Sivarchana Chandrikai – Neivethiyathai Yetrukkollum Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை

சதாசிவர் எந்த முகத்தினால் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுகறாரெனின், மேல் நோக்யி ஊர்த்துவ முகத்தால் ஏற்றுக்கொள்ளுகிறாரென்க. சர்வஞானோத்திரத்தில் “தின்னக் கூடிய பொருள்களையும் உண்ணக்கூடிய அன்னத்தையும், பருகக்கூடியதையும், இன்னும் அநேகவிதமான நாவாலுண்ணக்கூடியது உரிஞ்சக்கூடியதுகளையும், சதாசிவருடைய ஊர்த்துவ முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருக்கின்றமை காண்க.

துவிசதியென்னும் நூலில் “ஓ சப்ரமண்யரே! பக்ஷியம் போஜ்யம் பேயம் லேகியம் சோஷியம் என்னுமிவ்வைந்தினையும் இருதய மந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு ஊர்த்துவ முகத்தில் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருத்தலாம், ஊர்த்துவ முகத்தால் சதாசிவர் ஏற்றுக்கொள்ளுகிறாரென்பது செவ்வனே விளங்குகின்றது.

“எல்லா முகங்களிலும் நைவேத்தியஞ் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஊர்த்துவ முகத்திலாவது சமர்ப்பிக்கலாம்” என்னும் ஆகமவிதியால் ஐந்து முகங்களிலும் தனித்தனி நைவேத்தியம் சமாப்பிக்கலாமென்பது நன்கு விளங்குதலால், சதாசிவர் ஐந்து முகங்களாலும் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளுகிறாரென்று பிறிதொரு பக்கமுமுண்டு.

ஊர்த்துவமுகத்தில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்குமிடத்தில் அந்த முகமானது தெற்கு முகமாயிருப்பதாகப் பூசைசெய்யும் பொழுது தியானஞ்செய்து கொள்ளல் வேண்டும். ஈசுவரனுடைய தெற்கு முகமிருக்கும் இடத்தில் பூசகன் வடக்கு முகமாக இருக்கவேண்டு மென்று நியமமிருத்தலால் அவ்வாறு செய்ய வேண்டுமென்க. அந்த நியமம் வருமாறு:- “ஸ்தண்டிலலிங்கம் சரலிங்கங்களில் பூசகனுக்கு எதிர்முகமாகப் பரமசிவனிருக்னிறார். கும்பம் முதலியவற்றில் மேற்கு முகமாகவும் ஸ்திரலிங்கத்தில் வாயிலுக்கு நேர் முகமாகவும் இருக்கின்றார்” என்பதாம்.

இதனால் ஆத்மார்த்த பூசைக்குரிய சரலிங்கத்தில் பூசிக்குமிடத்தில் பூசகனுக்கு எதிர்முகமாக ஈசுவரர் இருப்பரென்பது பெறப்படுதலின் அவ்வாறு கூறப்பட்டது. ஆகவே, ஆன்மார்த்த பூசையில் பூசகனுக்கு எதிர்முகமாகச் சிவன் இருப்பன் என்பது சித்திப்பின் பொருட்டு இருதயம் குஹ்யம் பாதமென்னும் அவயங்களும் தென்பக்கமாகவே இருக்குமென்பது பெறப்பட்டது.

கிழக்குத் திக்காகிய ஈசுவரனுக்கு முன்னரும், ஈசுவரனுடைய சத்தியிருக்கக்கூடிய வடக்குத் திக்கிலும், ஈசுவரனுடைய பிருஷ்டமிருக்கும் திக்கான மேற்கிலும் பூசகனிருந்து பூசிக்கக் கூடாது; ஈசுவரனது பலது பக்கத்திலமர்ந்து பூசிக்க வேண்டும் என்று ஆகமங்களில் கூறப்பட்டிருத்தலால், ஈசுவரனுக்கு முன்னரிருந்து பூசை செய்யக்கூடாதென்பது விளங்கும். ஆகையால், இவ்விடத்தில் ஊர்த்துவ முகத்திற்கு நைவேத்தியஞ் சமர்ப்பிக்குங்கால் எதிர்முகமாக இருந்து சமர்ப்பித்தல் எவ்வாறு கூடுமெனின், கூறப்பட்டவிலக்கு, கிழக்குமுகமாக இருக்கும் ஸ்திரலிங்கத்திற்குக் கூறியதென அறிந்துகொள்க. எதனாலெனின், “ஸ்தண்டிலலிங்கத்திலும் சரலிங்கத்திலும் பூசகனுக்கு எதிர்முகமாகச் சிவன் இருக்கின்றான்” என்ற விசேடவிதி காணப்படுதலாலென்க.

