Sivarchana Chandrika – Tharabishega Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தாராபிஷேக முறை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தாராபிஷேக முறை

பின்னர் தாராபிஷேகஞ் செய்ய வேண்டும். அந்ததாரையானது ஆன்மார்த்த பூஜையில் பன்னிரண்டங்குலம் அகலமுள்ளதாயும், ஓரங்குல உயரமுள்ளதாயும், மூன்று நெல்லுக்கனமுள்ளதாயுமிருக்கவேண்டும். இவ்வாறு இருப்பது உத்தமம். ஏங்குல அகலமும், அரை அங்குல உயரமும், இரண்டு நெல்லுக்கனமுமிருப்பது மத்திமம். ஐந்தங்குல அகலமும், கால் அங்குல உயரமும், ஒரு நெல்லுக்கனமுமிருப்பது அதமம். அந்தத்தாரைவிழும் இடமானது சுவர்ணம், வெள்ளி, செம்பு என்னுமிவற்றிலொன்றால் வட்டமாகவேனும், நான்கு முக்குச்சதுரமாகவேனும் செய்திருக்க வேண்டும். நான்கு முக்குச் சதுரமாக இருக்கும் விஷயத்தில் நவகோஷ்டங்கற்பித்து நடுக்கோஷ்டத்தின் மத்தியில் ஒரு துவாரமும், நடுத்துவாரத்தைச் சுற்றி எட்டுத் துவாரங்களும், நடுக்கோஷ்டத்தின் ரேகையில் மகா திக்குகளான நான்கு திக்குகளில் நான்கு துவாரங்களும், கிழக்கு முதலுள்ள எட்டுக் கோஷ்டங்களில் தனித்தனி பன்னிரண்டு துவாரங்களுமிருக்க வேண்டும். ஆகவே உத்தம பாத்திரத்திற்கு நூற்று ஒன்பது துவாரமுண்டு.

மத்திம பாத்திரத்திற்கு நடுக்கோஷ்டத்தின் மத்தியில் ஒரு துவாரமும், அதைச்சுற்றி எட்டுத் துவாரங்களும் கிழக்கு முதலிய எட்டுக் கோஷ்டங்களில் தனித்தனி ஐந்தாக நாற்பது துவாரங்களும் ஆக நாற்பத்தொன்பது துவாரங்களுண்டு.

அதமபாத்திரத்திற்கு நடுக்கோஷ்டத்தின் மத்தியில் ஒரு துவாரமும், கிழக்கு முதலிய எட்டுக் கோஷ்டங்களில் தனித்தனி மும்மூன்று துவாரங்களும் ஆக இருபத்தைந்து துவாரங்களுண்டு.

பாத்திரம் வட்டமாயிருக்குமாயின் எட்டுத் தளமுடைய தாமரையை வரைந்து, கர்ணிகையின் நடுவிலும், அதைச் சுற்றியும் ஒன்பது துவாரங்களும், ஒவ்வொரு தளந்தோறும் பன்னிரண்டு துவாரங்களும், தளங்களுக்கு வெளியிலுள்ள வட்டத்திலிருக்கும் மகாதிக்குகளில் நான்கு துவாரங்களுமாக உத்தம பாத்திரத்திற்குத் துவாரங்கள் செய்யவேண்டும். எட்டுத் தளமுடைய தாமரை வரையப்பட்ட மத்திமபாத்திரம் அதம பாத்திரங்களுக்கோவெனில், நான்கு முக்குச் சதுரமான மத்திம அதம பாத்திரங்களுக்குக் கூறியவாறு செய்ய வேண்டும்.

See Also  Ganeshashtakam In Tamil

இத்தகைய பாத்திரத்தைச் சிவலிங்கத்திற்குமேல் கையிற் பிடித்துக்கொண்டு சங்கு ஜலத்தால் நிரப்பி மூலமந்திரத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும்.

இவ்வாறே அபிஷேகத்திற்காக முன்னரே சேகரித்துள்ள பஞ்சகவ்வியம் நீங்கிய தைல முதலிய திரவியங்களை அஸ்திரமந்திரத்தால் புரோக்ஷித்து, கசவமந்திரத்தால் அவகுண்டனஞ்செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணஞ் செய்து இருதய பீஜாக்கரத்தால் அபிஷேக நிமித்தமாக உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு விரிவாக அபிஷேகஞ் செய்ய முடியவில்லையாயின் சுத்தஜலத்தால் அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

பின்னர் மூலமந்திரத்தால் மந்திர புஷ்பஞ்சமர்ப்பித்து மந்திரான்னத்தை நிவேதித்து சுத்தமாயும் மிருதுவாயுமுள்ள ஆடையால் மிருதுவாகத் துடைத்து பத்ம பீடத்திலெழுந்தருளச் செய்ய வேண்டும்.