Sivarchana Chandrikai – Ainthaavathu Aavarana Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஐந்தாவது ஆவரண பூசை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
ஐந்தாவது ஆவரண பூசை

பின்னர் ஐந்தாவது ஆவரணத்தில் உலகபாலகர்களுடைய ஆயுதங்களை அருச்சிக்கும் முறை வருமாறு:-

பிரசன்னாத்ம சக்தி சகிதாய வச்சிராய நம: பலவித வருணங்களையுடையதும், திடமாயும் கடினமாயுமுள்ள வடிவத்தையுடையதும், வச்சிரத்தைச் சிரசில் உடையதும், பிரகாசத்தையுடையதும், பிரசன்னை என்னும் தனது சத்தியுடன் கூடினதுமான வச்சித்தைப் பூசிக்கின்றேன்.

சக்தயே நம: செம்மை வருணமுடையதும், வரம் அபயமென்னுமிவற்றைக் கையிலுடையதும், சத்தியைச் சிரசில் தரித்திருப்பதும், பெண்வடிவத்தையுடையதுமான சத்தியைப் பூசிக்கின்றேன்.

கோபாத்மசக்திசகிதாய தண்டாய நம: கருமை நிறத்தையுடையதும், வரம் அபயமென்னு மிவற்றைக்கையில் உடையதும், செம்மையான கண்களையுடையதும், சிரசில் தண்டத்தை யுடையதும், கோபையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான தண்டத்தை பூசிக்கின்றேன்.

குணாத்மசக்தி சகிதாய கட்காய நம: கருமை வருணத்தை யுடையதும், பரம் அபயமென்னும் இவற்றைக் கையிலுடையதும், கோபக்கண்ணையுடையதும், கட்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிரசையுடையதும், குணையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான கட்கத்தைப் பூசிக்கின்றேன்.

கோமளாத்மசக்தி சகிதாய பாசாய நம: பலாசம்பூவின் நிறத்தையுடையதும், நாபிக்குக் கீழ் பாம்பின்வடிவமும் நாபிக்கு மேல் புருடவடிவமும் உடையதும், ஏழு படங்களுடன் கூடிய சிரசையுடையதும், கோமளையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான பாசத்தைப் பூசிக்கின்றேன்.

விஷாத்மசக்தி சகிதாய துவஜாய நம: பொன்மை நிறமடையதும், வரம் அபயமென்னுமிவற்றைக் கையில் உடையதும், பிளந்த வாயையுடையதும், சிரசில் துவஜத்தையுடையதும், விஷையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான துவஜத்தைப் பூஜிக்கின்றேன்.

கதாயை நம: பொன்மை நிறமுடையதும், பெண்வடிவம்போல் வடிவத்தையுடையதும், சிரசில் கதையையுடையதுமான கதையைப் பூசிக்கின்றேன்.

See Also  Jabala Upanishad In Tamil

விகிருதாத்மசக்தி சகதாய சூலாய நம: கருமை நிறமுடையதும், திரிசூலத்தாலடையாளஞ் செய்யப்பட்ட சிரசையுடையது அஞ்சலியையுடையதும், விகிருதை யென்னும் தனது சத்தியை யுடையதுமான திரிசூலத்தைப் பூசிக்கின்றேன்.

மகாத்மசக்தி சகிதாய பத்மாய நம: சங்கத்தின் நிறம்போல் நிறத்தையுடையதும், சிரசில் தாமரைமொட்டையுடையதும், மகதி யென்னும் சத்தியுடன் கூடினதமான பத்மத்தைப் பூசிக்கின்றேன்.

மங்களாத்ம சக்தி சகிதாய சக்ராய நம: கருமை நிறத்தையுடையதும், நூறு ஆரைக்கால்களுடன் கூடிய சக்ரத்தால் அடையாளஞ் செய்யப்பட்ட சிரசையுடையதும், மங்களை யென்னும் தனது சக்கியுடன் கூடினதுமான சக்கரத்தைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு பூசிக்க வேண்டும்.

இந்த எல்லா ஆவரண தேவர்களையும் தியானஞ் செய்யும் பொழுது சிவனுக்கு எதிர்முகமாக இருப்பவர்களாயும், சிவனையும் அம்பிகையையும் பக்தியினால் பார்த்துக்கொண்டு இருப்பவர்களாகவும், தத்தம் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களாவும் தியானிக்க வேண்டும்.

