॥ சிவார்ச்சனா சந்திரிகை – திரவியம் சேகரிக்கும் முறை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
திரவியம் சேகரிக்கும் முறை
அஃதாவது பின்னர்க் கூறப்படும் யாகத்திற்கு உபகரணங்களான எல்லாத் திரவியங்களையும் சிவனுடைய இடது பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆடையினால் பரிசுத்தமான சுத்தஜலத்தால் நிரம்பப் பெற்ற ஜலபாத்திரத்தை வலதுபக்கத்தில் வைத்துக்கொண்டு ஆத்மபூஜை ஆவரணபூஜைகள் செய்வதின் பொருட்டுச் சேகரித்துள்ள கந்தம், புஷ்பம் என்னுமிவைகளைச் சிவபிரானுக்காகச் சம்பாதிக்கப்பட்ட திரவியங்களுக்கு வேறாகவைத்துக் கொண்டு, அருக்கியபாத்திரம், பாத்தியபாத்திரம், ஆசமனீயபாத்திரங்களில் ஜலங்களைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
அருக்கியம் நான்கு வகைப்படும். அவையாவன:- சாமான்னியார்க்கியம், விசேஷார்க்கியம், நிரோதார்க்கியம், பராங்முகார்க்கியம் என்பன.
துவாரபாலர்கள், ஆவரணதேவர்கள், ஆகிய இவர்களுக்குச் சாமான்னியார்க்கிய ஜலத்தை உபயோகித்துக் கொள்ளல் வேண்டும். சிவபெருமானுக்கு அர்க்கியகாலங்களில் விசேஷார்க்கியத்தையும், நிரோதசமஸ்கார காலங்களில் நிரோதார்க்கியத்தையும், விசர்ச்சன காலத்தில் பராங்முகார்க்கியத்தையும் உபயோகித்துக்கொள்ள வேண்டும்.
இந்த நான்கு அர்க்கியங்களுக்கும் நான்கு பாத்திரங்கள் வேண்டும். அவை பத்து, அல்லது ஐந்து, அல்லது இரண்டரை, அல்லது சக்திக்குத் தகுந்தவாறு பலக்கணக்கான நிறையுடையவையாக இருக்க வேண்டும். சுவர்ணம், வெள்ளி, செம்பு, என்னுமிவற்றுள் யாதானுமோர் திரவியத்தால் செய்யப்பட்டிருத்தல் ++ வேண்டும். அவை ஐந்து விரற் கணு உயரமுள்ளவையாகவும், அதே அகலமுள்ளவையாகவும், வட்டமாகவாவது சதுரமாகவாவது இருக்க வேண்டும். வெளியில் எட்டுத் தளமுடைய தாமரையினால் அடையாளஞ் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு விரல் அளவுள்ள விளிம்பு உடையவையாகவும், விரலின் நான்கிலொரு பங்கு கனமுள்ளவையாகவுமிரக்க வேண்டும். கூறப்பட்ட அளவில் பாதி அளவுள்ளதாகவேனும், அதனினும் பாதி அளவுள்ளதாகவுமிருக்கலாம்.
( ++ சுவர்ண முதலியன கிடையாவிடில் பளிங்கு, தேங்காய்க்குடுக்கை, கொம்பு, சிலை, கட்டைகளாலாவது, புதிய மண்பாத்திரங்களினாலாவது புரசு, தாமரை, வாழை இலை முதலியவற்றாலாவது அருக்கியபாத்திரம் செய்து கொள்ளல் வேண்டுமென்று சில பாடபேத முண்டு.)
பாத்தியம், ஆசமனம், பஞ்சகவ்வியம், பஞ்சாமிருதம், கந்தம், தூபம், தீபம் என்னுமிவற்றிற்கான பாத்திரங்களும், மணி முதலியவைகளும், மேலே கூறப்பட்ட பத்துப் பலமுதலிய அளவுள்ளவையாகவே செய்யப்படல் வேண்டும். அவற்றுள் பாத்திய பாத்திரமானது ஆறங்குல அகலமுடையதாயும், நாலங்குல உயரமுடையதாயும், நாலங்குல அகலமுடைய காலுடன் கூடியதாயும், நாலங்குல அளவு மூக்குடையதாயும், ஓரங்குல அளவு விளிப்புடையதாயும் இருக்க வேண்டும். இந்தப் பிராணத்துள் பாதியாகவேனும் அதனினும் பாதியாகவேனுமிருக்கலாம்.
பாத்திய ஜலத்தை நிரப்பத்தக்க பாத்திரமானது எட்டங்குல உயரமுடையதாயும், பதினாறங்குல அகலமுடையதாயும், நாலங்குல உயரமும் எட்டங்குல அகலமுமுடைய பாதத்துடன் கூடியதாயும், ஓரங்குல விளிம்புடையதாயும், கூறப்பட்ட அளவில் பாதி அளவுடையதாகவேனும், அல்லது அதனினும் பாதி அளவுடையதாகவேனும், வட்டமான கைபிடிகளோடுகூடிய இரண்டுபக்கத்தையுடையதாயும் இருக்க வேண்டும்.
