Sivarchana Chandrika Thiripundara Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – திரிபுண்டர முறை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:
திரிபுண்டர முறை

திரிபுண்டரத்தை நான்கு வருணத்தவரும் முறையே ஏழு, ஐந்து, நான்கு, மூன்றங்குலப் பிரமாணமாகத் தரிக்கவேண்டுமென்றும், அல்லது அனைவரும் லலாடம், இருதயம், கை ஆகிய இவைகளில்நான்கு அங்குல அளவாகவும், ஏனைய அவயவங்களில் ஓரங்குல அளவாகவும், தரிக்கவேண்டுமென்றும் பல ஆகமங்களில் கூறப்பட்டிருத்தலால், அவற்றுள் முன்னோரனுட்டித்து வந்த ஒரு முறையைக் கொண்டு லலாட முதலிய தானங்களில் சுட்டுவிரல், நடுவிரல், அணிவிரல், என்னுமிவைகளால் திரிபுண்டரதாரணஞ் செய்ய வேண்டும்.

லலாடத்தில் நடு விரல் அணிவிரல் கட்டைவிரலென்னும் இவைகளாலாவது திரிபுண்டரஞ் செய்யவேண்டும்.

திரிபுண்டரமானது நெருக்கமான மூன்று ரேகையுடன் கூடினதாயும், வேறு வேறாயும் எவ்வாறு சித்திக்குமோ அவ்வாறு திரிபுண்டரத்தைத் தரிக்கவேண்டும்.

திரிபுண்டரதாரணமும், விபூதி ஸ்நானமும், செய்யுங்காலத்து மூன்று முகமும், மூன்று கையும், மூன்று காலும், மூன்று நேத்திரமும் விபூதிப்பூச்சும் சிவந்த புஷபங்களால் அலங்காரமும் உடையவராயும், தாண்டவம் செய்பவராயும் அச்சஞ் செய்பவராயுமுள்ள விபூதி தேவரைத் தியானஞ் செய்து கொள்ளல்வேண்டும்.

திரிபுண்டர ஸ்தானத்தில் அவரவர் குல முறைப்படி அனுட்டித்து வந்த நான்கு கோணமுள்ளவாகவாவது பாதிச் சந்திர ரூபமாகவாவது மேல் நோக்கிய தீபரூபமாகவாவது வேறுவிதமான திரிபுண்டரத்தையாவது தரிக்க வேண்டும்.

எல்லாப் புண்டரமும் தனி விபூதியினாலாவது, சந்தனஞ் சேர்ந்த விபூதியினாலவது, நீரால் நனைத்துத் தரிக்கப்படல் வேண்டும்.

லலாடத்தில் எவ்வாறு புண்டரம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வாறே லலாடம் இருதயம் தோள்கள் நாபி என்னும் இந்த ஐந்து தானங்களிலும் தரிப்பதென்னும் பக்ஷத்தில் முறையே சிவன், மகேசுவரன், உருத்திரன், விட்டுணு, பிரமன் ஆகிய இந்த ஐந்து தேவதைகளையுடையதாயும், லலாடம், கழுத்து, தோளிரண்டு, புயமிரண்டு, முழங்கை இரண்டு, மணிக்கட்டு இரண்டு, மார்பு, வயிறு நாபி, பக்கமிரண்டு பிருஷ்டம் என்னும் இந்தப் பதினாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் சிவன், மகேசுவரன் முதலிய ஐவர்களையும், வாமை முதலிய ஒன்பது சக்திகளையும், அசுவினி தேவரிருவரையும் உடையதாகவும், சிரசு, லலாடம், கண்ணிரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, முகம், கழுத்து, தோளிரண்ட, முழங்கை இரண்டு, மணிக்கட்டு இரண்டு, இருதயம் பக்க இரண்டு, நாபி குய்யம் இரண்டு, இடுப்பின் மேல்பாகம் இரண்டு, துடை இரண்டு, முழங்கால் இரண்டு, கரண்டைக்காலிரண்டு, பாதம் இரண்டு ஆகிய இந்த முப்பத்திரண்டு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் அட்ட மூர்த்திகளையும், அட்ட வித்தியேசுவரர்ளையும் அட்டதிக்குப் பாலகர்களையும், அட்ட வசுக்களையும் உடையதாகவும், மேற்கூறிய முப்பத்திரண்டுடன் இருகைகளின் விரல்கள் இரண்டாகவும், இருகால்களின் விரல்கள் இரண்டாகவும் நான்கு சேர்த்து முப்பத்தாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில், சிவம், சக்தி, மகேசுவரம், சதாசிவம், சுத்தவித்தைமாயை, கலை, வித்தை, அராகம், காலம், நியதி புருடன், பிரகிருதி, அகங்காரம், புத்தி, மனம், புரோததிரம், துவக்கு, சச்சு, சிங்குவை, மூக்கு, வாக்கு, பாதம், கை, பாயு, உபத்தம், சத்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், ஆகாயம் வாயு, அக்கினி, அப்பு, பிருதிவி என்னும் இந்த முப்பத்தாறு தத்துவங்களின் அதிதேவதைகளையுடையதாகவும், இடம் காலமென்னுமிவற்றிற்குத் தக்கவாறு செய்யவேண்டும்.

See Also  Vedambevvani Vedikedini In Telugu

முப்பத்தாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் சிவம் முதல் ஆகாசமீறான தத்துவங்களை வட்டமான சொரூபமுடையனவாயும், படிகம், சூரியகாந்தம், சந்திரகாந்தம், பசுவின்பால், பவளம், இராஜபனை, மை, இந்திராயுதம், இந்திரகோபமென்னும்பட்டுப்பூச்சி, மேகம், பத்மராகம், பவளம், இந்திரநீலம், குங்குமம், ஜபாகுசுமம் இந்திராயுதம், சூரியன், சுவர்ணம், அருகு, மஞ்சள், அறளி, காளமேகம், நீலரத்தினம், நல்முத்து, இரத்தினம், சுவர்ணம், படிகம், என்னுமிந்த வர்ணங்களையுடையனவாகவும், வாயுவை கருமையும், நான்கு கோணமுமுடையதாகவும், அக்கினியை வட்டமும் மூன்று கோணமுமுடையதாகவும் ஜலத்தை வெண்மையும் பாதிச் சந்திராகாரமுடையதாகவும், பிருதிவியை பொன்மையும் நான்கு கோணமுடையதாகவும் பாவனை செய்து ஹாம் சிவதத்துவரூபாயசிவாய நம: என்பது முதலாக ஒவ்வொரு தத்துவ மந்திரங்களால் அந்தந்தத் தானங்களில் புண்டரங்களைத் தரித்துக் கொள்ளல்வேண்டும். இவ்வாறு வேறு பக்ஷங்களிலும் ஊகித்துக்கொள்க.

அவரவர்களின் முன்னோர்களனுட்டித்து வந்தமுறையாகத் தொன்றுதொட்டு நிகழப்பெற்றதாயும் பல திவ்வியாகமங்கள், ஸ்மிருதி, புராணம் என்னுமிவைகளில் கூறப்பட்டதாயுமுள்ள தானம், எண்ணிக்கை, விபூதி, சந்தன முதலிய திரவியவேறுபாடு, தேவதை வேறுபாடு என்னுமிவைகளுடன் கூடினவைகளாகப் புரண்டரங்களைத் தரித்தல் வேண்டும். விபூதிதாரண முறை முடிந்தது.