற்கும் முடிவான எண்ணாகும். இருபது தானங்களுக்கும் பெயர்கள் வருமாறு:-

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், அயுதம், (பதினாயிரம்) இலட்சம், பிரயுதம், (பத்துலெட்சம்) கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகா பத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்யம், பரார்த்தம் என்பன. இந்த எண்களை ஏகம்பங்திசதே என்னுஞ் சுலோகத்தால் கூறியுள்ளார்.

ஆகவே நூறுகோடி யென்னுமெண்ணை ஒன்று என்னுந்தானத்தில் வைத்துக்கொண்டு அப்பு தத்துவ முதலிய தத்துவங்களின் எண்களை யெண்ண வேண்டும். நூறுகோடி யென்னுமெண் பத்மமெனக் கூறப்படும். ஆகவே, பத்மம் என்பது நூறுகோடி யென்னும் பொருளைத் தரும். எடுத்துக் கொண்ட பிருதிவி தத்துவம் ஒரு பத்மயோசனையளவுள்ளது. அப்புதத்துவம் பத்துப் பத்ம யோசனையளவுள்ளது. தேயுதத்தவம் நூறு பத்மயோசனையளவுள்ளது. வாயுதத்துவம் ஆயிரம் பத்மயோசனையளவுள்ளது. ஆகாய தத்துவம் அயுத பத்ம யோசனையளவுள்ளது. அகங்காரதத்துவம் இலட்சம் பத்ம யோசனையளவுள்ளது. புத்திதத்துவம் பிரயுத பத்மயோசனையளவுள்ளது. குணதத்துவம் கோடி பத்ம யோசனையளவுள்ளது. அதற்கு மேல் நூறு எண்களால் விருத்திப்படுவதால் கோடி முதலாக முறையே ஒன்றைவிட்டு அடுத்த ஒன்றைக் கொள்ளல் வேண்டும்.

See Also  Sri Svaminya Ashtakam In Tamil

எவ்வாறெனில்:- பிரகிருதி தத்துவம் பத்மயோசனையளவுள்ளது 1 அராக தத்துவம் நிகர்வயோசனையளவுள்ளது. நியதி தத்துவம் மகா பத்ம யோசனையளவுள்ளது. வித்தியாதத்துவம் மகா சங்க யோசனையளவுள்ளது. கலாதத்துவம் மகா சமுத்திர யோசனையளவுள்ளது. காலதத்துவம் பரார்த்த யோசனையளவுள்ளது.

(1 பத்மயோசனையைப் பிருதிவிக்குக் கொள்ளுங்கால் ஒன்றென்னுந்தானமாகவும், பிருகிருதிக்குக் கொள்ளுங்கால் பத்மமென்னுந் தானமாகவுங் கொள்க.)

ஆகவே, அப்பு முதல் காலமீறாகவுள்ள தத்துவக் கூட்டங்களின் ரூபமான தாமரைத்தண்டானது பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்மம் நிகர்வம், மகாபத்மம், மகாசங்கம், மகாசமுத்திரம், பரார்த்தமென்னும் பதின்மூன்று எண்களால் எண்ணத்தகுந்த யோசனையால் அளக்கப்பட்டதாக ஆகின்றது.

பரார்த்தத்திற்கு மேலும் எண் உண்டென்று சொல்லுமிடத்தில் பத்மத்தை முதலாவது தானமாகக் கொண்டு பத்திற் பெருக்காமல் கூறப்பட்ட தாமரை தண்டானது கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மத்தியம், பத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், கோடியால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மத்தால் விருத்தியடைந்த பரார்த்தமென்று இவ்வாறாக பதின்மூன்று எண்ணின கூட்டத்தால் அளக்கத் தகுந்த யோசனையுயாமுள்ளதாக ஆகின்றது.

நாளத்திலடங்கியுள்ள புவனங்களுக்கு ஆதாரங்களான கந்தமுதலிய தன்மாத்திரைகளைந்து; கன்மேந்திரியங்களைந்து; ஞானேந்திரியங்களைந்து, மனம் ஒன்று ஆகிய இவற்றிற்கு வேறு வேறளவு இல்லையென்னும் மதத்தில் அளவு கிடையாது. புவனங்களுக்கு ஆதாரமாயிருப்பது பற்றி அவற்றிற்கு அளவு உண்டென்னும் மதத்தையனுசரித்து அவற்றினளவைக் கூறுகின்றோம்.