“அக்கினி அல்லது நிருருதிதிக்கில் இருந்துகொண்டு ஈசுவரனைப் பூசிக்க வேண்டும்” என்னும் விதியிருத்தலால் பூசகனுக்கு எதிர்முகமாகச் சிவபெருமான் இருப்பரென்பது பெறப்படவில்லையேயெனின், அவ்விதியும் ஸ்திரலிங்க சம்பந்தமென அறிந்து கொள்க.

ஸ்திரலிங்கம் அனைவருக்கும் உரிமையானமையாலும், உலகமனைத்திற்கும் அனுக்கிரம் செய்கின்றமையாலும், நான்கு திக்குக்களிலும் ஈசுவரனது விருப்பப்படி முகங்கள் இருக்கின்றமையால் எந்தத்திக்கில் வாயிலிருக்கின்றதோ அந்தத் திக்கை ஈசுவரமுடைய நேர்முகமாகக் கொள்ள வேண்டும். ஊர்த்துவமுகமும் இருதயம் பாதமென்னும் இவைகளுடன் வாயிலுக்கு நேர்முகமாக இருக்கின்றது. “துவாரத்திற்கு எதிர்முகமாக ஊர்த்துவ முகத்தைச் செய்யவேண்டும்.” “எந்தத்திக்கில் துவாரமிருக்கின்றதோ அந்தத் திக்கைக் கிழக்காக வைத்துக்கொள்ளல் வேண்டும்” என்னும் இவ்விரண்டு பிரமாணங்களாலும் வாயிலுக்கு எதிர் முகமாக ஊர்த்துவ முகம் இருக்கின்றதென்பது வலியுறுத்தப்பட்டது.

அல்லது ஊர்த்வமுகமொன்றே இருதயம் குஹ்யம் பாதமென்னுமிவற்றுடன் வாயிலுக்கு எதிர்முகமாக இருக்கின்றது; தற்புருடம் முதலிய முகங்கள் கிழக்கு முதலிய திக்குக்களிலேயே இருக்கின்றன; துவாரத்தின் பேதத்தால் அவை பேதத்தையடையா என்று கொள்க. “ஊர்த்துவ முகத்திற்கு எந்தத்திக்கு மிருக்கலாம். தற்புருடம் முதலிய முகங்கள் கிழக்கு முதலிய திக்குக்களில் இருப்பதை விடுகிறதில்லை” என்னும் வசனத்தால் தற்புருடம் முதலிய கிழக்கு முதலிய திக்குக்களிலேயே இருக்கின்றனவென்பது பெறப்பட்டது. கூறப்பட்ட இரண்டு பக்கங்களும் காமிகத்திற் கூறப்பட்டவையே. இதுபற்றியே காமிகத்தில் மேற்குத் துவாரத்தை யருச்சிக்கும்பொழுது “துவாரத்திற்கு எதிர்முகமாக ஊர்த்துவ முகத்தைச் செய்யவேண்டும்” என்று ஆரம்பித்து, தற்புருடமுகத்தைக் கிழக்குத் திக்கிலாவது மேற்குத்திக்கிலாவது சிந்திக்கலாமென்றும், அகோர முகத்தைத் தெற்குத் திக்கிலாவது வடக்குத் திக்கிலாவது, சிந்திக்கலாமென்றும், வாமதேவமுகத்தை வடக்குத்திக்கிலாவது தெற்குத் திக்கிலாவது சிந்திக்கலாமென்றும், சத்தியோசாத முகத்தை மேற்குத்திக்கிலாவது சிழக்குத் திக்கிலாவது சிந்திக்கலாமென்றும் கூறப்பட்டிருக்கின்றது.

