॥ சிவார்ச்சனா சந்திரிகை – பாத்தியம் முதலியவற்றின் பூஜை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பாத்தியம் முதலியவற்றின் பூஜை
பின்னர் பாத்தியம், ஆசமனீயம் சாமான்னியார்க்கியம், விசேஷார்க்கியம், நிரோதார்க்கியம், பராங்முகார்க்கியம் என்னும் இவற்றின் பாத்திரங்களின், முக்காலிகளையும், ஈசுவரனுடைய சன்னிதியில் இடது பக்கம் முதல் முறையாக வைத்துக் கொண்டு முக்காலிகளின் பாதங்களில் பிரம, விட்டுணு, உருத்திரர்களையும், அதன் வளையங்களில் இடை என்னும் பெயருடைய ஆதாரசக்தியையும் அருச்சித்து பாத்திய முதலிய பாத்திரங்களை அஸ்திரமந்திரத்தால் சுத்தி செய்து முக்காலிகளில் வைத்துக்கொண்டு அஸ்திரமந்திரம் அல்லது வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தை உச்சரித்து, சுத்தஜலத்தால் பாத்திரங்களை நிரப்பி, கவசமந்திரத்தால் பாத்திய முதலியவற்றிற்குரிய திவியங்களை அந்தந்தப் பாத்திரங்களில் இடவேண்டும். திரவியங்கள் கிடையாவிடில் சுத்த ஜலத்தை மாத்திரம் நிரப்பவேண்டும்.
பின்னர் பாத்திய முதலிய பாத்திரங்களை விந்துத்தானம் வரை தூக்கி விந்துத்தானத்திலிருந்தும் பெருகும் அமிருததாரைமயமாயிருக்கிற கங்கை முதலிய எல்லாத் தீர்த்தஜலத்தாலும் நிரம்பப் பெற்றவையாகப் பாவித்து யந்திரங்களின்மேல் தாபிக்க வேண்டும்.
அல்லது விந்துத்தானத்திலிருந்து அங்குசமுத்திரையால் திவ்வியமான அமிருத சொரூபமாயிருக்கும் கங்கை முதலிய தீர்த்தத்தை இழுத்துச் சாங்காரமுத்திரையால் அத்தீர்த்தத்தையெடுத்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தை உச்சரித்து உத்பவமுத்திரையால் யந்திரங்களின் மத்தியிலிருக்கும் பாத்திய முதலிய பாத்திரங்களில் விட வேண்டும். பின்னர் விசேஷார்க்கிய ஜலத்தில் சிவன், ஆசனமூர்த்தி, பஞ்சப்பிரம்ம மந்திரங்கள், வித்தியாதேகம், நேத்திரமந்திரம், மூலமந்திரம், அங்கமந்திர மென்னுமிவற்றை நியாசஞ் செய்து மூலமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு கந்தம், புஷ்பம், அக்ஷதைகளால் பூஜித்து; பஞ்சப் பிரம்ம மந்திரம், அங்கமந்திரம், மூலமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்யவேண்டும். மேலே கூறியவாறு நியாசம் பூசைகளைச் செய்யாமலும் பஞ்சப்பிரம்ம மந்திரம், அங்கமந்திரம், மூலமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்யலாம்.
நிரோதார்க்கிய ஜலத்தைப் பஞ்சப்பிரம்ம மந்திரங்களாலும், பராங்முகார்க்கிய ஜலத்தை அங்கமந்திரங்களாலும், சாமான்னியார்க்கிய ஜலத்தை அஸ்திரமந்திரத்தாலும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.
பாத்தியம் ஆசமனங்களைப் பஞ்சப்பிரம்ம மந்திரங்களாலாவது, அல்லது அங்கமந்திரங்களாலாவது, அஸ்திரமந்திரத்தாலாவது அபிமந்திரணஞ் செய்யலாம்.
பின்னர் அஸ்திரமந்திரத்தால் திக்குபந்தனஞ் செய்துகொண்டு கவசத்தால் அவகுண்டனஞ் செய்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சத்திமந்திரத்தால் தேனுமுத்திரை காட்டி அமிருதீகரணஞ் செய்யவேண்டும். பாத்தியமுதல் பராங்முகார்க்கியம் வரையும் முக்காலியை வைப்பதுமுதல் அமிருதீகரணம் வரையுமுள்ள ஒவ்வொன்றும் தனித்தனியாகவாவது அந்தந்தச் சமயத்தை அனுசா¤த்துச் சேர்த்தாவது செய்யப்படல் வேண்டும்.