ஒரு பத்மயோசனையளவுள்ள பிருதிவி தத்துவத்தினின்றும் அப்பு முதலிய பூதம் நான்கு, தன்மாத்திரையைந்து; கன்மேந்திரியமைந்து; ஞானேந்திரியமைந்து; மனமொன்று ஆகிய இருபது தத்துவங்களுக்கும் ஒன்றுக்கொன்று பத்து மடங்கு அதிகமான யோசனையுண்டு. அகங்காரம் புத்தியென்னுமிவற்றிற்கு நூறுமடங்கும், பிரகிருதிக்காயிரமடங்கும், புருடனுக்கு அயுத மடங்கும், நியதிகாலமென்னுமிவற்றிற்கு இலட்சமடங்கும், அராகம், வித்தை, கலையென்னும் மிவற்றிற்குப் பத்துலட்சமடங்கும், மாயைக்குக் கோடி மடங்கும், சுத்த வித்தைக்குப் பத்து கோடி மடங்கும் ஈசுவர தத்துவத்திற்கு நூறுகோடி மடங்கும், சதாசிவ தத்துவத்திற்கு ஆயிரங்கோடி மடங்கும், சத்தி தத்துவத்திற்கு அயுதங்கோடி மடங்கும் அதிகமான யோசனையுண்டு. சிவதத்துவத்திற்கு யோசனையினளவு கிடையாது. இந்த மதமானது புருடன் மாயையெனினுந் தத்துவங்களுக்கு நடுவிலிருக்கும் ஐந்து தத்துவங்களுக்கும் முற்பிற்பாடென்னும் முறையின் வேறுபாட்டையனுசரித்துப் பிரதிவிருத்தித்தது. இந்த மதத்தில் பிருதிவி முதல் மனமீறாக இருபத்தொரு தத்துவங்களும் ஒன்றுக்கொன்று பத்துப்பத்து மடங்கு அதிகமாயிருத்தலால் முறையே ஒன்று பத்து, நூறு, ஆயிரம், அயுதம், இலட்சம், ப்ரயுதம், கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்தியம், பரார்த்தம், பத்துப் பரார்த்தம் ஆகிய யோசனைகளையுடையன. அகங்காரம் புத்தியென்னுமிவை மேல் மேல் நூறு மடங்கதிகமாயிருத்தலால் முறையே ஆயிரத்தால் விருத்தியடைந்ததாயும் லக்ஷத்தால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனையையுடையன. பிரகிருதியானது ஆயிரமடங்கு அதிகமாயிருத்தலால் அற்புதத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தின் யோசனையையுடையது. புருடதத்துவம் அயுதமடங்கதிகமாயிருத்தலால் பிருந்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தின் யோசனையையுடையது. நியதி, காலமென்னுமிவை இலட்சமடங்கதிகமாயிருத்தலால் முறையே மகாசமுத்திரத்தால் விருத்தியடைந்ததாயும், ஆயிரம் பரார்த்தத்தால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனைகளையுடையன. அராகம், வித்தை, கலையென்னும் இவை மேல் மேல் பத்துலட்சமடங்கதிகமாயிருத்தலால் முறையே பத்ம பரார்த்தத்தால் பிருத்தியடைந்ததாயும், மகாசங்கபரார்த்தத்தால் விருத்தி அடைந்ததாயும், நூறு பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தினால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனைகளையுடையன. ஆகவே இந்தப்பட்சத்தில் ஜல முதல் கலை ஈறான தத்துவக்கூட்ட ரூபமாயுள்ள தாமரைத் தண்டானது பத்து முதல் நூறு பரார்த்தத்துடன் கூடிய பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம் வரையுள்ள இருபத்தொன்பது எண்களால் எண்ணத்தகுந்த யோசனைகளின் அளவையுடையதாக ஆகின்றது.

தத்துவங்களினுடைய யோசனைகளின் மிகுதியை யனுசரித்துப் பிரதிவிருத்தித்த இந்த இரண்டு பக்கங்களிலும் தண்டினின்று முடிச்சிற்கும், முடிச்சில் நின்று இதழிற்கும் மிகுந்த யோசனை து£ரங்கொள்ளப்படுகின்றது.

அது வருமாறு:- முதலாவது பக்கத்தில் தண்டிலடஙகியுள்ள தத்தவங்களுள் கால தத்துவம் பரார்த்த யோசனையுடையது. கலாதத்துவம் அதனுடைய அளவில் நூறில் ஒரு பங்குடையது. வித்தை, நியதியென்னுமிவற்றை முன்னிட்ட முன்தத்துவங்கள் அதினின்றும் முறையே நூறிலொருபங் களவுடையன. ஆகையால் தாமரைத் தண்டானது சிறிது அதிகமான ஒரு பரார்த்த யோசனையையுடையத. மாயாரூபமான முடிச்சு நூறால் விருத்தியடைந்த பரார்த்த யோசனையையுடையது. காலத்தினின்றும் நூறு மடங்கு யோசனை மாயைக்கிருதத்தலால் அவ்வாறு கூறப்பட்டது. பத்மம் இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்த யோசனையையுடையது. மாயையினின்று பத்ம ரூபமான சுத்தவித்தை ஆயிரமடங்கதிகமாயிருத்தலால் அவ்வாறு கூறப்பட்டது.

இவ்வாறே இரண்டாவது பக்கத்திலும் முடிச்சு பத்மமென்னும் இவற்றின் யோசனைகளின் விரிவுகொள்ளப்படும்.