ஆசமன பாத்திரமானது பன்னிரண்டங்குல உயரமுடையதாயும், பன்னிரண்டங்குல அளவுள்ள வயிறையுடையதாயும், ஆறங்குல அகலமும் ஆறங்குல உயரமுமுள்ள காலுடன் கூடியதாயும், இரண்டங்குலம் அல்லது மூன்றங்குல உயரமுடைய கழுத்தையுடையதாயும், ஓரங்குலவிளிம்புடையதாயும், மூன்றங்குல அகலமான முகமுடையதாயும், இஷ்டமான அளவுடைய மொட்டின் வடிவான மூடியுடன் கூடியதாயும், நான்கு அங்குல அளவில் மூன்று வாய்ரூபமான, வால்நெல்லளவுள்ள துவாரத்துடன், அடிமுதற்கொண்டு முறையே குறைந்த அளவுள்ள மூக்குடையதாயுமிருக்க வேண்டும். இந்த அளவில் பாதி அளவுள்ளதாகவேனுமிருக்கலாம்
அல்லது பாத்தியபாத்திரம் ஆசமனபாத்திரங்கள் அர்க்கிய பாத்திரம்போல வட்டமாக இருக்க வேண்டும். ஆசமனபாத்திர ஜலத்தை விடக்கூடிய பாத்திரமும், பாத்தியஜலத்தை விடக்கூடிய பாத்திரம்போலிருக்க வேண்டும்.
அர்க்கியபாத்திரம் பாத்தியபாத்திரம் ஆசமனபாத்திரங்களை வைக்கத்தக்க தாங்கலான ஆதார இயந்திரங்கள் முக்காலி ரூபமாயும், மூன்று முகமுடையதாயும், மூன்று கால்களையுடையதாயும், எட்டங்குல உயரமுடையதாயும், பாதத்திற்குமேலும் வளையத்திற்குக் கீழுமான இடத்தில் சிங்கமுகமாக அடையாளமுடையதாயும் இருக்க வேண்டும்.
சுவர்ண முதலியவை கிடையாவிடில் பாத்திய முதலிய பாத்திரங்களையும் அர்க்கிய பாத்திரம் போலவே சிலை மரம் இலை முதலியவற்றால் செய்ய வேண்டும்.
அவற்றுள், சாமான்னியார்க்கியத்திற்கு எள்ளும் அரிசியும் திரவியங்களாகும். விசேஷார்க்கியத்திற்கு ஏலம், லவங்கம், கற்பூரம், திம்பு, சாதிக்காய், முறமென்னும் கந்ததிரவியம், நெல்லு, எள்ளு என்னுமிவைகளாவது அல்லது ஜலம், பால், தருப்பை நுனி, அரிசி, புஷ்பம், எள்ளு, வால்நெல்லு, கடுகு என்னுமிவைகளாவது, அல்லது தருப்பை, அறுகு, நெல், எள்ளு, பால், ஜலம், கடுகு என்னுமிவைகளாவது, அல்லது வால்நெல்லு, கடுகு இல்லாமல் தருப்பை முதலிய ஆறும், தருப்பை, கடுகு, ஜலம், எள்ளு என்னும் நான்கும், அறுகு, கற்பூரம், குங்குமமென்னும் மூன்றுமாவது திரவியங்களாகும்.
நிரோதார்க்கியத்திற்கு தருப்பை, அறுகு, வால்நெல்லு, அரிசி, கடுகு என்னும் ஐந்தும் திரவியங்களாகும்.
பராங்முகார்க்கியத்திற்கு மேற் கூறப்பட்ட ஐந்துடன் எள்ளுச் சேர்த்து ஆறும் திரவியங்களாகும்.
பாத்தியத்திற்கு அறுகு, சந்தனம், கடுகு, விலாமிச்சவேர், குருவேர், குங்குமம் என்னும் ஆறும் திரவியங்களாகும். குங்குமமின்றி ஐந்தும் திரவியங்களெனவும்படும். அல்லது அறுகு, கடுகு, சந்தனம், விலாமிச்சவேர் என்னும் நான்குமாவது, அல்லது குருவேர், சந்தனம், விலாமிச்சவேர் என்னும் மூன்றுமாவது திரவியங்களாகும்.
ஆசமனத்திற்கு ஏலம், லவங்கம், கற்பூரம், சாதி, கோட்டம், திம்பு, கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய், சந்தனம், விலாமச்சைவேர் என்னும் பதினொன்றுமாவது, ஏலம், லவங்கம், கற்பூரம், திம்பு, முறம், சாதிக்காய் என்னும் ஆறுமாவது, அல்லது ஏலம், லவங்கம், கற்பூரம், குருவேர், சாதிக்காய் என்னும் ஐந்துமாவது, அல்லது ஏலம், லவங்கம், கற்பூரமென்னும் மூன்றுமாவது திரவியங்களாகும்.
அர்க்கியத்திற்காக ஏற்பட்ட ஏலமுதலிய திரவியங்கள் உத்தமம் மத்திமம் முதலிய பேதங்களால எண்பது, நாற்பது இருபது, பத்து, ஐந்து நெல் அளவுள்ளவைகளாக இருக்க வேண்டும்.
திரவியஞ் சேகரிக்குமுறை முடிந்தது.