See Also  Sri Dainya Ashtakam In Tamil

அந்தக் காமிகத்திலேயே தெற்குத் துவாரத்தை யருச்சிக்குங்கால் அகோரம் அல்லது தற்புருடத்தைத் தெற்குத் திக்கிலும், அகோரம் அல்லது சத்தியோசாதத்தை மேற்குத் திக்கிலும், சத்தியோசாதம் அல்லது வாமதேவத்தை வடக்குத் திக்கிலும், வாமதேவம் அல்லது தற்புருடத்தைக் கிழக்குத் திக்கிலும் அருச்சிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது.

எல்லாத் திரலிங்கங்களையும் வடக்கு முகமாக இருந்து பூசிக்க வேண்டும். இதற்கு பிரமாணம் “லிங்கமாவது பிரதிமையாவது இன்னும் மற்றவையாவது எந்தத் திக்கு முகமாகச் செய்யப்படுகின்றனவோ அந்தத் திக்கில் பூசகன் வடக்கு முகமாயிருந்து கொண்டு சிவனைப் பூசிக்க வேண்டும்;” என்னு மிவ்வசனமேயாம்.

இவ்விடத்தில் முக்கியமான கிழக்கு முகமாக இருக்கும் லிங்கத்தைப் பூசிக்கும் பொழுது முக்கியமான ஆக்கினேய திக்கிலிருக்கும் பூசகனுக்கு முக்கியமாகவே வடக்கு முகமாக இருத்தல் பொருந்துகின்றது. (மேற்கு முகமாயிருக்கும்) ஈசுவரனுக்கு இடது பக்கத்தில் நிருதிதிக்கில் அம்பிகை அமர்ந்திருப்பின், அவ்விடத்தில் பூசகனிருந்தால், அம்பிகை இருக்கக்கூடிய பாகமான வடக்குத்திக்கில் இருக்கக்கூடாதென்னும் விலக்கிற்கு பிரோதமாகுமேயெனின், ஆகாது. எவ்வாறெனில், கூறுதும்:- காமிகத்தில் பச்சிமத்துவாரார்ச்சன படலத்தில் இடது அல்லது வலது பக்கத்தில் ஈசுவரனுடைய பார்வையையும், இரண்டு கைகளையும், ஒரு முகத்தையுமுடைய மனோன்மனியை ஸ்தாபிக்க வேண்டுமென்று மேற்கு முகமான லிங்க பூசாவிதியில் வலது பக்கத்திலும் தேவி இருக்கலாமென்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றமையால் நிருருதி திக்கிலிருக்கும் பூசகன் ஈசுவரருடைய வலது பக்கத்திலமர்ந்திருக்கும் ஈசுவரியினுடைய பாவனையைச் செய்ய வேண்டும். ஆகையால் விரோதமில்லையென்க.

இவ்வாறே சுவாமி தெற்கு முகமாக இருக்கும்பொழுது அந்தத் திக்குமுக்கியமல்லாத கிழக்காகும். அப்பொழுது நிருருதி திக்கு ஆக்கினேய திக்காகும். கிழக்கு வடக்காகும். அகையால் நிருதி திக்கில் பூசகன் கிழக்கு முகமாக இருந்துகொண்டு பூசிப்பது, ஆக்கினேயதிக்கில் வடக்கு முகமாக இருந்து கொண்டு பூசிப்பதாக ஆகும்.

இவ்வாறே சுவாமி வடக்குமுகமாக இருக்கும்பொழுது அந்தவடக்கே கிழக்காகும். ஈசானமே ஆக்கினேயமாகும். மேற்கே வடக்காகும். ஆகையால் பூசகன் ஈசானத்தில் மேற்கு முகமாயிருந்துகொண்டு பூசிப்பது ஆக்கினேயதிக்கில் வடக்கு முகமாக இருந்துகொண்டு பூசிப்பதாக ஆகும்.

இவ்வாறாதலின் பூசகருக்கு எதிர்முகமாக இருப்பதென்னும் நியமமானது (ஆத்மார்த்த பூசையில்) முரண்படுகிறதில்லை. எல்லா ஆர்மார்த்த பூசாப் பிரகரணத்திலும் “வடக்குமுகமாக ருசிராதி ஆசனத்தில் அமர்ந்திருக்கவேண்டும்” என்று விதித்திருக்கின்றமையால் பூசகன் வடக்கு முகமாக இருக்க வேண்டும்.

