Sivarchana Chandrikai – Karppooradheebam Samarppikkum Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை

சுவா¢ண முதலியவற்றால் செய்யப்பட்டவையாயும், வட்டமான வடிவம் அல்லது நான்கு முக்குச் சதுரமான வடிவத்தையுடையவையாயும், மொட்டை நுனியிலுடைய தண்டுடன் கூடினவையாயும், இயல்பாகவேனும் மாவினாலேனும் செய்யப்பட்ட தீபாசனங்களுடன் கூடினவையாயும், தீபாசனங்களில் வைக்கப்பட்ட கற்பூரத்திலாவது திரிகளிலாவது ஏற்றப்பட்ட தீபத்தையுடையவையாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரங்களுடன் நீராசனத்தையும் நிரீக்ஷண முதலியவற்றால் சுத்திசெய்து, ஆராத்திரிகம் போலவே இவற்றையும் சுற்றிச் சமர்ப்பித்துப் பூமியில் வைத்து அஸ்திர மந்திரத்தால் பூர்த்தி செய்ய வேண்டும்.

கருப்பூர நீராசன பாத்திரம் மூன்று வகைப்படும். ஒருசாண் அளவுள்ள அகலத்தையுடையதாயும், இரண்டு வால் நெல்லின் கனமுள்ளதாயும், எட்டங்குல அளவுள்ள நாளத்தையுடையதாயும், நாளத்தையொத்த முகுளத்தையுடையதாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரம் உத்தமம். இதன் மத்தியில் ஒரு தீபாசனமும், நை¢து சுற்றுக்களிலும் மறையே ஒன்பது, பதினைந்து, இருபத்தொன்று, இருபத்தேழு, முப்பத்துமூன்று தீபாசனங்களுமாக நூற்றாறு தீபாசனங்கள் இருக்க வேண்டும். அல்லது ஐந்து சுற்றுக்களிலும் முறையே எட்டு, பதினான்கு, இருபது, இருபத்தாறு, முப்பத்திரண்டு தீபாசனங்களாக நூற்றொரு தீபாசனங்களிருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதும் உத்தம பாத்திரமாகும்.

உத்தம பாத்திரத்திற்குக் கூறிய அளவில் பாதியளவு மத்திம பாத்திரத்திற்கு இருக்க வேண்டும். இந்த மத்திம பாத்திரத்தின் நடுவில் ஒரு தீபாசனமும் நான்கு சுற்றிலும் முறையே எட்டு, பதின்மூன்று, பதினெட்டு, இருபத்துமூன்று தீபாசனங்களுமாக அறுபத்து மூன்று தீபாசனங்களிருக்க வேண்டும்.

மத்திம பாத்திரத்தின் அளவில் பாதியளவு அதமபாத்திரத்திற்கு இருக்க வேண்டும். இந்த அதமபாத்திரத்திற்கு நடுவில் ஒன்றும், மூன்று சுற்றுக்களிலும் முறையே ஆறு, பத்து, பதினான்கு தீபாசனங்களும் ஆக முப்பத்தொரு தீபாசனங்களிருக்க வேண்டும்.

See Also  Vande Bharatam Bharatam Vandeanaratam In Tamil

கருப்பூர நீராசனதீபம் சமர்ப்பித்த பின்னர் கண்ணாடி, குடை, சாமரம், விசிறி, பனையோலை விசிறி என்னுமிவற்றை முறையே ஈசான முதலிய மந்திரங்களால் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் அந்தத் தினத்தில் மனம் வாக்குக் காயங்களால் செய்யப்பட்ட குற்றங்கள் நீங்குதற் பொருட்டும், சிவசாயுச்சியத்தைப் பெறுதற்பொருட்டும், அறுகு தருப்பை அக்ஷதை வில்வம் ஆகிய இவற்றுடன் கூடின புஷ்பாஞ்சலியை, ஹாம் ஹெளம் சிவதத்வாதிபதயே சிவாய நம: ஹாம் ஹெளம் வித்தியா தத்வாதிபதயே சிவாய நம: ஹாம் ஹெளம் ஆத்மதத்வாதிபதயே சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு மூன்றுமுறை சமர்ப்பிக்க வேண்டும். மோக்ஷத்தையடைய விரும்புகிறவன் ஆத்மதத்துவம் முதலியவற்றின் முறையாக உச்சரித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சர்வ தத்வாதிபதயே சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு ஒரே முறை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், பூசையினால் திருப்தியையடைந்தவராயும், தனக்கு எதிர்முகமாய் அஞ்சலியுடனிருக்கும் எல்லா ஆவரண தேவர்களாலும் வணங்கப்படுபவராயும், பூசாமண்டபத்தின் துவாரத்திற்கு வெளியிலிருக்கும் பிரமன் விட்டுணு இந்திரன் சந்திரன் சூரியனாகிய இவர்களால் தோத்திரம் செய்யப்படபவராயும், கரையற்ற கருணைக் கடலாயும், பத்தர்களுக்கு விருப்பங்களனைத்தையும் கொடுக்கிறவராயும், சிவபெருமானைத் தியானஞ் செய்து, பூசையின் பலன் சித்திப்பதின்பொருட்டுச் சத்திக்குத்தக்கவாறு மகிமைவாய்ந்த பஞ்சாக்கரத்தைச் செபிக்க வேண்டும்.