॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
ஆரத்தி சமார்ப்பிக்கும் முறை
சுவர்ணம் வெள்ளி செம்பு வெண்கலமென்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்யப்பட்டதாயும், இருபத்துநான்கு அங்குல அளவுள்ளதாயும், அல்லது அதற்குப் பாதியளவுள்ள தாயும், குறித்த அளவில் மூனறிலொரு பங்கு அளவுள்ளதும், ஐந்திலொரு பங்கு உயரமுடையதும், இரண்டு வால் நெல்லளவு உயரமுடைய பட்டிகையையுடையதுமான கர்ணிகையினால் சோபிக்கப்பட்டதாயும், அந்தக் கர்ணிகைக்கு வெளியில் எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு பக்கங்களிலும் கர்ணிகை அளவான ஓஷ்டத்துடன் கூடினதாயும், நன்றாய் வட்டமான வடிவத்தையுடையதாயுமுள்ள பாத்திரத்தில், கர்ணிகையில் நடுவிலும் நான்கு பக்கங்களிலும் மாவினாலாவது இயல்பாகவாவது செய்யப்பட்ட தீபாசனங்களில் கருப்பூரம் முதலியவற்றாலாகிய திரியை வைத்து, ஒன்பது அல்லது ஐந்து தீபங்களும் அல்லது நடுவில் ஒரு தீபமும் ஏற்றி முக்காலியில் வைத்து, நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்தி செய்து, ஒன்பது தீபங்கள் ஏற்றியிருப்பின் நடுவில் சூரியனையும், நான்குதிக்குக்களில் குரு சுக்கிரன் புதன் சந்திரனென்னுமிவர்களையும், உபதிக்குக்களில் செவ்வாய் சனி இராகு கேது என்னுமிவர்களையும் ஐந்து தீபங்கள் ஏற்றியிருப்பின் நடுவில் அக்கினியையும், நான்கு திக்குக்களில் ஆகாசம் வாயு ஜலம் பிருதுவி யென்னுமிவற்றையும், ஒரு தீபம் ஏற்றியிருப்பின் அக்கினியையும் அருச்சிக்க வேண்டும்.
அல்லது ஒன்பது ஐந்து ஒன்று ஆகிய தீபங்களில் முறையே வாமை முதலிய ஒன்பது சத்திகளையும் பஞ்சப்பிரமமந்திரர்களையும் சிவனையும் அருச்சிக்க வேண்டும்.
இவ்வாறு சந்தனம் புஷ்பம் தூபம் தீபமென்னுமிவைகளால் அருச்சித்து அஸ்திர மந்திரத்தால் திக்குபந்தனம் செய்து தேனுமுத்திரை காட்டி இருகைகளாலும் எடுத்து ஈசுவரனுடைய சிரசு இருதயம் பாதமென்னுமிவைகளில் மூன்று முறை சுற்றிப் பூமியில் வைக்க வேண்டும்.