இவ்விடத்தில் ஒரு விசேடம் வருமாறு:- பாவத்தை நீக்குதற்குப் பிரியமுள்ளவர்களும், முத்தியை அடைதற்குப் பிரியமுள்ளவர்களும், முகங்களுக்குரிய திக்குக்களை அநுசரித்து அகோர முகத்தைத் தனக்கு எதிர்முகமாக இருப்பதாகத் தியானிக்க வேண்டும். “ஈசுவரனுக்கு முன்னர் இருக்கக் கூடாது. பின்பக்கத்திலும் இருக்கக் கூடாது. சத்தியின்பக்கத்திலும் இருக்கக்கூடாது. பாவநீக்கம் மோக்ஷம் என்னுமிவை உண்டாதற் பொருட்டுத் தென்பக்கத்திலிருந்துகொண்டு ஈசுவரனை யருச்சிக்க வேண்டும். பனிகாற்று குளிரென்னுமிவை தாமரையை எவ்வாறு பொசுக்கின்றதோ, அவ்வாறே அகோரமுகம் மிகவுஞ் சாந்தமாயிருப்பினும் பாவக்கூட்டங்களைக் கெடுக்கும். யானை பெரிதாயினும் மாவுத்தனுக்கு எவ்வாறு கட்டுப்படுகின்றதோ, அவ்வாறே பாவங்கள் பெரியனவாயினும் அகோரமுகத்திற்குக் கட்டுப்படகின்றன. ஆகையால் ஆப்தனாகிய ஈசுவரனுடைய வாக்கியத்திற்குக் கட்டுப்பட்டு வடக்கு முகமாக இருந்துகொண்டு பூசைசெய்ய வேண்டும்” என்னுமிந்த வாக்கியங்களால் அகோரமுகத்திற்கு எல்லாப் பாவங்களையும் போக்கும் பெருமை காணப்படுதலால் அந்த முகம் மிகவும் மேலானது.

அன்றியும் வாயுசம்கிதையில் “சம்சார முதலிய பாசங்களினின்றும் அச்சமடைந்த யாவரும், இந்தப் பிறவியில் பிறப்பில்லாத இந்த அகோர முகத்தையே தியானஞ்செய்து ஆன்மா¬க்ஷயின் பொருட்டு உருத்திரருடைய அந்தத் தெற்கு முகத்தைச் சரணமடைகின்றனர்” என்னும் பொருளையுடைய சுலோகத்தால் தெற்கு முகம் முத்தியைக் கொடுக்கக்கூடியதென்று பாராட்டப் பெற்றிருக்கின்றது.

See Also  Matripanchakam In Tamil – மாத்ருʼபஞ்சகம்

போகம் மோக்ஷங்களை விரும்புகின்றவர்கள் துவாரத்திற்கு எதிர்முகமாக இருப்பது சாதகருக்கு எதிர்முகமாக இருப்பதென்னும் இவ்விரண்டனுள் சாதகருக்கு எதிர்முகமாக இருப்பதென்னும் பக்கத்தை அனுசரித்துத் தற்புருட முகத்தைத் தனக்கு எதிர்முகமாக இருப்பதாகத் தியானிக்க வேண்டும்.

பிரசன்னத்வம் யதீசஸ்ய என்னும் சுலோகத்தால் ஈசானம் முத்திக்கேது வென்றும், தற்புருடம் திதிக்கேது வென்றும், அகோரம் நாசத்திற்கேது வென்றும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகையால் தற்புருடம் திதிக்கு ஏதுவென்பது சித்திக்கின்றமைபற்றி, போக மோக்ஷங்களை விரும்புகின்றவர்கள் அந்த முகத்தைத் தியானிக்க வேண்டுமென்க. எவ்வாற்றானும் ஊர்த்துவமும் தெற்குமுகமாகவே இருக்கும் என்பது பெறப்பட்டது.