இவ்வாறு கூறப்பட்ட கிழங்கு முதல் தண்டு முடிச்சு பத்மமென்னும் இவற்றிற்குண்டான அளவு உலக சம்பந்தமான தாமரையை யனுசரித்ததன்று. நாபியிலிருக்கும் கிழங்கு முதற்கொண்டு இருதய மீறாகவுள்ள இருதய கமலத்தின் சொரூபத்தை யனுசரித்தது. ஆகையால் சிவாசன பத்மத்தைப் பாவனை செய்யுங்கால் கலை என்னுமளவால் விருத்தியையுடைய பக்கத்தை யனுசரித்தலேயுத்தமம்.

இந்தப் பத்மம் அனந்தாசனம், சிங்காசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசனமென்னும் ஐந்தாசனங்களை யுட்கொண்டிருப்பது. பிருதிவி தத்துவத்தி லடங்கியுள்ள கிளங்கிற்றான் ஆதாரசத்தியிருக்கின்றது. ஜலம் முதல் காலமீறான தத்துவங்களடங்கியிருக்கும் தண்டே அத்தண்டிற்கு மேனியிருக்கும் தாமரை மொட்டுடன் கூடி, ஆதார சத்திரூபமான பால்ச் சமுத்திரத்திலிருந்துண்டானதாயும் படங்களிலிருக்கும் இரத்தினங்களுடன் கூடினதாயுமுள்ள பாம்பின் வடிவம்போல் வடிவத்தை யுடையவராயும் எட்டு வித்தியேசுவரர்களுக்குளடங்கியவராயும் இருக்கும். அநந்தர் உருத்திரரென்னுமிவர்களை யுடையதாய் அனந்தாசனமெனப்படும்.

தண்டை யெல்லையாகவுடையதாயும், ஜல தத்துவமுதல் குண தத்துவம் வரை தண்டைச் சுற்றியிருப்பதாயுமுள்ளது சிங்காசம். அதற்குமேல் முடிச்சுவரை யோகாசனம். அதற்குமேல் தளம் கேசரமென்னும் ரூபமாயுள்ளவை பத்மாசனம். கர்ணிகைவிமலாசனம். கர்ணிகையின் மேலிருக்கும் மூன்று குணங்களாகவாவது, மூன்று மண்டலங்களாகவாவது, மூன்று தத்துவங்களாகவாவது இருப்பது விமலாசனமென்றுங் கொள்ளலாம்.

ஆயிரம் படங்களால் அலங்கரிக்கப்பெற்ற அநந்தரைச்சர்ப்பமாகக் சொன்ன காரணத்தால் அவருடைய போகதண்டமே நீண்டிருக்கும் நாளமாகும். அவருடைய சுருங்கிய படமேமொட்டாகும். இரைத்ததவிரத் தாமரையென்பது வேறில்லையாயினும் அந்தப் படத்தையே விரிந்திருப்பதாகத் தியானஞ் செய்யுங்காலத்தில் எட்டுத்தளமுடைய பத்மரூபமாகத் தியானஞசெய்ய வேண்டும்மென்பது பற்றிப் பத்மாசனத்தைக் கூறியுள்ளார்.

அல்லது வட்டமான வடிவத்தையுடையதாயும், கோடிசூரியன்போல் பிரகாசமுடையதாயும், சிங்காசனத்தின் கீழிருக்கிறதாயும், அநந்தரென்னுஞ் சர்ப்பரூபமாயும், அளவற்ற தாமரை ரூபமாயும், தண்டினின்றும் வேறாகவாவது, அல்லது வட்டமாயும் ஒன்றன் மேலொன்றாயுமிருக்கும் அநந்தன், வாசுகி, தட்சகன் கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகனென்னும் எட்டுச் சர்ப்பரூபமாகவாவது அநந்தாசனத்தைப் பாவிக்க வேண்டும்.

அல்லது சிங்காசனத்திற்குக்கீழ் இடபம், சிங்கம், பூதம், யானை யென்னுமிவற்றின் சொரூபம்போல் சொரூபத்தையுடைய தரும முதலிய நான்கு கால்களையுடையதாயும், அதர்ம முதலிய நான்கு பலகைகளையுடையதாயுமிருக்கும் கட்டிலின்மேல், ஐந்து படங்களுடன், வாலுடனுங் கூடியிருப்பவரும், படத்தின் நடுவில் வெண்பட்டு, பலவிதமான ஆபரணங்கள், அணிந்தவரும் வரம், அபயமென்னும் இவற்றையுடைய இருகைகளையுடையவருமாயுள்ள புருடவடிவமான சர்ப்பராசனையுடையதாயும், அந்தச் சர்ப்பராசனைச் சுற்றிக் கிழக்கு முதலிய திக்குக்களில் அநந்தன் முதல் குளிகனீறாகவுள்ள சர்ப்பங்கள் ஒற்றைப் படங்களுடன் அஞ்சலிபந்தஞ் செய்துகொண்டும், சர்ப்பராசனைப் பார்த்துக்கொண்டும் இருப்பனவாயும், சர்ப்பராசனுடைய சிரசில் மலர்ந்த எததனங்களையுடைய அநந்த தாமரையிருப்பதாகவும் பாவனைசெய்ய வேண்டும். இவ்விடத்தில் முதலாவது பக்கத்தையே கைக்கொண்டு சிவாசனத்தை யருச்சிக்கும் முறைவருமாறு:-