பின்னர் பராங்முகார்க்கியத்தின் சமீபத்தில் சங்கிற்குப் பூஜை செய்ய வேண்டும். ஒருபடி ஜலம் கொள்ளும்படியாயும், அரைப்படி ஜலங்கொள்ளும்படியாயும், ஒரு உழக்கு ஜலம் கொள்ளும்படியாயும் உள்ள சங்குகள் உத்தமம், மத்திமம், அதமமென்னும் பேதத்தால் முத்திறப்படும். அவ்வாறே அடியும் முடியும் சமமாயுள்ள சங்கு ஆண் சொரூபமாயும், பின்பக்கம் பருத்திருப்பது பெண் சொரூபமாயும், நுனிபருத்திருப்பது அலிரூபமாயும் அறியப்படும்.
சங்கார்க்கியத்தின் அடியில் பூமியும், வளையத்தில் சூரியனும் வயிற்றில் விஷ்ணுவும், இருபக்கத்தில் சந்திரனும், தாரையில்அகோரமூர்த்தியும், முகத்தில் ஏழுதீர்த்தங்களும் இருக்கின்றன. ஆயினும், சங்கத்தின் அடிமுடிகளின் வெளிப்பங்கங்கள் எலும்புகள் போல் அசுத்தமாதலின், அவை சுவர்ணத்தினாலும் இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்படல் வேண்டும். இத்தகைய சங்கைச் சாம்பலினால் தேய்த்து அஸ்திரமந்திரத்தால் கழுவி பூசிக்கப்பட்ட முக்காலியில் வைத்து விசேஷார்க்கிய ஜலம்போல் பூஜைசெய்து தன்னுடைய சிரசில் அந்த ஜலத்தால் மூன்றுமுறை புரோக்ஷித்துக் கொள்ளல் வேண்டும்.
இவ்வாறு அநேகம் பாத்திரங்களைச் சம்பாதித்து அவற்றைப் பூஜை செய்ய முடியவில்லையாயின், நிரோதார்க்கியம் பராங்முகார்க்கியங்களை நிரோதாக்கிய ஜலத்தினாலேயே பூஜைசெய்யவேண்டும். விசேஷார்க்கிய ஜலத்தாலும் மூன்று அர்க்கிய பாத்திரங்களையும் பூசிக்கலாம்.
இவ்வாறு பாத்தியம் ஆசமனமென்னும் இரண்டனையும் விசேஷார்க்கியத்தாலேயே செய்யலாம். விசேஷார்க்கியத்திற்கும் வேறு பாத்திரம் கிடையாவிடில் சங்கின் ஜலத்தினால்லேயே பாத்தியம், ஆசமனம், விசேஷார்க்கியம், நிரோதார்க்கியம், பராங்முகார்க்கியம் என்னும் இவற்றைப் பூசிக்கலாம். சாமான்னியார்க்கியத்தை மாத்திரம் ஆவரண தேவதைகளின் பொருட்டு வேறு பாத்திரத்திற் பூசிக்க வேண்டும்.
இவ்வாறு பாத்திரங்களைச் சுருக்கிப் பூசிக்கக்கூடிய முறையில் எதன் ஜலத்தால் வேறு உபசாரம் செய்யப்படுகின்றதோ, அந்தப் பாத்திரத்தையே எடுத்துக்கொண்டு அதனுடைய சமஸ்காரங்களைச் செய்ய வேண்டும். பிறிதொன்றின் சமஸ்காரமும் **பரிதியில் யூபதருமம் போல் விரோதமின்றிச் செய்யப்படல் வேண்டும்.
( ** பதிரி என்பது யாகமேடை. யூபமென்பது யாகப்பசுவைக்கட்டும் தறி. இந்தத் தறிவை ஆடையால் முழுதும் மூடவேண்டும். இந்தத் தறியைத் தொட்டுக்கொண்டு கானஞ் செய்ய வேண்டும்மென்றவிடத்து ஒன்றுக்கொன்று முரணாதவாறு தொடுவதற்கான இடத்தை மாத்திரம் விலக்கி ஏனைய இடங்களை ஆடையால் மூடவேண்டுமென்று பொருள் கொள்ளல் வேண்டும். அவ்வாறே இவ்விடத்தில் ஒவ்வொரு அர்க்கியஜலமும் தத்தம் காரியங்களுக்காக ஏற்பட்டாலும் சுருக்கிச் செய்யும் முறையில் ஒரு பாத்திரத்தில் வேறு சமஸ்காரத்தைச் செய்யும்பொழுது அதற்குரிய பாகம் அதிலிருக்கின்றது என்தாம்.)
விசுவம், அயநம், கிரகணங்களில் சுருக்கிச் செய்யும் முறையைக் கொள்ளாது தனித்தனி செய்யும் விரிவான முறையைக் கொள்ள வேண்டும்.
பாத்திரமுதலியவற்றின் பூசை முடிந்தது.