ஆகையால் ஆத்மார்த்தபூசையில் ஈசுவரனுக்கு எதிர்முகமாகச் செய்யப்படும் ஆவாகனம் முதலியன தௌ¤வாகச் சித்திக்கின்றன. இன்றேல் பரார்த்த பூசையில் ஈசுவரனுடைய ஊர்த்துவ முகம் மேல்முகமாக இருக்கின்றதென்பது எவ்வாறு விலக்கப்படுகின்றதோ, அவ்வாறே இவ்விடத்தும் விலக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டுச் சமாதானம் சொல்ல வேண்டியதாக வரும்.

பரார்த்த பூசையில் ஈசுவரன் உலகமனைத்திற்கும் அநுக்கிரகஞ் செய்கின்றான். அப்பொழுது பூசகனுக்கு எதிர்முகமாக இருக்க வேண்டுமென்பது நியதமன்றெனக்கருதி, துவாரத்திற்கு எதிர் முகமாக இருப்பதாகவே வைத்துக்கொண்டு அப்பிரதானமாகத் தனக்கு எதிர் முகமாக இருப்பதாய் மிகவும் சிரமப்பட்டு நிச்சயம் செய்துகொண்டோம்.

சாதகனுக்கு அநுக்கிரகம் செய்வதற்காக ஏற்பட்டுள்ள இந்த ஆத்மார்த்த பூசையில் “ஸ்தண்டிலலிங்கத்திலும் சரலிங்கத்திலும் ஈசுவரர் சாதகருக்கு எதிர்முகமாக இருக்கின்றார்” என்னும் வசனத்தால் சாதகருக்கு எதிர்முகமாக இருப்பதென்பது செவ்வனே விளங்கும்பொழுது எதன் பொருட்டு இதற்கு மாறாக சாதகருக்கு எதிர்முகமாக இல்லையென்று கொள்ள வேண்டுமென்பது சிலர் கொள்கை.

வேறுசிலர் ஆத்மார்த்த பூசையில் ஊர்த்துவமுகமும், இருதயம் குஹ்யம் பாதமென்னும் இவற்றுடன் தற்புருடமுகமும் கிழக்கு முகமாகவே இருக்கின்றன. அம்சுமான முதலிய ஆகமங்களில் ஆர்மார்த்த பூசாப்பிரகரணத்திற்றான “ஈசுவரனுடைய முன் பக்கத்திலும் பின்பக்கத்திலும் சத்தியின் பக்கத்திலும் இருக்கக் கூடாது” என்னும் வசனம் படிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் இவ்விதி பரார்த்த பூசாசம்பந்தமென்று சொல்ல முடியாது. “பூசைசெய்யுங்கால் ஈசுவரர் பூசகருக்கு எதிர்முகமாக இருக்கிறார்” என்னும் வசனமானது தீக்ஷ£ப்பிரகரணத்தில் படிக்கப்பட்டிருக்கின்றமையால் நித்திய பூசை செய்யும்பொழுது பூசகருக்கு எதிர்முகமாக இருக்கிறாரென்பது பெறப்படுகிறதில்லை. தீக்ஷையில் ஆர்மார்த்தலிங்க பூசைக்குச் சம்பந்தமில்லாமையால் “சரலிங்கத்தில் சாதகருக்கு எதிர்முகமாக இருக்கிறார்” என்னும் வசனம், நித்திய பூசாசம்பந்தமென்று சொல்லக் கூடாது. தீக்ஷையிலும் ஆத்மார்த்த லிங்கத்தைப் பூசிப்பதில் குற்றமில்லாமையாலென்க. ஆகையால் ஒருவித குற்றமுமில்லாமை பற்றிக் கிழக்குத் திக்கிலும் ஈசுவரன் முன்னரும் இருக்கக் கூடாதென்ற வசனத்தால் நித்தியம் நைமித்திகம் காமியமென்னுமிவற்றில் எப்பொழுதும் ஈசுவரர் கிழக்கு முகமாக இருக்கிறாரென்பது சித்தித்தது. இதற்குப் பிரமாணம் “ஓ லெக்ஷ§மீ! கலாசரீரியான ஈசுவரர் மேற்கே பிருஷ்டத்தையுடையவராக இருக்கின்றார்” என்னும் இலக்ஷ§மீ கேசவசம்வாதமாகும்.

