॥ சிவார்ச்சனா சந்திரிகை – சிவபூஜையின் விரி- ஆசமனம் ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:
சிவபூஜையின் விரி
ஆசமனம்
ஹீம் சிரசே நம: என்று சொல்லிக்கொண்டு முழங்கால்வரை கால்களையும் மணிக்கட்டுவரை கைகளையுஞ் சுத்தஞ் செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாகக் குக்குடாசனத்திலிருந்து கொண்டு இருகைகளையும் முழங்கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு இருகைகளிலுள்ள கட்டைவிரல் முதலிய விரல்களில் ஹாம்ஹிருதய யாயநம: ஹீம் சிரசேநம: ஹ¨ம் சிகாயைநம: ஹைம் கவசாயநம: ஹெளம் நேத்திரத்திரயாய நம: ஹ: அஸ்திராயபட் என்று நியாசஞ்செய்து கொண்டு, வலதுகையைப் பசுவின் காதுபோல் செய்து அதனால் உழுந்து அமிழ்ந்துமளவான நீரையெடுத்து அந்த நீரைப்பார்த்துக் கட்டைவிரல் சுண்டுவிரல்களை நீக்கிச் சுக்கிலபக்ஷமாயின் சந்திரரூபமாயும், கிருஷ்ணபக்ஷமாயின் சூரிய ரூபமாயும் அந்த நீரைப் பாவனை செய்து உட்கொண்டு, அதனால் நாக்கின் நுனியிலிருக்கும் சரஸ்வதி திருப்தி யடைந்தவளாகவும், தன்னுடைய சூக்கும தேகம் சுத்தியடையந்ததாகவும் பாவனை செய்து, ஒவ்வொரு ஆசமனத்துக்கும் இடையே கையைச் சுத்தி செய்து சுவதா என்னும் பதத்தை இறுதியிலுள்ள மூலமந்திரத்தை உச்சரித்து பிரமதீர்த்தத்தால் மூன்று முறை ஆசமனஞ் செய்யவேண்டும். அதனால் தன்னுடைய முகம் சுத்தியடைந்ததாகவும், உதட்டிலிருக்கின்ற பிரணவதேவதை சுத்தியடைந்ததாகவும் பாவனை செய்துகொண்டு பின்னர்க் கட்டைவிரலின் அடியால் உதடுகளை இருமுறை துடைத்தல் வேண்டும்.