॥ சிவார்ச்சனா சந்திரிகை – தந்த சுத்தி ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை
தந்த சுத்தி
பின்னர் இருதயமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு தோலுடன் கூடிய குச்சியை எடுத்துக்கொள்ளல்வேண்டும். கணுவின் நுனிக்குச் சமீபமாகக் குச்சியை ஒடிக்கலாகாது. குற்றியின் முனையில் நுனியிருக்கவேண்டும். கடைவிரலுக்குச் சமமான பருமனாகவேனும், அல்லது பல்லிற்குத் தக்கபடி சிறிதாகவேனுமிருக்க வேண்டும். இவ்வித இலக்கணம் வாய்ந்த குச்சியானது, நைட்டிகர்களுக்கு எட்டங்குல அளவாகவும், போகிகளுக்குப் பன்னிரண்டங்குல அளவாகவும், பிரமசாரிகளுக்கு பத்து அல்லது எட்டு அல்லது ஏழு அங்குல அளவாகவும், சன்னியாசிகளுக்கு ஆறு அங்குல அளவாகவும், பெண்களுக்கு நாலங்குல அளவாகவும் நீளமாயிருக்க வேண்டும்.
நாவல், மா, மருது, அசோகம், விளா, மகிழம், இத்தி, அத்தி, சிறுசண்பகம், சங்கம், குருக்கத்தி, கடம்பம், நாயுருவி என்னும் இந்தமரங்களின் குச்சிகளை போகிகள் உபயோகிக்கலாம்.
வாகையும், புங்கமும், நெல்லியும், தேவதாரு, நொச்சி, தாரை என்னும் மூன்றும், கருங்காலிமரம் போலக்குணத்தைச் செய்யுமாதலால் இவையும், தானிக்காய் சீரகமென்று சொல்லக்கூடியபழ முண்ணிப்பாலைமரமும், ஆமணம், ஆலும், அரசும், மருங்கையும், நறுவிலியும், வஞ்சியும், நெல்லிவிசேஷ, அத்தியும், ஈச்சையும், தென்னையும், பலாசமும், பொரசமும், பனையும் என்னும் இவற்றின் குச்சிகளை உபயோகித்தல் கூடாது. திருணபர்ணர், பிசாசவிருக்ஷம் என்னுமிவற்றின் குச்சிகளையும், செல்கல்லையும், தணல்களினின்றுண்டான சாம்பல்களையும், வெங்ககைகளையும், சுசர்ண முதலியவற்றால் செய்யப்பெற்ற தூள்களையும் உபயோகித்தல் கூடாது.
பிரதமை, நவமி, சஷ்டி, துவாதசி, ஐந்து பர்வதினங்கள், உபவாசதினங்கள், ஜன்மம், அனுஜன்மம், திரிஜன்மம் என்னும் மூன்றுதினங்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வியதீபாதம், கிரகணதினம், சிரார்த்ததினம் என்னுமிவற்றிலும், சூரியோதயத்திற்குப் பின்னரும் பல்துலக்குதல் கூடாது.
விலக்கப்பட்ட தினங்களிலும், விதிக்கப்பட்ட குச்சிகள் கிடையாத காலத்தும் பன்னிருமுறை வாய்கொப்பளிக்க. அல்லது இலைகளால் சுத்திசெய்க. நாவின் அசுத்தத்தை நீக்கக்கூடிய திரவியங்களால் நாவையுஞ்சுத்திசெய்துகொள்க. நெற்றி, கண், காது, மூக்கு, முகம் என்னுமிவற்றிலுள்ள அசுத்தங்களையும், சுக்கிலம், மலம் மூத்திரங்களாலுண்டான அசுத்தங்களையும், கை, கால் முதலியவற்றிலுள்ள அசுத்தங்களையும், இவைபோன்ற எல்லா அசுத்தங்களையும் சுத்திசெய்துகொள்க. மூக்கும், காதும், கண்ணுமாகிய இவைகள் கழுவுவதால் சுத்தி யடைகின்றன. நகம், தலை மயிர் என்னுமிவை மண்ணினாலும், நெல்லிக்காய் முதலியவற்றாலும் சுத்தியடைகின்றன. இவ்வாறு அசுத்தங்களைச் சுத்திசெய்த பின்னர்த் தீயசொப்பனங்களை நாசஞ் செய்வதாயும், எல்லா அசுத்தங்களையும் போக்குவதாயுமுள்ள வாருணஸ்நானத்தைச் செய்ய வேண்டும். வாருணம் – நீர்.