Sivarchana Chandrikai – Mundraavathu Aavarana Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – மூன்றாவது ஆவரண பூசை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
மூன்றாவது ஆவரண பூசை

குண்ட சகிதாய நந்திகேசுவராய நம: செம்மை வருணத்தையுடையவராயும், திரிசூலம், அக்கமாலை, வரம், அபயம் என்னுமிவற்றைக் கையிலுடையவராயும், குண்டலினியுடன் கூடினவராயும் இருக்கும் நந்தியைப் பூசிக்கின்றேன்.

பத்மினீ சகிதாய மகாகாளாய நம: பொன்மையும் கருமையும் கலந்த நிறமுடையவராயும், செம்மையான மீசையையும் தலைமயிரையுமுடையவராயும், சூலங் கபாலம் கட்கம் கேடம் என்னுமிவற்றைத் தரிப்பவராயும், பத்தினியுடன் கூடினவராயுமிருக்கும் மகாகாளரைப் பூசிக்கின்றேன்.

ஹ்ராதினீசகிதாய ப்ருங்கிணே நம: வெண்மை வர்ணத்தையுடையவராயும், தசையற்ற வடிவத்தையுடையவராயும், தண்டம் அக்ஷமாலை சிகை என்னுமிவற்றைத் தரிப்பவராயும், சிவனைப் பார்ப்பதில் ஆசையுடையவராயும், ஹ்ராதினியுடன் கூடினவராயுமுள்ள பிருங்கியைப் பூசிக்கின்றேன்.

பிருங்கிணீசகிதாய கணபதயே நம: இரத்தினத்தின் நிறத்தையுடையவரும், பாசம் அங்குசம் தந்தம் பக்குவமான மாம்பழம் என்னுமிவற்றைத் தரிப்பவரும், பிருங்கிணியுடன் கூடினவருமாகிய கணபதியைப் பூசிக்கின்றேன்.

பத்ராசகிதாய விருஷாய நம: படிகத்தின் வருணத்தையுடையவரும், தருமத்தின் சொரூபத்தையுடையவரும், சிவத்தியானம் செய்பவரும், பத்திரையுடன் கூடினவருமாகிய இடபதேவரைப் பூசிக்கின்றேன்.

தேவயானீசகிதாய ஸ்கந்தாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், குழந்தை வடிவத்தையுடையவரும், சத்தி கோழி வரம் அபயம் என்னும் இவற்றைக் கையிலுடையவரும், தேவயானையுடன் கூடினவருமாகிய கந்தரைப் பூசிக்கின்றேன்.

அம்பிகாயை நம: கருமை வர்ண முடையவளாயும், சிம்மவாகனத்தை யுடையவளாயும், சூலம் கண்ணாடி என்னுமிவற்றை இரண்டு கையிலுடையவளாயும் இருக்கும் பார்வதியைப் பூசிக்கின்றேன்.

உரூ பிணீசகிதாய சண்டேசுவராய நம: மேகம்போலும் வருணத்தையுடையவராயும், நான்கு முகங்களையுடையவராயும், கமண்டலம் அக்கமாலை சூலம் பரசு என்னுமவற்றைத் தரிப்பவராயும், சர்ப்பத்தாலாகிய கங்கணத்தையுமுபவீதத்தையுமுடையவராயும், ரூபிணியுடன் கூடினவராயுமுள்ள சண்டேசுவரரைப் பூசிக்கின்றேன்.

See Also  Yantroddharaka Stotram In Telugu

இவ்வாறு சொல்லிக்கொண்டு கிழக்கு முதல் ஈசான கோணம் முடிய அருச்சிக்க வேண்டும்.

அல்லது இடபம், நந்தி, கணேசர், மகாகாளர், கந்தர், பிருங்கி, பார்வதி, சண்டேசுவரர் என்னும் இம்முறையில் கிழக்கு முதலாகவாவது, அல்லது நந்தி, கணபதி, மகாகாளர், பிருங்கி, ரிஷபம், கந்தர் கௌரி சண்டேசுவரர் என்னும் இம்முறையில் கிழக்கு முதலாகவாவது பூசிக்க வேண்டும்.

அல்லது கௌரி, சண்டேசுவரர், நந்தி, மகாகாளர், கணேசர், ரிஷபம், பிருங்கி, கந்தர் என்னும் இம்முறையிலாவது, அல்லது கௌ£¤, சண்டேசுவரர், மகாகாளர், ரிஷபம், கணேசர், கந்தர், நந்தி, பிருங்கி என்னும் இம்முறையிலாவது வடக்கு முதலாகப் பூசிக்க வேண்டும்.

அல்லது பார்வதி, ரிஷபம், கணபதி, நந்தி, மகாகாளர், பிருங்கி, சண்டேசுவரர், கந்தர் என்னும் இம்முறையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்குத் திக்குக்களிலும், நிருதி வாயு ஈசானம் முதலிய உபதிக்குக்களிலும் பூசிக்கவேண்டும். இவர்களைத் தியானஞ் செய்யும் முறைகள் ஒவ்வொரு ஆகமங்களிலுங்கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை அவ்விடங்களிற் காண்க.

இவ்வாறு மூன்றாவது ஆவரணத்தில் கணநாதர்கள் பூசையைச் செய்து நான்காவது ஆவரண தேவதைகளாகிய உலகபாலகர்களின் பூசையைச் செய்யவேண்டும்.