சிவாசன பூஜை

ஹாம் ஆதாரசத்தயே நம: நூறுகோடி யோசனையளவுள்ள பிரமாண்டத்தின் ரூபமான பிருதிவி தத்துவத்தை யளவாகவுடைய சிவாசனபத்மத்தின் கிழங்கு ரூபமுடையதாயும், வெண்மை நிறமுடையதாயும், பாசம், அங்குசம், அபயம், வரமென்னுமிவற்றைத் தரித்திருக்கிறதாயுமுள்ள ஆதாரசத்தியைப் பூசிக்கின்றேன்.

See Also  Parvatipanchakam Tamil Lyrics ॥ பார்வதீபஞ்சகம் ॥

ஹாம் அநந்தாசனாய நம: ஜலம் முதல் காலமீறாகவுள்ள தத்ததுவங்களினளவான தண்டு ரூபமாயும் மாயையென்னும் முடிச்சுடன் கூடினதாயும், பதினோராயிரங்கோடி யோசனையுயரமுள்ளதாகவாவது, அல்லது பத்து, நூறு, ஆயிரம், அயுதம், இலட்சம், ப்ரயுதம், கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்தியம், பரார்த்தம், நூறால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், அற்புதத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பிருந்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், மகாசமுத்திரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரம் பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மபரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், மகாசங்க பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், நூறு பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மபரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தமென்னும் இவை ரூபமான முப்பதெண்களால் விருத்தியடைந்த தாமரை யெண்ணின் கூட்டத்தால் எண்ணத்தகுந்த யோசனையுயர முடையதாகவாவது இருக்கின்றதாயும், அதன் மேல் ஆயிரம் படங்களின் கூட்டரூபமான தாமரை மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டதாயும், ஒரு முகமும் நான்கு கைகளும் இருதயத்தின் நமஸ்கார முத்திரையும் உடையவராயுமிருக்கும் அநந்தர் உருத்திரரின் ரூபமான அநந்தாசனத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சிவாசனபத்ம நாளகண்டகேப்பியோ நம: பிருதிவியாகிய சிழங்கிலிருந்து தோன்றின சிவாசன பத்மத்தின் தண்டின் அவயவங்களினின்று முண்டான ஜலம் முதல் காலமீறான தத்துவங்களைப் பற்றியிருக்கும் அமரேச, பிரபாச, நைமிச, புஷ்கரௌஷதி, டிண்டி, முண்டி, பார, பூதல, லகுளீ, அரிச்சந்திர, ஸ்ரீசைல, ஜப்யேசுவர, ஆம்ராதகேசுவர, மத்தியமேசுவர, மகாகாள, கேதார, பைரவ, கயா, குருச்சேத்திர, நாகல, நகல, விமலேசுவர, அட்டகாச, மகேந்திர, பீமேசுவர, அவிமுக்த, வஸ்திராபத, உருத்திரகோடி, மகாலய, கோகர்ண, பத்ரகர்ண, சுவர்னாச்ச, ஸ்தாணு, சகலண்ட, துவிரண்ட, மகாகோட, மண்டலேகவர, காளாஞ்சன, சங்குகர்ண, ஸ்தூலேசுவர, ஸ்தலேசுவர, பைசாச, இராட்சத, யாக்ஷ, கந்தருவ, ஐந்திர, சௌமிய, பிராஜாபத்ய, ப்ராஹ்ம, அகிருத, கிருத, பைரவ, ப்ராம்ம, வைஷ்ணவ, கௌமார, ஒளமம்;, ஸ்ரீகண்ட, வாமதேவ, பீம, உக்கர, பவ, ஈசான, ஏகவீர; பிரசண்ட, உமாபதி, அஜ அநந்த, ஏகசிவ, குரோத சண்ட, சோதி, சூலேச்வர, சம்வர்த்த, பஞ்சாந்தக, ஏகவீர, சிகேத என்னும் பெயாகளையுடைய எழுத்தைந்து புவன ரூபங்களான முட்களைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சூத்திரேப்யோ நம: ஐந்து விபரியயங்களும், எட்டுச் சித்திகளும், ஒன்பது துஷ்டிகளும், இருபத்தெட்டுச் அசத்திகளும் ஆகிய ஐம்பது பாவங்களின் ரூபமாயிருக்கும் சிவாசனபத்மத்தின் தண்டிலுள்ள நூல்களைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு அநந்தாசன ரூபமான நாளபூசை செய்த பின்னர் நாளத்தைச் சுற்றியிருக்கும் சிங்காசனத்தையும் யோகசனத்தையும் பூசிக்க வேண்டும்.

