Sivarchana Chandrikai – Naangaavathu Aavarana Pujai In Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நான்காவது ஆவரண பூசை

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
நான்காவது ஆவரண பூசை

இந்திராய சசீசகிதாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், அயிராவதத்தில் ஏறியிருப்பவரும், வச்சிரம் அங்குசம் வரம் அபயமென்னுமிவற்றைக் கையிலுடையவரும், இந்திராணியுடன் கூடியவருமான இந்திரனைப் பூசிக்கின்றேன்.

அக்னயே சுவாகாசகிதாய நம: செம்மை வர்ணத்தையுடையவரும், கமண்டலம் அக்கமாலை சத்தி வரமென்னுமிவற்றைத் தரிப்பவரும், ஆட்டை வாகனமாகவுடையவரும், சுவாகாதேவியினுடன் கூடியவருமாகிய அக்கினி தேவரைப் பூசிக்கின்றேன்.

யமாய காலகண்டீ சகிதாய நம: கருமை வர்ணத்தையுடையவரும், தண்டம் பாசம் வரம் அபயம் என்னுமிவற்றைத் தரிப்பவரும், எருமைக் கடாவில் ஏறியிருப்பவரும் காலகண்டியுடன் கூடினவருமாகிய யமனைப் பூசிக்கின்றேன்.

நைருதாயதாகினீ சகிதாயநம: செம்மை வர்ணத்தையுடைய வரும், கட்கம் கேடம் வரம் அபயமென்னுமிவற்றைத் தரிப்பவரும், பூதத்தில் ஏறியிருப்பவரும், தாகினியுடன் கூடினவருமாகிய நிருருதியைப் பூசிக்கின்றேன்.

வருணாய போகினீசகிதாய நம: சந்திரன் போலும் வர்ணத்தையுடையவரும், பாசம் கமலம் வரம் அபயம் என்னுமிவற்றைக் கையில் உடையவரும், மீன்வாகனத்தில் ஏறியிருப்பவரும், போகினியுடன் கூடினவருமாகிய வருணனைப் பூசிக்கின்றேன்.

வாயவே கோராசகிதாய நம: புகை நிறத்தையுடையவரும், துவசம் கமலம் வரம் அபயமென்னு மிவற்றைக்கையில் தரிப்பவரும், மான்மேல் ஏறியிருப்பவரும், கோரையுடன் கூடினவருமாகிய வாயுதேவரைப் பூசிக்கின்றேன்.

குபேராய கம்பீரிணீ சகிதாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், கதை நிதி வரம் அபயமென்னும் இவற்றைக் கையிலுடையவரும், குறுகிய வடிவத்தையுடையவரும், மனுடன் மேல் ஏறியிருப்பவரும், கம்பீரிணியுடன் கூடினவருமான குபேரனைப் பூசிக்கின்றேன்.

ஈசானாய ஹர்ஷிணீ சகிதாய நம: சந்திரன் போலும் வருணத்தையுடையவரும், சூலம் பாசம் வரம் அபயமென்னும் இவற்றைக் கையிலுடையவரும், மூன்று கண்களையுடையவரும், இடபத்தில் ஏறியிருப்பவரும், ஹர்ஷிணியுடன் கூடினவருமாகிய ஈசானரைப் பூசிக்கின்றேன்.

See Also  Tara Stotram Athava Tara Ashtakamin Tamil

இவ்வாறு சொல்லிக்கொண்டு கிழக்கு முதலாகத் தொடங்கிப் பூசிக்க வேண்டும்.

பிரமணே சாவித்தி£¦ சகிதாய நம: சுவர்ண வருணத்தையுடையவரும், நான்கு முகங்களையுடையவரும், கமண்டலம் அக்கமாலை சுருக்கு தண்டம் என்னுமிவற்றைக் கையில் தரிப்பவரும், அன்னத்தில் ஏறியிருப்பவரும், சாவித்திரியுடன் கூடினவருமான பிரமாவைப் பூசிக்கின்றேன்.

விஷ்ணவே இலக்குசகிதாய நம: மின்னல் வருணத்தையுடையவரும், ஆயிரம் படங்களாலலங்கரிக்கப்பட்ட அநந்தருடைய வடிவத்தை யுடையவரும், சங்கம், சக்கரம் கதை தாமரை யென்னுமிவற்றைக் கையில் தரிப்பவரும், ஆமையில் ஏறியிருப்பவரும், இலக்குமியுடன் கூடினவருமான விட்டுணுவைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு கிழக்குத் திக்கிற்கும் ஈசான திக்கிற்குமிடைய பிரமாவையும், நிருருதிதிக்கிற்கும் மேற்குத் திக்கிற்கும் இடையே விட்டுணுவையும் பூசிக்க வேண்டும். அல்லது யமனுக்கு வடக்குப் பாகத்திலும், குபேரனுக்குத் தெற்குப் பாகத்திலும் அவ்விருவரையும் பூசிக்கவேண்டும்.