அன்றியும் முகபிம்பமென்னும் ஆகமத்தில் “தீக்ஷை முதலியவற்றில் கடத்திலிருக்கும் ஈசுவரனை மேற்கு முகமாகத் தியானிக்க வேண்டும்; ஈசானம் தற்புருடமென்னுமிவற்றை நித்திய பூசையில் கிழக்கு முகமாகத் தியானிக்க வேண்டும்” என்றும், பிருகத் பார்க்கவ முதலியவற்றில் “முகம் இருதயம் என்னும் இவற்றையுடைய சிவனை எப்பொழுதும் கிழக்கு முகமாகத் தியானிக்க வேண்டும்; தீக்ஷை முதலியவற்றில் கலசத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும் பொழுது அவரை மேற்கு முகமாகத் தியானிக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகவே இவ்விரண்டு பிரமாணங்களிலுள்ள நித்ய, எப்பொழுதும், என்னும் இரண்டு சொற்களாலும் விசேடமான தீக்ஷை முதலியவற்றைத் தவிர ஏனைய நித்திய நைமித்திக காமிகங்களிலும், ஈசானம் தற்புருடமென்னுமிவை கிழக்கு முகமாக இருக்கின்றன என்பது பெறப்படுதலால், துவாரத்திற்கு எதிர்முகமாக இருக்கும் ஸ்திரலிங்கத்துக்கின்றி ஆன்மார்த்த லிங்கத்தைக் குறித்ததே அந்த விதியென்பது வலியுறுத்தப்படுதலால், நித்திய நைமித்திக காமியரூபமான ஆன்மார்த்த பூசையில் ஈசுவரர் கிழக்கு முகமாக இருக்கின்றாரென்பது இயல்பாகவே சித்தித்தது.

See Also  1000 Names Of Sri Sharabha – Sahasranama Stotram 2 In Tamil

தீக்ஷை முதலிய நைமித்திகங்களில் விசேட வசனங்களிருத்தலால் தெற்கு முகமாக இருக்கிறாரென்பது முதலியன அதற்கு அபவாத சாஸ்திரமாகும். அன்றியும் ஈசானம் தற்புருடமாகிய இரண்டனுள் தற்புருட முகத்தினாலேயே சதாசிவர் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றனர்.

“துவாரம் மேற்கு முகமாயிருப்பினும் நைவேத்தியத்தைக் கிழக்கு முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்னும் சூக்கும ஆகம வசனத்தால் ஈசானமுகம் சிரோரூபமாக இருப்பதால் அந்த முகத்தில் நைவேத்தியஞ் சமர்ப்பிப்பது உலகவிரோதமாகையால் தற்புருட முகத்தால் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளுகிறாரென்பது ஒரு பக்கம். ஆனால் தற்புருட முகத்தினாற்றான் ஏற்றுக்கொள்ளுகிறாரென்று வலியுறுத்தக் கூடாது.

“பக்ஷியம் போஜ்யம் அன்னம்பாநீய மென்னுமிவற்றை ஊர்த்துவ முகத்திற் கொடுக்க வேண்டும்” என்று முன்னர்க் கூறப்பட்ட இதனோடு மாறுபட்ட வாக்கியங்களாலும் “ஓ சுப்பிரமண்யரே ஆகுதியை ஊர்த்துவ முகத்திற் கொடுக்க வேண்டும்” என்பதனாலும், ஊர்த்துவ முகத்தாலும் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறாரென்பது பெறப்படுகின்றமை காண்க.

அன்றியும் “ஐந்து முகங்களிலும் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்” என்னும் வாக்கியங்களாலும், “பின்னர் ஐந்து முகங்களிலும் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றுள் ஈசானத்திற்குச் சுத்த அன்னமும், தற்புருடத்திற்குச் சர்க்கரையன்னமும், அகோரத்திற்கு எள்ளன்னமும், வாமதேவத்திற்குப் பயறன்னமும், சத்தியோசாதத்திற்குப் பாயசமும், தத்தம் பெயரை உச்சரித்துக்கொண்டு அந்தந்தத் திக்கில் ஈசுவரனுக்கு முன்னர்ச் சமர்ப்பிக்க வேண்டும்” என்னும் வாக்கியங்களாலும், “குறிக்கப்பட்ட ஐந்து அன்னங்களும் கிடையாவிடில் சுத்தான்னத்தை நிவேதனஞ் செய்யலாம்” என்னும் வாக்கியங்களாலும் ஐந்து முகங்களாலும் ஈசுவரர் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுகிறாரென்பது பெறப்படுகின்றது.