ஹாம் தருமாய நம: சிவாசனத்தின் அக்கினி திக்கிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கத்தின் வடிவம்போன்ற வடிவத்தையுடையதாயும், ஜலமுதல் குணமீறான தத்துவம் வரை உயரமுடையதாயும், அக்கினிதிக்கிற்கு எதிர்முகமாயும், பிளக்கப்பட்டவாயும் திரும்பப்பட்ட கழுத்தும் உடையனவாய் வாயு மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், கற்பூரம் போல் நிறத்தையுடையதாயுமிருக்கும் தருமத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் ஞானாய நம: சிவசிம்மாசனத்தினுடைய நிருதி மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போல் வடிவத்தையுடையதாயும், ஜல முதல் குணமீறாகவுள்ள தத்துவம் வரை உயரமும் நிருதி திக்கிற்கு எதிர்முகமும் பிளக்கப்பட்டவாயும் திரும்பபட்ட கழுத்தும் உடையதாயும், ஈசான மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், குங்குமம் போல் நிறமுடையதாயுமிருக்கும் ஞானத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் வைராக்கியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய வாயு மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போன்ற வடிவமும் ஜல முதல் குண தத்துவம் வரையுயரமும், வரயுதிக்கிற்கு எதிர்முகமும் பிளக்கப்பட்டவாயும், திரும்பப்பட்ட கழுத்தும் உடையதாயும், அக்கினி மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், சுவர்ணம் போல் நிறமுடையதாயுமிருக்கும் வைராக்கியத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் ஐசுவரியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய ஈசான மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போல் வடிவமும், ஈசான திக்கிற்கெதிர்முகமும், ஜல முதல் குணமீறாகவுள்ள தத்துவம் வரையுயரமும், பிளக்கப்பட்டவாயும், திரும்பப்பட்ட கழுத்தும் உடையதாய் நிருதி மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், மேகம்போல் நிறமுடையதாயுமிருக்கும் ஐசுவரியத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அதர்மாய நம: சிவசிம்மாசத்தினுடைய கிழக்குப் பலகை ரூபமாயும், வெண்மையும் கருமையுமான வர்ணமுடையதாயும், புருடனுடைய சொரூபம் போல் சொரூபத்தையுடையதாயும், தென்பக்கத்திற்றலையும் வடபக்கத்திற்காலும் உடையதாயும், கீழ்முகமாயுமிருக்கும் அதர்மத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அஞ்ஞானாய நம: சிவசிம்மானத்தினுடைய தெற்குப் பலகை ரூபமாயும், வெண்மையுஞ் செம்மையுமான வர்ணமுடையதாயும், புருடனைப் போல் வடிவமுடையதாயும், கிழக்கே தலையும், மேற்கே காலுமுடையதாயும், கீழமுகமாயுமிருக்கும் அஞ்ஞானத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அவைராக்கியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய மேற்குப் பலகை ரூபமாயும், செம்மையும் பொன்மையுமான வர்ணமும், புருடனுடைய வடிவமுமுடையதாயும், வடக்கே தலையும் தெற்கே காலுமுடையதாயும், கீழ்முகமாயுமிருக்கும் அவைராக்கியத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அநைசுவரியாய நம: சிவ சிம்மாசனத்தினுடைய வடக்குப் பலகை ரூபமாயும், பொன்மையுங் கருமையுமான வர்ணமும், புருடனுடைய வடிவமும் உடையதாயும், மேற்கே தலையும் கிழக்கே காலுமுடையதாயும், கீழ முகமாயுமிருக்கும் அநைசுவரியத்தைப் பூசிக்கின்றேன்.

பின்னர், ஹாம் சிவ சிம்மாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு எல்லாச்சிம்மாசனங்களையும் பூசித்து யோகாசனத்தையும் பூசிக்கவேண்டும்.

யோகாசனத்தை, வெண்மை, செம்மை, பொன்மை, கருமை யென்னும் வர்ணங்களையுடையனவாய் பூதகண ரூபங்களாயிருக்கும் கிருத, திரேதா, துவாபர, கலியென்னும் நான்கு யுகங்களை அக்கினி முதலிய திக்கிலிருக்கும் கால்களாகவும், படிகம், காளமேகம், மாதுளம்பழம், மைக் குழம்பு என்னும் இவற்றின் வர்ணங்களை யுடையனவாயிருக்கும் அவ்வியத்தம், நியதி, கலை, காலமென்னும் நான்கு தத்துவங்களையும் கிழக்கு முதலிய திக்கிலிருக்கும் பலகையாகவும் அருச்சித்து, ஹாம் “சிவயோகாசன மத்திய பலகரூபாய ஸ்ரீ மகாவிஷ்ணவே நம:” என்று சொல்லிக்கொண்டு, பலகையின் நடுவில் நீல வர்ணமும், மூன்று கண்களும், சங்கு, சக்கரம், வரம், அபயமென்னும் இவற்றைதயுடைய கைகளையுமுடையவராயிருக்கும் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும்.