அல்லது இரண்டு கைகளையும் நான்கு கைகளையும் உடையவர்களாகவும், அஞ்சலிபந்தனம் செய்து கொண்டு இருப்பவர்களாகவுமாவது தியானிக்க வேண்டும்.

இவ்வாறு பஞ்சாவரண பூசை செய்யச் சக்தியில்லையாயின், பஞ்சப்பிரம்ம சடங்கரூபமான ஒரு ஆவரணதேவர்களின் பூசையே போதுமானது. அந்தப் பஞ்சப்பிரம்ம சடங்கதேவர்களுக்கு ஆவாகனம், ஸ்தாபனம், சன்னிதானம், சன்னிரோதனம், பாத்தியம், ஆசமனம், அருக்கியம், புஷ்பம் சமர்ப்பித்தல் என்னும் எட்டுச் சமஸ்காரங்கள் செய்யப்படல் வேண்டும்.

அல்லது ஆவாகன முதலிய எட்டுச் சமஸ்காரங்களையும் ஒர சேரப்பாவனை செய்து, அருக்கியத்தை மாத்திரம் தனித்தனி கொடுத்துக் கிரியையைப் பூர்த்திசெய்து வைப்பதற்காகப் பஞ்சப் பிரமங்களுக்கு அந்த அந்த அருக்கியத்தின் முடிவில் முறையே, சுரபி, தாமரை, திரிசூலம், மகரம், சுருக்கு என்னும் முத்திரைகளைக்காட்டி அங்கங்களுக்கு நமஸ்கார முத்திரையைக் காட்ட வேண்டும்.

See Also  Kaligenide Naaku In Telugu

பஞ்சப்பிரமங்களையும் சடங்கங்களையும் பூசைசெய்யச் சத்தியில்லையாயின், தனிமையாகப் பஞ்சப் பிரமங்களை மாத்திரமாவது, அங்கங்களை மாத்திரமாவது பூசிக்க வேண்டும்.

அல்லது அந்த அந்தத்தானத்தில் வாமை முதலிய சக்திகளைக் கிழக்கு முதலிய திக்குக்களில் அருச்சித்து, சதாசிவருடைய மடியில் இடது பக்கத்திலிருக்கும் மனோன்மனியையும் இருச்சிக்க வேண்டும்.

இவ்வாறு ஆவரணபூசை செய்தபின்னர், சிவனை அஷ்டபுஷ்பத்தாலருச்சித்து, ஆசமனம் அருக்கியங்ளைக் கொடுத்து, மூலமந்திரத்தால் புஷ்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சிவனுக்கு ஆவரண தேவதைகள் இருத்தலால் உண்டாம் சோபை சித்திப்பதின் பொருட்டுப் பஞ்சப்பிரம்ம சடங்கங்களைச் சிவனிலும் வேறாகப் பாவித்து அருச்சித்தலாலுண்டான பூசையின் தாமததோஷத்தைப் போக்குதற்பொருட்டு, சரற்காலத்திலுண்டான அனேககோடி சந்திரர்களுக்குச் சமானமாயும், அமிர்தத்தைப் பெருக்குகின்ற தாயுமிருக்கின்ற பரமசிவனுடைய கிரணக் கூட்டங்களில் மூழ்கியிருத்தலால், எல்லா ஆவரண தேவர்களையும் பரமசிவனுடைய வர்ணத்தை யடைந்தவர்களாயும், பரமசிவனிலும் வேறாக இல்லாதவர்களாயும் பாவிக்க வேண்டும்.

பின்னர் சிவனிடத்தில், தேனுமுத்திரையையும் மகாமுத்திரையையுங் காட்டி, கந்தம் புஷ்பங்களைக் கொண்டு அஸ்திரமந்திரத்தால் மணியையருச்சித்து, ஆவரண தேவர்களுடன் கூடினவரான பரமசிவனுக்குத் தூபதீபங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சில ஆகமங்களில் ஆன்மார்த்த பூசையில் போகாங்க பூசை செய்யக் கூடாதென்று விலக்கப்பட்டிருக்கின்றமையால் இவ்விடத்துக் கூறியவாறு ஆவரண பூசையைச் செய்தலும் கூடும்; செய்யாது விடுதலும் கூடும்.