॥ சிவார்ச்சனா சந்திரிகை – சிவபூஜையின் சுருக்கம் ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை:
சிவபூஜையின் சுருக்கம்
சிவபெருமானைப் பத்மாசனத்திலெழுந்தருளச் செய்து அபிஷேகஞ் செய்து, ஆசனத்தையும், மூர்த்தியையும், வித்தியாதேகத்தையும் பூசிக்கவேண்டும். பின்னர்ப் பரமசிவனை ஆவாகனஞ் செய்து ஸ்தாபனம் சன்னிதானம் முதலியவற்றால் பூசித்து மனத்தால் அபிஷேகஞ்செய்வித்து வஸ்திரம் உபவீதங்களைத் தரிக்க வேண்டும். பின்னர்ச்சந்தனம், புஷ்பம், ஆபரணங்களால் அலங்கரித்துத் தூபதீபம் சமர்ப்பித்து அதன் பின்னர் ஆவரணபூசை செய்து நைவேத்தியம், முகவாசம், தாம்பூலம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்துத் தூபம் ஆராத்திரிகஞ்செய்து, பவித்திரஞ்சமர்ப்பிக்கவேண்டும். பின்னர் வெண்மையான விபூதியைத் தரித்துக் கண்ணாடி முதலியவற்றால் உபசாரஞ்செய்து, அதன் பின்னர் பலிகொடுத்து பாத்திய முதலியவற்றாலும் சந்தனம் புஷ்பங்களாலும் உபசாரஞ் செய்யவேண்டும். பின்னர் செபம், தோத்திரம் நமஸ்காரம், பிரதக்ஷிணங்களைச்செய்து அட்டபுட்பங்களாலருச்சித்து விசேஷ அர்க்கியத்தால் பூஜைசெய்ய வேண்டும். பின்னர் ஆவரண தேவதைகளுடன் சிவபெருமானைப் பராங்முகார்க்கியத்தால் எழுந்தருளச்செய்து உரிய காலத்தில் மனத்தின்கண் சிவபெருமானை இருத்தி நிவேதனஞ் செய்த அன்னத்தை உட்கொள்ளல் வேண்டும். இவ்வாறு சிவபூஜா முறையில் சுருக்கம் அறிந்து கொள்க.