ஆகமங்களுக்கு முற்றும் பிராமாண்யத் ஒப்புக்கொள்ளுமிடத்தில் அவற்றுள் ஒர விதியையனுட்டிக்கலாம் ஒரு விதியை யனுட்டிக்கக் கூடாதென்று சொல்லுதல் கூடாது. ஆகையால் அந்தந்த ஆகம வசனங்களால் பெறப்பட்ட மூன்று மூன்று பக்கங்களும் (அதாவது தற்புருடத்தில் சமர்ப்பிக்கலாமென்பதும், ஈசானம் தற்புருடம் இரண்டிலும் சமர்ப்பிக்கலாமென்பதும், ஐந்து முகங்களிலும் சமர்ப்பிக்கலாமென்பது மெனவரும் மூன்று பக்கங்களும்) வேறு வேறாகவே யிருக்கின்றனவென்று சொலலுவதுதான் பொருத்தம். இது நிற்க.

நைவேத்திய முத்திரையினால் சிவனிடத்தில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கும் பூசகன் சிவனுடைய கையில் சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது அவர் முகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமா? எனில், கூறுதும், இவ்விடத்தும் வேறு வேறாகவே விதியிருக்கின்றது. எவ்வாறெனில், “கோஸ்தனி முத்திரையால் அமிருதீகரணஞ் செய்த பின்னர் நிவேதனஞ் செய்து அதன்பின்னர் புஷ்பத்தைக் கீழே போடவேண்டும். பின்னர் வலதுகையில் சுத்தமான நீரைச் சமர்ப்பித்தல் வேண்டும்” என்னும் விதிப்படி வலது கையில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கலாமென்று காணப்படுதலாலும், “சேகரித்து வைத்திருக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஊர்த்துவ முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; ஓ சுப்பிரமண்ணியரே! ஊர்த்துவ முகத்தில் ஆகுதியைக் கொடுக்க வேண்டும்” என்னும் விதிப்படி முகத்தில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கலாம் என்று காணப்படுதலாலும் இரண்டு பக்கங்களுமுண்டு.

இருதயம் முதலியவற்றுடன் கூடின தற்புருட முகத்தில நிவேதனஞ் செய்ய வேண்டிய பொருள்களுள் திரவகப் பொருள் நீங்கிய ஏனைய பக்ஷியம், போஜ்யம் யாவற்றையும் அபயமுத்திரையில்லாத இடதுகையில் சமா¢ப்பிக்க வேண்டும்.

ஏனைய முகங்களில் நிவேதனஞ் செய்யவேண்டிய பானகம் முதலிய திரவகத் திரவியமனைத்தையும் அக்கினி ஹோத்திரத்திற்குச் செய்யப்படும ஆகுதிபோல் சூக்குமாச ரூபமாகப் பாத்திரங்களினின்று வெளிக்கிளம்பும்படி செய்து அந்தந்த முகம்வரை நைவேத்தியமுத்திரையால் கொண்டு போனதாகப் பாவித்து நேர்முகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகவே கையிலும் நைவேத்தியத்தைச் சமாப்பிக்கலாமென்பது பெறப்படுதலால் ஈசுவரனுடைய கையைச் சுத்தஞ் செய்வது என்பது என்னும் கிரியைக்குப் பயனில்லையென்பது இல்லை. பூசகனுடைய கையினால் ஈசுவரனுடைய முகத்தில் நைவேத்தியத்தைக் கொடுக்காமையால் பூசகனுடைய கைக்கு நிர்மாலியத்தால் ஏற்பட்ட கலப்புத் தோஷம் கிடையாது.

நைவேத்தியஞ்சமர்ப்பிக்குமுறையும் ஏற்றுக்கொள்ளு
முறையும் முடிந்தன