பின்னர், இரஜோகுணாருணாய தமோகுணதூலபரிதாய மாயாரூபாய அதச்சதனாய நம: என்று சொல்லிக்கொண்டு, யோகாசனத்தின் மேல் மேகலைக்குக் கீழ் பாகத்தில் பரப்பப்பட்டதாயும் படுக்கை ரூபமாயுமிருக்கும் அதச்சதனத்தை நிறுதிமூலையிற் பூசிக்க வேண்டும்.

அதன் பின்னர் “ஹாம் சத்துவ குணதவளிதாய சுத்த மாயா ரூபோர்த்துவச்சதனாய நம:” என்று சொல்லிக்கொண்டு, மேகலைக்குமேல் படுக்கையின் உத்தரச் சதனரூபமாயிருக்கும் ஊர்த்துவச் சதனத்தை நிறுதி மூலையிற் பூசித்து, ஹாம் சிவயோகாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு, யோகாசனம் முழுமையும் பூசிக்க வேண்டும்.

யோகாசனம் விமலாசனங்களின்றி அநந்தாசனம் சிங்காசனம் பத்மாசனமென்னும் மூன்று ஆசனங்கள் தான் சிவாசனமென்னும் பக்ஷத்தில் சிங்காசனத்தையே மாயாக் கிரந்தி வரையுயரமுடையதாகப் பாவித்து, அதன் கால்களையும் பலகைகளையும் பூஜித்த பின்னர், அக்கினி முதலிய மூலைகளிலிருக்கும் அவ்வாசனப் பலகைகளைச் சேர்க்கக் கூடிய கீல் ரூபமாக கிருதயும் முதலிய நான்கு யுகங்களையும் பூசித்து, அதன் மத்தியில் பலகை ரூபமாகவே மகாவிஷ்ணுவையும் பூசித்து, அதச்சதனத்தையும் ஊர்த்துவச்சதனத்தையும் பூசிக்க வேண்டும்.

See Also  Agni Ashtottara Shatanama Stotram In Tamil

பின்னர் அநந்தரின் பணாமண்டலரூபமான தாமரை மொட்டை விரிந்ததாகப் பாவித்து அதனுடைய தளத்தையுங் கேசரத்தையும் பூசிக்க வேண்டும்.

ஹாம் சிவாசன பத்மதளேப்யோ நம:, அட்டவித்தியேசுவரர்களின் ரூபமாயும், வெண்மை வர்ணமுடையனவாயுமிருக்கும் சிவாசன பத்மத்தின் தளங்களைப் பூசிக்கின்றேன்.

ஹாம் கேசரேப்பியோ நம:, அடியில் சுவர்ண வர்ணங்களாயும், நடுவில் பவள வர்ணங்களாயும், நல்முத்தின் வடிவுகோல் வடிவமுடைய சிரசால் அலங்கரிக்கப்பட்டவையாயும், அறுபத்து நான்கு கலா ரூபங்களாகவாவது, அல்லது வாமை முதலிய சத்திகளுடன் கூடின அட்டருத்திரர்களின் ரூபங்களாகவாவது இருக்குங் கேசரங்களைப் பூசிக்கின்றேன்.

கேசரங்களை அட்டருத்திர ரூபமாக வைத்துக் கொள்ளும் பக்ஷத்தில் எட்டு எட்டுக் கேசரங்களை ஒவ்வொரு ருத்திர ரூபமாகப் பாவிக்க வேண்டும். அல்லது படங்கள் ரூபமான ஆயிரந்தளங்களுடன் கூடின அநந்த பத்மத்திற்கும் ஆயிரங்கேசரங்கள் இருக்கின்றனவாகையால் அவற்றை நூற்றிருபத்தைந்து நூற்றிருபத்தைந்தாக எட்டு பாகமாகப் பிரித்து வாமம் முதலிய அட்டருத்திரரூபமாகப் பூசிக்க வேண்டும். அல்லது கர்ணிகையுடன் கூடின எட்டுக் கேசரங்களையாவது அட்டருத்திர ரூபமாகப் பூசிக்கவேண்டும். இப்பொழுது கூறிய இந்த விதியை அட்டவித்தியேசுவரர்களின் ரூபமாகப் பூசிக்கவேண்டிய தளங்களிலும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

ஹாம் கர்ணிகாயை நம: பரிசுத்தமாயும், சத்தி சொரூபமாயும், சுவர்ணவர்ணமுடையதாயுமிருக்கும் சிவாசன பதமத்தின் கர்ணிகையைப் பூசிக்கின்றேன்.

ஹாம் பீஜேப்பியோ நம: வாமை முதலிய ஒன்பது சக்திகள் ரூபமாகவாவது, அல்லது ஐம்பது அக்கரங்கள் ரூபமாகவாவதிருக்கும் சிவாசன பத்மத்தின் கர்ணிகையிலுள்ள வித்துக்களைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிப் பூசித்துப் பின்னர் பத்மத்தை யெல்லா அவயவங்களுடன் கூடினதாகப் பாவனை செய்து, ஹாம் பத்மாசனாய நம: என்று சொல்லிப் பூசித்து, ஹாம் பத்ம முத்திராயை நம: என்று சொல்லிக்கொண்டு பத்ம முத்திரை காட்டவேண்டும்.

பின்னர், கிழக்கு முதல் பிரதக்ஷிணமாக எட்டு எட்டுக்கேசரங்களையும், வாமை முதலிய எட்டுச் சத்திகளையும், வாமாயை நம:, ஜியேஷ்டாயை நம:, ரௌத்திரியை நம:, காள்யை நம:, கலவிகரிண்யை நம:, பலவிகரிண்யை நம:, பலப்பிரமதினியை நம:, சர்வபூததமனியை நம: என்று சொல்லிக் கொண்டு, செம்மை வர்ணமுடையவர்களாயும், சாமரங்களைத் தரித்திருக்கிறவர்களாயும், சிவாசனத்தில் வைக்கப்பெற்ற ஒரு கையையுடையவர்களாயும் சிவனுக்கெதிர்முகமாக கேசரங்களிலிருக்கிறவர்களாயுமுள்ள வாமை முதலிய சத்திகளைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டு தனித்தனி பூசிக்க வேண்டும்.

மனோன்மனியை நம: படிக வா¢ணமுடையவளாயும், பாசம் அங்குசம் அபயம் வரமென்னும் இவற்றைத் தரிக்கிறவளாயும், சிவாசன பத்மத்தின் கர்ணிகையின் இசான திக்கின் மத்தியிலாவது அல்லது ஈசானதிக்கிலாவது இருக்கிறவளாயுமுள்ள மனோன்மனியைப் பூசிக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு மனோன்மனியைப் பூசிக்க வேண்டும்.

பின்னர் அதிபதியுடன் கூடின சூரியன் சந்திரன் அக்கினி சத்தியாகிய இம்மண்டலங்களை மேல் மேல் பூசிக்க வேண்டும். எவ்வாறெனில்:-

ஹாம் சூரியமண்டலாய நம:, கோடி சூரியனுடைய காந்திபோல் காந்தியையுடையதாயும், சிவனுடைய பத்மாசனத்தின் தளத்தின் நுனியை வியாபித்துக் கொண்டிருக்கிறதாயும் உள்ள சூரியமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சூரியமண்டலாதிபதயே பிர்மணே நம: ஐந்து முகத்தையும், நான்கு கைகளையும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களையும், உருக்கி சுவர்ணத்தின் காந்தியையும் உடையவராயும், நமஸ்கார முத்திரையுடன் கூடினவராயும், சிருட்டிக்குக் காரணபூதராயும், ஆன்மதத்துவ ரூபியாயும், சூரியமண்டலத்திற்கு அதிபதியாயுமுள்ள பிரமாவைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சோமமண்டலாய நம: சிவாசனப்த்மத்தின் கேசரங்களினுடைய நுனியை வியாபிக்கிறதாயும், கோடி சந்திரனுடைய குளிர்ச்சியையுடையதாயும் உள்ள சோமமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சோமமண்டலாதிபதயே விஷ்ணவே நம: மேகம் போல் கருமை வர்ணமுடையவராயும், சங்கு சக்கரம் நமஸ்கார முத்திரைகளுடன் கூடின நான்கு கைகளையுடையவராயும், திதிக்கும் காரணராயும், சோமமண்டலத்திற்கதிபதியாயுமுள்ள விஷ்ணுவைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அக்கினிமண்டலாய நம: சிவாசனபத்மத்தின் கர்ணிகையின் நுனியை வியாபித்துக்கொண்டிருக்கும் அக்கினிமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அக்கினிமண்டலாதிபதயே ருத்திராய நம: இரத்தினவா¢ணமுடையவராயும், சூலம் அக்கினி நமஸ்கார முத்திகளுடன் கூடின நான்கு கைகளையுடையவராயும், ஒடுக்கத்திற்குக் காரணராயும், சிவதத்துவ ரூபியாயும், அக்கினி மண்டலத்திற்கதிபதியாயுமுள்ள உருத்திரரைப் பூசிக்கின்றேன்.

விமலாசனமானது கர்ணிகையினும் வேறு என்னும் பட்சத்தில் அக்கினிதிக்கு முதற்கொண்டு ஈசானதிக்கு முடிய முக்குணங்களையும், தெற்கு முதற்கொண்டு வடக்கு முடிய சூர்யசோம அக்கினி ஆகிய இவற்றின் மூன்று மண்டலங்களையும், திருதி முதற்கொண்டு வாயு மூலை முடிய சிவதத்துவம், வித்தியாதத்தும், ஆன்மதத்துவ மென்னும் மூன்று தத்துவங்களையும் பூசித்து, ஹாம் விமலாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு விமலாசனம் முழுமையும் பூசிக்க வேண்டும்.

அதன் பின்னர் விமலாசனத்தின் நடுவில், ஹாம் சத்திமண்டலாய நம: வெண்மை வர்ணமுடையதாயும், மூன்று மண்டலங்களையும் வியாபிக்கிறதாயுமுள்ள இச்சாசத்தி ரூபமான சத்தி மண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சத்தி மண்டலாதிபதயே மகேசுவராய நம: படிக வர்ணமுடையவராயும், எட்டுக் கைகளையுடையவராயும், கத்தி, திரிசூலம், பாணம், அச்சமாலை, கமணடலம், அபயம், வரம், தாமரையென்னும் இவற்றைத் தரிக்கிறவராயும், சத்திமண்டலத்திற்கு அதிபதியாயுமிருக்கும் மகேசுவரனைப் பூசிக்கின்றேன்.

பின்னர் எல்லாச் சிவாசனங்களையும் தியானஞ் செய்து ஹாம் சிவாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு, அந்தச் சத்திமண்டலத்திற்கு மேல் ஞான சத்தி சொரூபமான சிவாசனத்தைப் பூசிக்க வேண்டும்.

இந்த ஆசன முறையில் ஆர்மார்த்த பூசையில் ஆதார சத்தியைப் பிரமாவின் பாகமான பத்ம பீடத்திற் பூசித்து அநந்தர் முதற்கொண்டு சத்திமண்டலம் முடிய லிங்க வேதிகையில் மேலும் மேலும் லிங்கத்தின நாவிவரை பூசிக்கவேண்டும்.

இவ்வாறு தனித்தனி சிவாசனத்தின் அவயவங்களைப் பூசிப்பதற்குச் சத்தியில்லையாயின், சாங்கோபாங்கமாக சிவாசனத்தைப் பாவனை செய்து ஹாம் சிவாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு பூசை செய்ய வேண்டும். இது அநேக ஆசனங்களையுடைய சிவாசனத்தையருச்சிக்கும் முறையாகும்.

இவ்வாறன்றி ஆவாகனஞ் செய்யும் பொழுது பத்மாசனத்தையும், அபிடேக காலத்தில் அநந்தாசனத்தையும், அருச்சிக்குங் காலத்தில் விமலாசனத்தையும், நைவேத்திய காலத்தில் யோகாசனத்தையும், ஆடை சாத்துதல் முதலிய ஏனைய உபசார காலங்களில் சிங்காசனத்தையும் பூசிக்க வேண்டும். அல்லது அபிடேக காலத்தில் சிங்காசனத்தையும், ஆடை சாத்துங்காலத்தில் அநந்தாசனத்தையும், ஆபரணம் சந்தனம் புஷ்பம் அணியுங் காலத்தில் பத்மாசனத்தையும், நைவேத்திய காலத்தில் விமலாசனத்தையும், ஏனைய உபசார காலங்களில் யோகாசனத்தையும் பூசிக்க வேண்டும்.

இவ்வாறு சிவாசனத்தைப் பூசித்து ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று சொல்லிக்கொண்டு இலிங்கத்தின் நாபியில் மகேசுவர தத்துவ ரூபமாயும், நிலையுடைய மின்னலின் காந்திபோல் காந்தியையுடையதாயும், தண்டாகாரமாயும், வேறுபடாத அவயவங்களை யுடையதாயுமுள்ள சிவனுடைய மூர்த்தியைப் பூசித்து, இலிங்கம் பெரிதாயிருந்தால் ஹோம் ஈசான மூர்த்தனே நம: என்பது முதலிய மந்திரங்களால் தண்டபங்கி நியாசம்முண்டபங்கி நியாசம் கலாபங்கி நியாசங்களோடு சிரசு முதல் பாதம் வரை ஈசான முதலிய மந்திரங்களை நியாசஞ் செய்து சத்தியோடு கூடியதாகவாவது கூடாததாகவாவது அந்த அந்த அந்தத்தானங்களில் முப்பத்தெட்டுக் கலைகளையும் நியாசஞ் செய்யவேண்டும். சூத்திரர் சசினி முதலிய சத்திகளையே நியாசஞ் செய்யவேண்டும். பின்னர் ஸ்ரீ கண்ட முதலிய நியாசங்களையும் செய்யவேண்டும். இவ்வாறு சதாசிவதேகஞ் சித்திக்கும் பொருட்டு நியாசங்களைச் செய்து ஹாம் ஹெளம் வித்தியாதேகாய நம: என்று சொல்லிக் கொண்டு பிரிக்கப்பட்ட அவயவங்களோடு கூடிய வித்தியா தேகத்தையுடைய சதாசிவத்தைப் பூசித்து அவருடைய சொரூபத்தை விரிவாய்த் தியானஞ் செய்ய வேண்டும்.